Published : 05 Jan 2015 02:53 PM
Last Updated : 05 Jan 2015 02:53 PM

முதல் செலவு: காலம் கடந்த முதலீட்டு முறை

என்னிடம் நிதி ஆலோசனை கேட்க வருபவர்கள் அடிக்கடிக் கேட்கும் கேள்விகள் இரண்டு - முதல் கேள்வி, ‘என்ன சார், இப்பொ மார்க்கெட் இருக்கற நிலைமைல இன்வெஸ்ட் பண்ணலாமா?’; இரண்டாவது கேள்வி, ‘இன்றைய தேதியில் எங்க சார் இன்வெஸ்ட் பண்ணலாம்?’. இரண்டிற்குமே ஆதாரமான விஷயம் ஒன்றுதான் - இன்றைய நிலவரம் என்ன என்ற காலம் குறித்த கேள்வி.

பங்குச்சந்தை பொழுதுபோக்கோ விளையாட்டோ அல்ல

ஏன் இத்தகைய கேள்விகள் எழுகின்றன? இந்த நாள் நல்ல நாளா, இன்று எதில் முதலீடு செய்யலாம் என்றெல்லாம் தெரிந்து கொள்வதில் என்ன ஆர்வம்? இந்தக் கேள்விகளைக் கேட்டவர்களிடம் நிறைய பேசி இந்தக் காரணங்களைத் தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். நான் கண்டு கொண்ட வரை முதலீடு செய்வது என்பதை ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்காகப் பார்ப்பதுதான் இத்தகைய கேள்விகளைத் தூண்டும் முதல் காரணம்.

இன்னொரு காரணம், குறுகிய காலத்தில் சட்டென்று லாபம் பார்த்து பணத்தை எடுத்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கை. இவை இரண்டுமே போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சிகள். நீண்ட கால நிதி வளத்தினை அபாயத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாக்குபவை.

இதே நபர்களிடம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் முக்கியத்துவம் பற்றிப் பேசினால், உரையாடல் திசை மாறி விடும்.

நெடுங்கால முதலீடுகள் என்று வரும் பொழுது அவர்கள் மனதில் சந்தைப் பொருளாதாரம் மற்றும் முதலீடுகள் குறித்த அச்சங்களே பிரதானமாக எழுகின்றன. ‘அதெல்லாம் ரிஸ்க், சார்’ என்று நழுவி விடுவார்கள்.

நீண்ட கால முதலீடுகள் நஷ்டமடைவதும் அபூர்வம்

இதிலிருக்கும் முரண்நகை உண்மையில் வேதனைக்குரியது. ‘அஞ்சுதல் அஞ்சாமை பேதமை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நம்மில் பலர் எது குறித்து அச்சப்பட வேண்டுமோ அதை விளையாட்டாகவும், எதில் நம்பிக்கை வைக்க வேண்டுமோ அதை அச்சத்தோடும் அணுகுகிறார்கள்.

பங்குச்சந்தை குறித்து நன்கு அறிந்தவர்களுக்குத் தெரிந்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது இதுதான் - சந்தையில் குறுகிய கால முதலீடுகள் லாபம் பார்ப்பது அபூர்வம்; நீண்ட கால முதலீடுகள் நஷ்டமடைவதும் அபூர்வம்.

சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்ய நாம் மூன்று குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் - பொறுமை, நிதானம், விடாமுயற்சி.

நிதி நிர்வாகம் என்பது தொலை நோக்கோடு செய்யப்பட வேண்டும் என்ற புரிதல் கொடுக்கும் பொறுமை; சந்தையில் ஏற்ற தாழ்வுகள் என்பது சகஜம் என்பதால் இன்றைய நிலை குறித்த அதீத அக்கறையோ கவலையோ தேவையில்லை என்பதை உணர்ந்த நிதானம்; முதலீடு செய்தல் என்பது அவ்வப்போது செய்யும் ஒரு விஷயம் இல்லை, அது ஒரு வாழ்க்கைப் பழக்கம் என்று தெரிந்து தெளிவதால் வரும் விடாமுயற்சி.

பல் தேய்ப்பதற்கு நல்ல நாள் உண்டா?

இதில் இருக்கும் கடைசி அம்சம் - விடாமுயற்சி - மிகவும் முக்கியமானது. முதலீடு செய்வது என்பது ஒரு பழக்கமாக உருவாக வேண்டும். உதாரணத்திற்கு, நாம் பல் தேய்ப்பதைப் பற்றி இப்படிக் கேள்விகள் கேட்போமா? ‘பல் தேய்ப்பதற்கு இன்று நல்ல நாளா?’, அல்லது ‘இன்று செவ்வாய் கிழமை, இன்று எந்த பற்பசை உபயோகிக்கலாம்’ என்றெல்லாம் கேட்க மாட்டோம் அல்லவா? காலை எழுந்ததும் ஒரு நல்ல பற்பசை கொண்டு பல் துலக்க வேண்டும் என்பது ஒரு பழக்கமாக இருப்பது போல், ஒரு நல்ல முதலீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதும் ஒரு பழக்கமாக மாற வேண்டும்.

மாதாந்திர முதலீட்டு முறை

இந்த மூன்று குணங்களையும் கைகொள்ள, கடைபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா? இந்த அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முதலீட்டு முறை உள்ளதா? உள்ளது, அது தான் சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் என்னும் மாதாந்திர முதலீட்டு முறை. ஒரு முதலீட்டுத் திட்டத்தில் (அல்லது சில திட்டங்கள் அடங்கிய ஒரு தொகுப்பில்) மாதா மாதம் ஒரு தொகையை தொடர்ந்து முதலீடு செய்வதே அது. இந்த முறை ஒரு முதலீட்டாளருக்கு வசதியானது மட்டுமல்ல (வருமானத்தைப் போலவே இதுவும் மாதாந்திரமாக நடக்கும்), ஏறி இறங்கும் சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்வதற்கு இது ஏற்றதொரு முறையும் கூட. இது போன்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து விட்டு அது பாட்டிற்கு நடக்கட்டும் என்று விட்டு விடுவதால், இது நீண்ட காலம் விடாமல் முதலீடு செய்வதற்கும் வழி வகுக்கிறது.

இத்தகைய மாதாந்திர முதலீட்டுத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பிரமாதமாக வளத்தினைப் பெருக்க உதவுகிறது - உதாரணத்திற்கு ஹெச்டிஎஃசி (HDFC) ஈக்விடி என்னும் புகழ் பெற்ற ஒரு திட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகள் மாதாமாதம் தொடர்ந்து ரூ 5000 முதலீடு செய்து வந்திருந்தால், உங்கள் மொத்த முதலீடு ஏழு லட்சத்து இருபதாயிரம் ரூபாயாகவும், உங்கள் முதலீட்டின் இன்றைய மதிப்பு முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரம் ரூபாயாகவும் இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இருபத்தி மூன்று சதவிகிதம் வட்டிக்குச் சமானம். எந்த ஒரு வைப்புநிதியும் வங்கிக்கணக்கும் இத்தகைய ஒரு வட்டி விகிதத்தின் அருகே கூட வர முடியாது.

பொறுமைசாலிகளுக்கு மட்டுமே செல்வம்

உலகளவில் முதலீட்டாளர்கள் பீஷ்ம பிதாமகராகக் கருதும் வாரன் பஃபெட் சொன்ன ஒரு வாக்கியம் நாம் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று - ‘பங்குச் சந்தை என்பது பொறுமையற்றவர்களிடமிருந்து பொறுமைசாலிகளுக்கு செல்வத்தை அனுதினம் அனுப்பிக் கொண் டிருக்கிறது’ என்றார்.

பொறுமை, நிதானம், விடாமுயற்சி - இந்த மூன்று குணங்களும் வெற்றி கரமான முதலீட்டாளர்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

இந்த மூன்று குணங்களை உள்ளடக்கிய மாதாந்திர முதலீட்டு முறையைப் பயன்படுத்தத் தொடங் குவது அந்த வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல் படி.

நம்மில் பலர் எது குறித்து அச்சப்பட வேண்டுமோ அதை விளையாட்டாகவும், எதில் நம்பிக்கை வைக்க வேண்டுமோ அதை அச்சத்தோடும் அணுகுகிறார்கள். பங்குச்சந்தை குறித்து நன்கு அறிந்தவர்களுக்குத் தெரிந்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது இதுதான் - சந்தையில் குறுகிய கால முதலீடுகள் லாபம் பார்ப்பது அபூர்வம்; நீண்ட கால முதலீடுகள் நஷ்டமடைவதும் அபூர்வம்.

ஸ்ரீகாந்த் மீனாட்சி

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x