

நம்முடைய குறைகளை நாம் நன்கு அறிந்திருந்தாலும் இன்னொருவர், அதுவும் வெளியூரிலிருந்து வந்த ஒருவர், அதைச் சொல்லிக் காட்டும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பெரிய பரஸ்பர நிதி நிறுவனம் தனது ஆண்டு விழாவை சென்னையில் கொண்டாடியது. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் ஆடம்பரமான அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதிலுமிருந்து நிதி ஆலோசகர்கள் திரண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சியின் ஒரு தருணத்தில் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அவர்களது கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
அத்திட்டங்களின் மேன்மைகளைப் பற்றியெல்லாம் சொல்லி விட்டு, கடைசியாக, ‘நீங்கள் எல்லாம் சென்னை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதிகளில்தாம் வங்கி வைப்பு நிதிகள் இந்தியாவிலேயே மிக அதிகம் வாங்கப்படுகின்றன. ஆதலால், கடன் பத்திரம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரைப்பது இங்கே உங்களுக்கு சுலபமாகவே இருக்கும்’ என்றார்.
விற்பனை ரீதியில் ஒரு சாதகமான விஷயத்தை சொல்லும் முறையில் தான் அவர் இதைச் சொன்னார் என்றாலும், அவர் சொன்ன விஷயத்தின் உள்ளிருந்த கருத்து எனக்கும் மற்ற ஆலோசகர்களுக்கும் சுருக்கென்று உறைத்தது.
உண்மைதான். இந்தியாவில், வைப்பு நிதிகள் மிக அதிகம் விரும்பப்படும் பகுதி என்றால் அது தென்னகம், குறிப்பாக தமிழகம் தான். மாறாக, பங்குச் சந்தை முதலீடுகள் மிக அதிகம் விற்பனையாகும் பகுதி என்றால் அது மும்பை மற்றும் மேற்குப் பகுதிகள் (மகாராஷ்டிரம், குஜராத்) தான். இந்திய பங்குச் சந்தை முதலீடுகளில் 60 சதவீதத்துக்கு மேலாக இவ்விரு மாநிலங்களில் தாம் உள்ளன.
பண்பாட்டு ரீதியாக நிலவும் கருத்தோட்டத்திலும் பொருந்தி வருவது தாம் இந்தப் புள்ளி விவரங்கள். அதாவது தென்னகத்தவர்களும் தமிழர்களும் கன்ஸெர்வேடிவ் மனநிலை உள்ளவர்கள், மாற்றங் களை, புதிய முறைகளை ஏற்கத் தயங்குபவர்கள்; பாதுகாப்பான வழிகளையே நாடுபவர்கள் என்ற பொது புத்தி சார்ந்த கருத்தாடல்களே நமது நிதி நிர்வாக முறைகளிலும் வெளிப்படுகின்றன.
ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இது போன்ற முறைகள் நமது நிதி வளத்திற்கு சேதம் விளைவிப்பவையே ஆகும். அதாவது எதை நாம் பாதுகாப்பானது என்றும் நம்பக்கூடியது என்றும் கருதுகிறோமோ அதுவே நமது பணத்தினை தேய்மானத்திற்கும் மதிப்பு குறைவிற்கும் உள்ளாக்குகின்றன.
இது எப்படி சாத்தியம்? வங்கிகளிலும் சரி, மற்ற நிறுவனங்களும் சரி, வைப்பு நிதிகளுக்கு உத்தரவாதமான வட்டி விகிதங்கள் தருகின்றனவே? நாம் கொடுக்கும் பணத்திற்கு அதிகமாகத் தானே நமக்குத் திரும்பி வருகின்றது? இது எப்படி நிதித் தேய்மானத்தினை உருவாக்கும்?
இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய உவமை - ஒருவர் ஒரு குழியை வெட்டிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பணி அந்தக் குழியை மூடுவது. அவர் தோண்டத் தோண்ட நீங்கள் குழியை நிரப்பிக் கொண்டே இருக்கிறீர்கள். கடைசியில் எஞ்சுவது குழியா, சம நிலமா, மேடா? இதை நிர்ணயிப்பது என்ன? யார் அதிக வேகத்தோடு வேலை செய்கிறார்கள் என்பதே அல்லவா? தோண்டுபவரின் வேகத்துக்கு நிரப்பும் உங்களால் ஈடு கொடுக்க முடிந்தால் சரி, இல்லையேல்? எஞ்சுவது குழி தானே?
அது போலத் தான் நிதி நிர்வாகமும். பணவீக்கம் என்பது உங்கள் நிதி வளத்தில் குழி பறித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் பணத்தினை தேய்மானத்திற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கிறது. ஒரு கால கட்டத்திற்குப் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு என்பது அதை எப்படிப் பராமரித்தீர்கள் அல்லது முதலீடு செய்தீர்கள் என்பதில்தான் உள்ளது. பணவீக்கத்தின் வேகத்தை விட உங்கள் முதலீட்டு வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதில்தான் உங்கள் நிதி வளத்தின் வளர்ச்சி இருக்கிறது.
உதாரணமாக, கடந்த மூன்று வருடங்களை எடுத்துக் கொள்வோம். இந்த கால கட்டத்தில், பணவீக்கம் என்பது சராசரியாக 9.7 சதவீதமாக இருந்தது. அதாவது, மூன்று வருடங்களூக்கு முன்பு உங்களிடம் ரூ 10,000 இருந்து, அதை பீரோவில் பூட்டி வைத்திருந்தால், அதன் மதிப்பு இன்று Rs. 7,575 தான்.
அதையே நீங்கள் ஒரு வைப்பு நிதியில் போட்டு வைத்திருந்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு உங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய வட்டி விகிதம் சராசரியாக 9 சதவீதம். நீங்கள் ஒரு மத்திய வர்க்க முதலீட்டாளராக இருந்து உங்கள் வருமான வரி விகிதம் 20 சதவீதம் என்று கொண்டால் கூட, வரி பிடித்தம் போக உங்களுக்கு எஞ்சியிருப்பது 7.2 சதவீதம்தான்.
மூன்று வருடத்தில் உங்கள் கையில் ரூ 12,450 வரும். ஆனால் பணவீக்கம் போக அதன் மதிப்பென்னவோ ரூ 9,811 தான். அதாவது வளர்ச்சிக்கு பதில் தேய்மானம். இன்னொரு வகையில் பார்த்தால், பணவீக்கத்திற்கு நிகராக வளர வேண்டுமானால் உங்கள் முதலீடு ரூ13,201 ஆக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதன் வளர்ச்சி என்னவோ ரூ.12,450 தான்.
இதனால் தான் முதலீட்டு முறைகளை ஒப்பிடுகையில் ‘நிஜ வளர்ச்சி' (real returns) என்ற பதத்தைப் பலர் பயன்படுத்துகிறார்கள். பணவீக் கத்துக்கு மிகுதியாக எவ்வளவு வளர்கிறது என்பதே கவனிக்க வேண்டிய வளர்ச்சிக் குறியீடு. இந்த வகையில் பார்த்தால், வைப்பு நிதிகள் மிகப்பல சமயங்களில் தோற்றுக் கொண்டுதான் இருக்கும். அதாவது ‘நெகடிவ்' நிஜ வளர்ச்சியே கொடுக்கும்.
நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டு முறைகளே நம்பக்கூடிய வகையில் நிஜ வளர்ச்சி தருபவை. அவற்றில் இருக்கும் ‘ரிஸ்க்'கினைப் புரிந்து கொண்டு தெளிவாக முதலீடு செய்வதே நமது நிதி வளத்திற்கு நல்லது.
நமது பண்பாடு மற்றும் சிந்தனை முறைகளில் சிறப்பான விஷயங்கள் பல உள்ளன. ஆனால், நிதி நிர்வாகத்தில் சதா சர்வ காலம் பாதுகாப்பான சிந்தனையோடு இருப்பது என்பது அவற்றில் ஒன்று இல்லை.
‘கரைகளில் ஒதுங்கி இருக்கும் கப்பல்கள் பாதுகாப்பாகவே இருக்கும்; ஆனால் கப்பல்கள் ஒதுங்கி இருப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அது போலத்தான் பணமும். புழங்குவதற்காக உருவாக்கப்பட்டது அது; முடங்குவதற்காக அல்ல.
உங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு என்பது அதை எப்படிப் பராமரித்தீர்கள் அல்லது முதலீடு செய்தீர்கள் என்பதில்தான் உள்ளது. பணவீக்கத்தின் வேகத்தை விட உங்கள் முதலீட்டு வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதில்தான் உங்கள் நிதி வளத்தின் வளர்ச்சி இருக்கிறது.
ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com