Published : 29 Dec 2014 12:17 PM
Last Updated : 29 Dec 2014 12:17 PM

நவீன அலாவுதீன் விளக்கு!

இந்து நாளிதழில் இன்று தலைப்புச் செய்தி என்ன?

லிங்கா கலெக்‌ஷன் எவ்வளவு?

தமிழ்நாட்டில் ஒழுகினசேரி கிராமம் எங்கே இருக்கிறது?

மாவீரன் நெப்போலியன் பிறந்த நாள் எது?

விதவிதமான கேள்விகள். உடனே பதில் தெரிய வேண்டுமா? ஒரே வழி. கூகுள் கிளாஸை அணிந்துகொள்ளுங்கள். (அப்படியே அணியலாம். அல்லது நீங்கள் ஏற்கெனவே கண்ணாடி அணிபவராக இருந்தால், அதன்மேல் கூகுள் கிளாஸைப் பொருத்திக்கொள்ளலாம்,.

பொருத்திக்கொண்டு விட்டீர்களா? ”ஓகே கிளாஸ்” என்று சொல்லி, ஃபிரேமில் லேசாகத் தட்டுங்கள். கண்ணாடியின் வலதுபுறத்தின் மேல் மூலையில் சுமார் 3/4x1/2 x 1/2 அங்குல அளவில் ஒரு பிளாஸ்டிக் பாகம் இருக்கிறது. இதுதான் டிஸ்ப்ளே யூனிட் (Display Unit). பார்க்கும் பொருட்களின் பிம்பங்களைக் கண்களின் விழித்திரையில் விழ வைக்குமாறு இந்த யூனிட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் வழியாகப் பார்த்தால் 25 அங்குல சைஸில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் தெரியும், அதில், google, take a picture, record a video, get directions to, send a message to…. என்னும் ஐந்து அறிவிப்புகள் வரும். இவற்றுள், உங்கள் தேவை எதுவோ, அதை வாய்மொழியாகச் சொல்லுங்கள், அதாவது, இணையதளத்தில் தகவல் தேவையானால், google: போட்டோ எடுக்க, take a picture. இப்படி..

கண்மூடிக் கண் திறக்கும் முன், கிளாஸ் உங்கள் கட்டளையை நிறைவேற்றும். google என்று சொல்லி, கேள்வி கேட்டால், ஒரு குரல் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும். அதே பதில் ஸ்க்ரீனிலும் பளிச்சிடும். இப்போதைக்கு, கட்டளைகள், கேள்விகள், பதில்கள் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்தான். “டேக் எ பிக்சர்” என்றவுடன் எடுக்கும் போட்டோவை, கிளாஸ் உங்கள் கூகுள் ப்ளஸ் இணையதளத்தில் சேமிக்கும். அங்கிருந்து போட்டோவை நீங்கள் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.

ஈ மெயில் அனுப்பவேண்டுமா? இணைய தளத்தில் ஸெர்ச்சா? மெஸேஜ் அனுப்ப வேண்டுமா? அலாவுதீன் கதையில், அவனிடம் ஒரு அற்புத விளக்கு கிடைத்தது, அவன் விளக்கைத் தேய்த்தவுடன், ஒரு பூதம் அவன் முன்னால் வரும். அவன் கேட்டதையெல்லாம் தரும். இன்றைய தொழில் நுட்பம் தரும் அற்புத விளக்கு, கூகுள் கிளாஸ்.

கூகுள் நம் எல்லோருக்கும் தெரிந்த கம்பெனி. இணையதளத்தில் எதைத் தேடவேண்டுமானாலும், துணை நிற்கும் தோழன். ஸெர்ச் எஞ்சின் (Search Engine) என்னும் தேடலுக்குத் துணையான சாஃப்ட்வேர் மட்டுமே உருவாக்கிவந்த கூகுள் கம்பெனியின் ஹார்ட்வேர், அதாவது தயாரிப்புப் பொருள் கூகுள் கிளாஸ்.

கம்ப்யூட்டர்களின் தொழில்நுட்ப முன்னேற்றம், கம்ப்யூட்டர்களின் வாமன அவதாரங்கள். 1960 களில் பெரிய அறைகளை அடைக்கும் சைஸில் இருந்த கம்ப்யூட்டர்கள் 1970 இல் மேசை மேல் வைக்கும் டெஸ்க்டாப் ஆயின. அடுத்த அவதாரம், 1980 இல், போகும் இடமெல்லாம் எடுத்துக்கொண்டு போகும் லாப்டாப்கள். 2007 இல் கைக்கு அடக்கமான ஆப்பிள் ஐ போன்கள், கம்ப்யூட்டரின் பெரும் அம்சங்களோடு வந்தன.

2011 இல், அணிந்துகொண்டு போகும் படியான கம்ப்யூட்டர்களை உருவாக்கும் ஆராய்ச்சியை கூகுள் கம்பெனி தொடங் கினார்கள். எக்கச்சக்க உழைப்பு, கோடிக் கணக்கான முதலீடு, இவற்றின் பலன்தான் கூகுள் கிளாஸ். 2013 இல் சாஃப்ட்வேர் நிபுணர்களான ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான மாடல் வெளிவந்தது. பொதுமக்களும் பயன்படுத்தும் கூகுள் கிளாஸ் அறிமுகமாயிருப்பது 2014 இல் தான்.

சுருக்கமாக, எளிமையாக வர்ணிக்க வேண்டும் என்றால், கூகுள் கிளாஸ், மூக்குக் கண்ணாடியின் ஃப்ரேமின் வடிவத்தில் இருக்கும் தம்மாத்தூண்டுக் கம்ப்யூட்டர். இதன் எடை 43 கிராம்கள். நாம் அணியும் பல மூக்குக் கண்ணாடிகளும், கூலிங் கிளாஸ்களும் சுமார் இந்த எடைதாம்.

கூகுள் கிளாஸின் மையச் செயலகம் (Central Processing Unit) வலதுபுற ஃப்ரேமுக்குள் இருக்கிறது. முன்னே சொன்னபடி, ஸ்க்ரீன், கிளாஸின் வலதுபுற மேல் மூலையில். ஸ்கீரினின் அருகே காமெரா. கிளாஸை இயக்கும் பாட்டரி வலப்புற நுனியில். கிளாஸ் பற்றிய முழுமையான அறிவியல் விவரக் குறிப்புகளைத் (Technical Specifications) தெரிந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் ”க்ளிக்” செய்யவேண்டிய லிங்க் https:/support.google.com/glass/answer.

நுணுக்கமான கருவியாக இருக்கிறதே, கீழே விழுந்தால் என்னவாகும் என்று பயப்படவேண்டாம் என்கிறார்கள் கூகுள் அதிகாரிகள். தரச் சோதனைகளின்போது கூகுள் கிளாஸ் சுமார் ஆறடி உயரத்திலிருந்து கீழே தூக்கிப் போடப்படுகிறது. ஒரு பாதிப்பும் வருவதில்லை.அதேபோல், ஃபிரேம்களை வளைத்தாலும், அவை உடையாதவை, வளையாதவை. கூகுள் கிளாஸ் கறுப்பு, இளம் கறுப்பு, வெள்ளை, நீலம், ஆரஞ்சு ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

இப்போது விற்பனை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மட்டும்தான். விலை 1500 டாலர். அதாவது சுமார் ஒரு லட்சம் ரூபாய். உயர்ரக லாப்டாப் கம்யூட்டர்கள் விலையும் இதே அளவில்தான். ஆகவே, அதிக விலை என்று சொல்லமுடியாது. கூகுள் கிளாஸ் இந்தியாவில் கிடைக்க இன்னும் சில வருடங்களாகலாம் என்று சொல்கிறார்கள். 2014 இல் விற்பனை சுமார் 2 லட்சம் கண்ணாடிகளாக இருக்கும் என்று கம்ப்யூட்டர் உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2018 இல் 2 கோடியைத் தாண்டும் என்பது அவர்கள் கணிப்பு.

இத்தனை கஸ்டமர்கள் கூகுள் கிளாஸை ஏன் வாங்கவேண்டும்? காரணம் கூகுள் கிளாஸ் விஞ்ஞான உலகம் தந்திருக்கும் விளையாட்டுப் பொருளல்ல: அறிவு வளர்ச்சிக்கும், மனிதகுல முன்னேற்றத்துக்கும் உதவும் அற்புதக் கருவி. அப்படி என்ன அனுகூலங்கள் கூகுள் கிளாஸில்? கூகுள் கிளாஸைப் பயன்படுத்தக் கை விரல்கள் தேவையில்லை.

கண்ணாடியை அணிந்தபடி, குரலால் கட்டளையிட்டால் போதும். இப்படிக் குரலால் இயங்கும் ஸ்மார்ட் கருவிகளில் சாதாரணமாக நமக்கு ஒரு பிரச்சனை வரும். இவை சில வகையான உச்சரிப்புகளை மட்டுமே ஏற்றுச் செயல்படும். நான் பலவித உச்சரிப்புகளைச் சோதனை செய்து பார்த்தேன். கூகுள் கிளாஸ் பயன்படுத்த, உச்சரிப்பு ஒரு தடையேயில்லை.

நீங்கள் ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர். உங்கள் அறிவுத் திறமையை, அனுபவத்தை சக டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வீடியோ காமெராவைத்து ஷூட் பண்ணவேண்டிய சிரமமே இல்லை. கூகுள் கிளாஸை மாட்டிக்கொண்டு ஆப்ப ரேஷனைத் தொடங்குங்கள். டாக்டர்கள், குடும்பப் பெண்கள், இயற்கை ரசிகர்கள் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், எனப் பலதரப்பட்ட மக்களும், தங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக்கொள்ள கூகுள் கிளாஸ் பெரும் உதவியாக இருக்கும். நேபாளத்தில் வனத்துறையினரும், ராணுவமும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

விபத்துகளையும், கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை விசாரிக்கவும் கூகுள் கிளாஸ் பெருமளவில் உதவும் என்று பல காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். கூகுள் கிளாஸ் மருத்துவ ரீதியாக எந்த விதத்திலும் கண்களைப் பாதிக்காது என்று சோதனைகள் கூறுகின்றன. ஒரே ஒரு எதிர்மறையான விமரிசனம்தான் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலை யிடும் சாத்தியக்கூறு. செல்போனில் புதியவர்களைப் போட்டோ எடுத்தால், அவர்கள் தெரிந்துகொள்ள முடியும். கூகுள் கிளாஸில் “டேக் எ பிக்ச்சர்” என்று அவர்களைப் போட்டோ எடுத்தால், அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது.

நியாயமான விமரிசனம். தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படிக்கலாம்: அல்லது அதன் நெருப்பில் ஊரை எரிக்கலாம். இது தீபத்தின் குறையல்ல, பயன்படுத்தும் மனிதரின் குணம்! குரலால் இயங்கும் ஸ்மார்ட் கருவிகளில் உச்சரிப்புப் பிரச்சினை இருக்கும். ஆனால் கூகுள் கிளாஸ் பயன்படுத்த, உச்சரிப்பு ஒரு தடையேயில்லை.

எஸ்.எல்.வி. மூர்த்தி

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x