மானியத்தை ரொக்கமாகக் கொடுக்கலாமா?

மானியத்தை ரொக்கமாகக் கொடுக்கலாமா?
Updated on
3 min read

மானிய விலையில் காஸ் சிலிண்டர் கொடுப்பதற்கு பதில் மானியத்தை ரொக்கமாக கொடுத்து, சந்தை விலையில் காஸ் சிலிண்டரை விற்கும் முறைக்கு மாற மத்திய அரசு முயற்சிக்கிறது. முந்தைய UPA “உன் பணம் உன் கையில்” என்று இந்தத் திட்டத்தை ஒரு சில மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது. இது சரியா என்ற சர்ச்சை இப்போதும் உள்ளது. மானியத்தை ரொக்கமாக கொடுக்கலாமா என்பது பற்றி சில பொதுவான அம்சங்களை பார்ப்போம்.

மானியம் எதற்காக?

நம் நாட்டில் பலப் பொருட்கள், சேவைகள் மானிய விலையில் விற்கப்படுகின்றன. பள்ளிக் கல்வி, பொது சுகாதாரம் போன்றவை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலைகளில் கொடுப்படுகின்றன. உணவு தானியங்கள், காஸ் சிலிண்டரும் மானிய விலைகளில் கொடுக்கப்படுகின்றன. அதிக மானியத்துடன் விற்கப்படும் மற்ற பொருட்கள் மண்ணெண்ணை, டீசல், உரங்கள். இதில் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கப்படும் மானியத்தின் நோக்கம் வெவ்வேறாக இருக்கும்.

பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும், அதற்கான கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் கொடுத்து நீங்களே கல்விக்கட்டணத்தை செலுத்தி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்றால் பலர் பணத்தை வாங்கிக் கொண்டு பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்பமாட்டார்கள். ஆகவே மானிய கட்டணத்தில் அல்லது இலவசமாக பள்ளிக் கல்வி வழங்குவதுதான் சிறந்தது. இங்கு மானியத்தை பெற்றோரிடம் கொடுக்கலாம் என்பது தவறான அணுகுமுறையாக இருக்கும். பொது சுகாதாரத்திற்கும் இது பொருந்தும்.

சில நேரங்களில் ரொக்கத்தையும் அளித்து இலவச சேவையை பயன்படுத்த தூண்டவேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ரொக்கம் அளித்து அவர்களை குழந்தைப்பேறுக்கு மருத்துவமனை வரவைக்க வேண்டும். இங்கு இலவச மருத்துவ சேவையுடன் ரொக்க மாற்றமும் அவசியம். அந்த ரொக்கம் கர்ப்பிணி பெண்ணுக்கு சென்றடைவதையும் உறுதி செய்வதும் அவசியம்.

இதே போன்று கல்வியில்/பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதா யத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதும் உண்டு. உயர்கல்வி தொடர்பான கட்டணங்களின் சுமையை குறைக்க இந்த கல்வி ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கும் மாணவர் களுக்கும் உரியகாலத்தில் உதவி தொகைகள் சென்றடையவேண்டும். அப்போது மட்டுமே இவற்றால் பயன் உண்டு.

ஆனால் இவை இரண்டும் பெரும்பாலும் உரிய காலத்தில் பயனாளிகளை சென்றடைவதில்லை என்பது நமக்கு தெரியும். அதனால், ரொக்கமாற்றம் செய்வதிலும் சிக்கல்கள் உண்டு என்பதை அறியவேண்டும். உரிய காலத்தில் மானியத்தொகை பயனாளிகளை சென்றடையாவிட்டால் அதுவும் விரையம் (leakage) தான்.

மானிய விலைக்கு பதில் ரொக்கம் எதற்கு?

உணவு தானியத்தை மானிய விலையில் நாம் பொது விநியோகக் கடைகளில் வாங்குகிறோம். அதே போன்று காஸ் சிலிண்டரையும், டீசல், உரங்களையும் மானிய விலைகளில் வாங்குகிறோம். இதில் பெரும் அளவில் மானியம் விரையமாவது என்பதுதான் அரசின் கவலை. மானியம் விரையமாவதை குறைத்தால் அரசின் செலவும் குறையும் என்பது ஒரு கணக்கு.

வீடுகளுக்கு மானிய விலையில் காஸ் சிலிண்டரும், உணவு விடுதிகளுக்கு சந்தை விலையில் காஸ் சிலிண்டரை கொடுப்பதால் இங்கு மானியம் விரையமாவது இயற்கை. மானிய விலையில் கொடுக்கப்படும் காஸ் சிலிண்டரை வியாபார நிறுவனங்களுக்கு அதிக விலையில் விற்று குடும்பங்கள் லாபம் பார்க்க, இதற்கு முற்று புள்ளி வைக்க அரசு முயற்சிக்கிறது. பொது மக்களின் போக்குவரத்துக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் கொடுக்கப்படும் மானிய விலை டீசல் மற்ற தேவைகளுக்கு திருப்பிவிடும் போது மானியம் விரையமாவது தவிர்க்கப்படவேண்டும்.

இதுவரை பரிட்சார்த்த முறையில் காஸ் மானியத்தை ரொக்கமாக கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் காஸின் தேவைக் குறைந்து மானியம் விரையமாவது குறைந்துள்ளதாக ஓர் அறிக்கை கூறுகிறது. மானிய விலையில் தேவையைவிட அதிகமாக உணவு தானியம் கிடைக்கும் போதும் அதனை அதிக விலையில் விற்பதும் மானியம் விரையமாவதும் தடுக்க வேண்டும் என்பதும் அரசின் கவலை.

மானிய விலையில் பொருளைக் கொடுப்பதற்கு பதில் மானியத்தை பணமாக பயனாளிகளுக்கு கொடுத்து சந்தை விலையில் பொருட்களை வாங்க சொல்வது தான் இப்போது உள்ள ரொக்க மாற்றத்தின் குறிக்கோள். அவ்வாறு செய்யும் போது மானியம் விரையமாவது குறைந்து, பயனாளிக்கு நேரடியாக மானியம் சென்றடைவதை உறுதி செய்வதும் இந்த ரொக்க மாற்றத்தின் குறிக்கோள்கள்.

ரொக்கமாற்றம் வெற்றியடைய என்ன செய்யவேண்டும்?

மானியத்தை ரொக்கமாக பயனாளிகள் பெறவேண்டும் என்றால் எல்லாருக்கும் வங்கி கணக்கு இருப்பது அவசியம். எல்லாருக்கும் வங்கி சேவை சென்று சேர்வதை உறுதி செய்வதும் அவசியம். இப்போது உள்ள முறையில் ஒவ்வொரு பொருளுக்கும் பயனாளியை இனம் கண்டு அவருடைய வங்கி கணக்கில் மானியத் தொகையை செலுத்தவேண்டும். ஆனால், வரும் காலங்களில் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கி அதன் மூலம் ஒரே கணக்கில் அவருக்கு உரிமையுள்ள அனைத்து மானியங்களையும் வழங்குவது அவசியம்.

உணவு பொருட்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் தொடந்து மானிய விலையில் அவற்றை வழங்குவதே சிறந்தது, உணவுக்கான மானியத்தை ரொக்கமாக வழங்கும் போது, அது ஒரு குடும்பத் தலைவரை மட்டுமே சென்றடையும். அவர் எல்லாருக்கும் உணவு கிடைக்கும் பொருட்டு அதனை செலவு செய்வார் என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

எனவே, முதியோரும், பெண்களும், குழந்தைகளும் போதுமான உணவு பெறுவதற்கு மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை வழங்குவது அவசியம். மேலும் மானியத்தை பணமாக அளிக்கும் போது அது மாதம் தோறும் நிலையாக இருக்கும்.

உதாரணமாக நான்கு நபர்கள் உள்ள குடும்பத்துக்கு ரூ.3௦௦ உணவு மானியத்தை ரொக்கமாக கொடுத்தால், மாதம் தோறும் சந்தையில் உணவு தானியத்தின் விலை உயரும் போது போதுமான உணவு தானியத்தை அக்குடும்பத்தால் வாங்க முடியாது. எனவே உணவு மானியத்தை ரொக்கமாக கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.

எனவே எல்லா மானியங்களையும் ரொக்கமாக கொடுக்க முடியாது, ரொக்கமாக கொடுக்கப்படும் மானி யங்கள் பயனாளிக்கு சென்றடைந்து எதிர் பார்க்கப்பட்ட விளைவை ஏற்படுத்துவதை உறுதி செய்வதும் அவசியம்.

உணவு பொருட்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் தொடந்து மானிய விலையில் அவற்றை வழங்குவதே சிறந்தது, உணவுக்கான மானியத்தை ரொக்கமாக வழங்கும் போது, அது ஒரு குடும்பத் தலைவரை மட்டுமே சென்றடையும். அவர் எல்லாருக்கும் உணவு கிடைக்கும் பொருட்டு அதனை செலவு செய்வார் என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in