

ஒரு செயலின் எதிர்வினை அனைத்து இடங்களிலும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த விதி இப்போது கச்சா எண்ணெய் விஷயத்தில் சரியாகப் பொருந்துகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சி அடைய, ரஷியர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
காரணம் என்ன?
ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து 60 டாலர் என்று இருக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி என்பதால் இந்த விலை சரிவு நமக்கு சாதகமான விஷயமாகும். ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷியாவுக்கு அது எவ்வளவு பெரிய பேரிடியாக இருக்கும்?
ரஷியாவின் வருமானத்தில் 45 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய்யை நம்பி இருக்கிறது. ஏற்கெனவே மந்தமாக இருக்கும் ரஷியாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் சரிவில் மேலும் மோசமானது.
இதனால் 1998-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய கரன்ஸி சரிவு ஏற்பட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டில் மோசமாக சரிந்த கரன்ஸியில் ரஷியா முதலிடத்தில் இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 79ஆக சரிந்தது. மேலும் பொருளாதார தடையும் சேர்ந்து கொள்ள கரன்ஸியின் மதிப்பு பாதாளத்தில் விழுந்தது.
நடவடிக்கை என்ன?
ரூபிளின் மதிப்பு சரிவதைத் தடுக்க ரஷிய மத்திய வங்கியும் பல நடவடிக்கைகள் எடுத்தது. கடனுக்கான வட்டி விகிதத்தை 10.5 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தியது. இருந்தாலும் ரூபிள் மதிப்பு பெரிய அளவுக்கு உயரவில்லை.
மேலும் ரூபிள் சரிவை தடுக்க தன் வசம் இருக்கும் அந்நிய செலாவணியை விற்க ஆரம்பித்தது ரஷியா. 2014-ம் ஆண்டில் மட்டும் 8,000 கோடி டாலர் அளவுக்கான அந்நிய செலாவணியை விற்றிருக்கிறது ரஷியா. அதாவது தன்னிடம் இருக்கும் அந்நிய செலாவணியில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு விற்றுவிட்டது. இருந்தாலும் ரூபிளின் சரிவை தடுக்க முடியவில்லை.
நாணயத்தின் மதிப்பு சரிவாக இருப்பதினால் ஏற்றுமதி அதிகரிக்கலாம் ஆனாலும் வெளி நாடுகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
அதேபோல வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களை ரஷியா இறக்குமதி செய்ய வேண்டி இருப்பதால் உள்நாட்டில் பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும். இப்போதே பணவீக்கம் 10 சதவீ தமாக இருக்கிறது.
என்ன நடக்கும்?
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 60 டாலருக்கு கீழே அடுத்த வருடமும் தொடர்ந்தால் ரஷியா பொருளாதாரம் 4.5 சதவீத அளவுக்கு சரியக்கூடும் என்று ரஷியாவின் மத்திய வங்கி எச்சரித்திருக்கிறது.
சர்வதேச ஜிடிபியில் ரஷியாவின் பங்கு 2.7 சதவீதம் மட்டுமே என்பதால் உலகத்தின் மற்ற நாடுகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இதன் பக்க விளைவுகள் போகப்போகதான் தெரியவரும்.