

சூடுபிடிக்கும் பிட்காயின் வர்த்தகம்
ஆன்லைன் பணமாகக் கருதப்படும் பிட்காயின் மூலமான வர்த்தகம் இப்போது அதிகரித்து வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தனது வர்த்தகத்துக்கு பிட்காயினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள், விண்டோஸ் போன் மற்றும் அதன் சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறும்போது வழக்கமான பண பரிவர்த்தனை தவிர இந்த வர்ச்சுவல் கரன்சி (virtual currency) எனப்படும் பிட்காயின் மூலமாகவும் வாங்கலாம். பேபால், டெல், எக்ஸ்பீடியா நிறுவனங்கள் ஏற்கனவே பிட்காயின் மூலம் வாங்குவதை அனுமதிக்கின்றன. 2009ல் தொடங்கப்பட்ட இந்த பிட்காயின் முறை ஆன்லைன் வர்த்தகத்தில் உலகம் முழுவதும் நடப்பு பண மதிப்பிற்கு மாற்றாக வளர்ந்து வருகிறது.
வைர கைப்பை!
நவநாகரிக பெண்களுக்கு கைப்பை மிகவும் அவசியம். வைரம் பதிக்கப்பட்ட மிகவும் அரிதான கைப்பை ஒன்று சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. இது 1.85 லட்சம் டாலருக்கு விலை போனது. விலை உயர்ந்த கைப்பைகளைத் தயாரிக்கும் சிக்னேச்சர், ஹெர்ம்ஸ், சேனல், லூயி வூட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் விலை உயர்ந்த 480 கைப்பைகள் ஏலம் விடப்பட்ன. 30 செ.மீ. அளவுள்ள வைரம் பதிக்கப்பட்ட மிகவும் அரிதான கைப்பை அதிக விலைக்கு ஏலம் கேட்கப்பட்டது. இதில் 18 கேரட் தங்கத்தால் ஆன கைப்பிடிகள் உள்ளன. இதில் 242 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 9.84 கேரட்டாகும்.
பணம் குவிக்கும் ஆங்கிரி பேர்டு !
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும் விளையாட்டாக ஆங்கிரி பேர்டு உள்ளது. ஆங்கிரி பேர்டு விளையாட்டுக்குத் தேவைப்படும் சாஃப்ட்வேர் இதுவரை 250 கோடி முறை டவுன்லோடு செய்யப்படுள்ளது. 2015ல் இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 10 கோடி ஸ்மார்ட் போன் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களில் ஆங்கிரிபேர்டு மென்பெருளையும் அப்படியே சேர்த்துக் கொடுக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. கடந்த வருடம் சாஃப்ட்வேர் மூலமான லாபம் 4.5 கோடி டாலர்கள்.
குரல் கொடுத்தால் தண்ணீர் கொதிக்கும்
குரல் கொடுத்தால் போதும் சமையலறையில் தண்ணீர் கொதிக்கும், சமையல் நடக்கும். இதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது பானசோனிக். இந்த இயந்திரங்களை குரல் மூலம் செயல்படுத்தலாம். மேலும் மேஜிக் கண்ணாடி ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கண்ணாடிக்கு முன் நின்றால் உங்கள் உடல்நிலை குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்துக் கொள்ளும். அணிந்திருக்கும் ஆடை எந்த வண்ணத்தில், ஒளியில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கும். முழுவதும் குரல்வழியில் செயல்படும் சமையலறையை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.