

அரச சபையில் அமைச்சர் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் வள்ளுவர் கூறி உள்ளார். உங்கள் மேலதிகாரியை மன்னராகவும் உங்களை மந்திரியாகவும் கருத்தில் கொண்டால், குறளின் பொருள் விளங்கும்.
இன்றைய சூழலில் வர்த்தக நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், வங்கிகள் போன்றவை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டங்களை பண்டைக் காலத்து அரசவைக் கூட்டங்களுடன் ஒப்பிடலாம். நடந்த வேலையை ஆய்வு செய்வதற்காகவும், வருங்காலத்தில் எவ்வாறு பணி செய்து இலக்குகளை அடையலாம் என்று விவாதிப்பதற்காகவும் இவை நடப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள்!
பல நிறுவனங்களில் அடிக்கடி நடத்தப்படும் இக்கூட்டங்களால் நம்மை வேலை செய்ய விட்டிருந்தாலாவது உற்பத்தி பெருகி இருக்கும் என்கின்ற எண்ணம் கூட வரும்! இத்தகைய கூட்டங்களில் உங்கள் தலைமை அதிகாரி தனது அனுபவங்களை-தான் எப்படி உழைத்து (!) இந்த உயரிய நிலையை அடைந்தேன் என்று சிலாகித்துப் பேசுவார். பேசுவது அவர் உரிமை! அவர் பேச்சைக் கேட்பது உங்கள் கடமை!! - பேச்சு எவ்வளவு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், கலப்படமற்ற அறுவையாக இருந்தாலும்!
உங்களின் மற்ற உயர் அதிகாரிகளோ இம்மாதிரியான உரைகளால் நீங்கள் நிறுவனத்தின் பால் கொண்ட பற்றும் வேலையில் காட்டும் சிரத்தையும் கூடும் என்று எதிர்பார்ப்பார்கள்; சொல்வார்கள்! ஆனால் சிலரது பேச்சைக் கேட்டால், அவரது பேச்சைக் கேட்ட பின்பு உள்ள ஆர்வமும் உற்சாகமும் பேச்சைக் கேட்பதற்கு முன்பு இருந்ததை விடக் குறைந்து போவதை உணரலாம். இதைப் போன்ற கூட்டங்களில் பங்கேற்க நேர்ந்தால் நீங்கள் உங்கள் அருகிலிருப்பவருடன் பேசுவது இயற்கை தானே!
ஆனால் இது உங்கள் மேலதிகாரிக்குப் பிடிக்காது; எரிச்சலூட்டும்! நாம் சொல்லும் இவ்வளவு உபயோகமான(!) கருத்துகளைச் சிரத்தையாகக் கேட்காமல் என்ன அரட்டை வேண்டிக்கிடக்கிறது என்று நினைப்பார். கூட்டத்தில் பங்கேற்போரில் வேறு சிலரோ பல்லைக் கடித்துக் கொண்டு தேநீர் இடைவேளை வரை பொறுத்து இருந்து அப்பாடா என்று தம் நண்பனைப் பார்த்துப் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் ஐயகோ-தலைவர் அதையும் கவனித்து விடுவார்
இவர் ஏன் அவர் காதைக் கடிக்கின்றார் - நம்மைப்பற்றி பேசுகின்றார்களோ என்று கூடச் சந்தேகம் படக் கூடும். உங்கள் மன அழுத்தம் குறைய யாருடனும் பேசிச் சிரிப்பதோ மிகவும் ஆபத்தானது. அது தலைவருக்குத் தன்னை கேலி செய்வதாகப் படக்கூடும். இந்த மனப்பான்மை சில முற்போக்கு சிந்தைனையுள்ள நிறுவனங்களிலும், மேலதிகாரிகளிலும் இல்லை என்பதுதான் ஆறுதல்.
ஆனால் பெரிய பதவியில் உள்ள பலரும் தாங்கள் எது பேசினாலும் எப்படிப் பேசினாலும் அதை மற்ற அலுவலர்கள் சிரத்தையாகக் கேட்பதையே விரும்புகின்றார்கள். ஆதலால் நீங்கள் சபையறிந்து, எப்போழுதும் சபைத்தலைவர் மனமறிந்து நடந்து கொள்ளுங்கள். உங்களில் பலரும் இதை அனுபவத்தில் பார்த்து இருப்பீர்கள்-மறந்து விடாதீர்கள்!
சொல்லோவியர் வரைந்த வார்த்தைகள் இதோ
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com