Published : 01 Jul 2019 11:49 AM
Last Updated : 01 Jul 2019 11:49 AM

எண்ணித் துணிக! - கைமாத்தாக ஐடியா கிடைக்குமா?

ஸ்டார்ட் அப் ஐடியா கிடைக்க எதற்கு இத்தனை மெனெக்கெட்டுக்கொண்டு நேராக வாடிக்கையாளரிடமே சென்று அவருக்கு என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று கேட்டுவிட்டால் போயிற்று என்று தோன்றுகிறதா? என்ன இருந்தாலும் நம் பொருளை வாங்கப்போவது அவர் தானே. அவரிடம் கேட்பதுதான் புத்திசாலித்தனம் என்று கூடத் தோன்றும். சாரி, அநியாயத்துக்கு இது தப்பாட்டம்.

ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். சாலீஸ்வரம் அனுக்ரஹம் உள்ளவர்கள் பேப்பர், லெட்டர் போன்றவற்றை படிக்க திணறுவார்கள். காரணம் வெள்ளெழுத்து. நாற்பது வயதானால் எழுத்து மங்கலாய் தெரிய ஆரம்பிக்கும். அதனால்தான் இதை சாலீஸ்வரம் என்பார்கள். அப்பேற்பட்டவர்கள் தங்கள் செல்லில் உள்ளதை படிக்கக் கூட ரீடிங் க்ளாஸ் தேவை. மற்ற நேரங்களில் கண்ணாடி தேவையில்லை என்பதால் இவர்கள் சமயத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி எடுத்துக்கொண்டு செல்ல மறப்பார்கள். அந்நேரம் பார்த்து தான் செல்லில் மெசேஜ் வரும், அல்லது செல்லில் ஒரு பெயரை தேடி போன் செய்ய வேண்டியிருக்கும். அந்நேரம் படிக்க முடியாமல் சாலீஸ்வரம் சனீஸ்

வரர் ரேஞ்சுக்கு அவர்களைப் பாடாய் படுத்தும். அவர்கள் மறதிக்கு என்ன செய்வது? அவர்களிடமே சென்று என்ன வேண்டுமென்று கேட்டால் அவர்கள்தான் என்ன பதில் சொல்வார்கள்?

அவர்களிடம் கேட்டால் கிடைக்காத தீர்வை, அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து புரிந்துகொண்டது ‘Thin Optics’ என்ற கம்பெனி. எதை வேண்டுமானாலும் மறந்துவிட்டு செல்வார்களே தவிர செல்போனை அவர்கள் ஞாபகமாக எடுத்துக் கொண்டு செல்வார்கள் என்பதை அக்கம் பெனி உணர்ந்தது. மூக்கின் மீது மட்டும் அமரும் சின்ன சைஸ் ரீடிங் க்ளாஸ் செய்து அதை ஒரு சின்ன லெதர் பைக்குள் வைக்கும்படி செய்து அதை செல்போன் பின்புறம் ஒட்டும்படி தயாரித்தது. செல்போன் செல்லும் இடமெல்லாம் அந்த ரீடிங் க்ளாஸ் கட்டாயம் செல்லும். மெசேஜ் படிக்கவோ போன் செய்யவோ செல்போன் பின்புறம் உள்ள பையிலிருந்து கண்ணாடியை எடுத்து மூக்கின் மீது ஒட்ட வைத்து படித்து வேலை முடிந்த பின் மீண்டும் அதை எடுத்த இடத்துக்குள் வைக்கும் வசதி. சாலீஸ்வர தோஷத்திற்கு பரிகாரமாய் விளங்கி இன்று உலகெங்கும் சக்கை போடு போடுகிறது. அந்த ஐடியாவை வாடிக்கையாளர் தரவில்லை. அவர்கள் படும் அவஸ்தையை கவனித்து கம்பெனியே கண்ணாடி போடாமல் பார்த்துத் தெரிந்து

கொண்டது என்பதுதான் இதில் விசேஷம்! தங்களுக்கு என்ன தேவை என்பது வாடிக்கையாளருக்குத் தெரியாது. தெரியாததை அவர்களிடம் கேட்டால் என்ன கூறப் போகிறார்கள். தெரியாது என்று சொல்ல வராது. கேட்ட பாவத்திற்கு சொல்ல வேண்டுமே என்று விலை குறைத்து கொடுக்க முடியுமா என்று வேண்டுமானால் கேட்பார்கள்.

அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். என்ன வேண்டும் என்று கேட்கும் போது வாடிக்கையாளரால் அப்பொழுது அவர்கள் அறிவுக்கும், அனுபவத்துக்கும் உட்பட்டுத்தான் விடையளிக்க முடிகிறது. தங்கள் தேவையை உணர்ந்து அதற்கான தீர்வை கற்பனை செய்து அதை விளக்கிக் கூறும் திறன் அவர்களிடம் இல்லை. அதை தெளிவாக உணர்ந்து அதற்கேற்ற தீர்வை ஒரு பொருளாக்கி அவர்களிடம் தரும் போது ‘ஆஹா, எத்தனை சவுகரியமாய் இருக்கிறது, இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று உங்கள் பொருளை க்யூ கட்டி வாங்குவார்கள்.

‘நாம் அனைவரும் நம் அனுபவங்களால் கட்டுண்ட கைதிகள்’ என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர்’ எட்வர்ட் மர்ரோ’. வாடிக்கையாளருக்கு என்ன தெரியுமோ, எதை நம்புகிறாரோ என்ன அனுபவப்பட்டாரோ அதன் கைதியாகிறார். அதனாலேயே தான் பயன்படுத்தும் பொருள் இப்படித்தான் இருக்க முடியும், இதைத்தான் செய்ய முடியும், இப்படி மட்டுமே செய்ய முடியும் என்று முடிவு செய்து அந்த வட்டத்துக்குள் மட்டுமே தன் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுருக்கிக்கொள்கிறார். தன் தேவையை பூர்த்தி செய்யக்

கூடிய பொருள் வேறு என்ன இருக்கலாம், எப்படி இருக்கலாம், அது வேறெப்படி பயன்படலாம் என்று கற்பனை செய்து பார்க்க அவரால் முடிவதில்லை. நீங்கள் என்னடா என்றால் அவரிடம் போய் புதியப் பொருளுக்கு ஐடியா கேட்பேன் என்கிறீர். நடக்கிற காரியமா இது!

வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்து உலகெங்கும் வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் எதுவும் அவர்கள் வாய்விட்டு கேட்டு வந்ததில்லை. ‘சின்ன வயதில் ராமநவமி அன்று என் பாட்டி சுவையான பானகம் செய்வார் பாருங்கள். அது போல் குடித்து எத்தனை வருஷங்கள் ஆகிறது.

இன்று யாருக்கு அப்படி செய்யத் தெரிகிறது’ என்று அங்கலாயப்பதோடு நிறுத்திக்கொள்ளத்தான் மக்களால் முடிகிறதே ஒழிய தன் தேவையை நிறுவனம் ஒன்றிடம் கூறி டெட்ராபாக் மாதிரியான ஒன்றில் ராமநவமி சமயம் பானகத்தை பேக் செய்து தாருங்களேன் என்று கேட்கத் தோன்றுவதில்லை.

ஆனால், அவர்கள் ஏக்கத்தை புரிந்துகொண்ட ‘ஹெக்டர் பிவரேஜஸ்’ என்ற ஸ்டார்ட் அப் ‘பேப்பர் போட்’ என்ற ப்ராண்டை அறிமுகப்படுத்தி பானகம் போல் நம் பழங்கால பதார்த்தங்களான ‘ஜல் ஜீரா’, ‘நீர் மோர்’ என்று விதவிதமாய் அறிமுகப்படுத்தியது. பேஷாய் விற்கவும் செய்கிறது!

வாடிக்கையாளரிடம் சென்று கேட்க, ஸ்டார்ட் அப் ஐடியா ஒன்றும் கைமாத்து அல்ல. அவரை கவனித்து, அவர் தேவையை அவருக்கு முன் புரிந்து கொண்டு அதைத் தீர்க்கும் வைத்தியம்!

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x