Published : 08 Jul 2019 11:41 AM
Last Updated : 08 Jul 2019 11:41 AM

எண்ணித் துணிக! - ஐடியாக்களின் அட்சய பாத்திரம்

ஸ்டார்ட் அப் துவங்க வாடிக்கையாளர் தேவையை தேடுவது ஒரு வழியென்றால் இன்னொரு வழி சந்தைப் போக்கை சப்ஜாடாய் ஸ்டடி செய்வது. சந்தைப் போக்கு என்பது தீர்க்கமான திசையை நோக்கி நகரும் வாடிக்கையாளர்களின் மனப்பாங்கு. நம் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வாழும் முறையை மாற்றி, நாம் வாங்கும் பொருட்களில் மாற்றங்கள் கொண்டு வரும் சக்தி கொண்டவை சந்தைப் போக்குகள்.

ஒரு உதாரணம் கொண்டு இதைப் பார்ப்போம். சமீப காலமாக நியூக்ளியர் குடும்பங்கள் பெருகி வருகிறது. அதோடு பெண்கள் வேலைக்குச் செல்வதும் அதி

கரித்திருக்கிறது. இவை இரண்டுமே வெவ்வேறு சந்தைப் போக்குகள். இதனால் மக்கள் வாழும் முறைகளிலும் அவர்கள் பொருள் வாங்கும் விதங்களிலும் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. காலை எழுந்து ஃபில்டர் காபி போட நேரமில்லை, போட்டு ரெடியாய் வைக்க பாட்டிகளும் இல்லை.

இதனால் பிறந்தது இன்ஸ்டெண்ட் காபி. டக்கென்று போட்டு பட்டென்று குடிக்க. ஆனால் ஃபில்டர் காபி மீதிருந்த மக்கள் ஆசையை, அதை போட நேரம் இல்லையே என்ற ஆதங்கத்தை தீர்க்க பிறந்திருக்கின்றன ரெடிமேட் டிகாக்ஷன் பிராண்டுகள்.

சின்ன பாட்டிலில் டிகாக்ஷனை அடைத்து ஒரு வாரம் பத்து நாள் வரை கெடாமல் தயாரித்து அதை கடைகளில் விற்று, காலையில் நம்மை எழுப்பி கூடவே காசும் பண்ணுகின்றன சாமர்தியமான ஸ்டார்ட் அப்ஸ். அதாவது சந்தைப் போக்கைக் கவனித்து அதற்கேற்ப சமயோஜிதமாக சிந்தித்து சிறப்புற்றிருக்கும் ஸ்டார்ட் அப்ஸ்! சந்தைப் போக்குகள் நாளுக்கு நாள் மாறுபவை அல்ல.

மக்கள் மனதில் மெதுவாகப் பிறந்து பதமாக வளர்ந்து வெகு காலம் நின்று நிலைக்கும் தன்மை உள்ளவை. மேலும் சந்தைப் போக்குகள் ஒரு குறிப்பிட்ட பொருள் பிரிவை மட்டுமே பாதிக்காமல் பல பொருள் பிரிவுகளையும் அதன் பயன்பாட்டையும் பாதிக்கும். பெண்கள் வேலைக்கு போவ தால் வளர்ந்தது இன்ஸ்டண்ட் டிகாக்ஷன் மட்டுமல்ல.

`ஆபீஸ் செல்லும் அவசரத் திற்கு அவர்களுக்கு சமையலறையில் ஈடுகொடுக்கும் ‘எம்டிஆர்’ ரெடி டு குக் ஐடம் முதல் யாரையும் நம்பாமல் நினைத்த இடத்திற்கு போய் வர உதவும் ‘ஸ்கூட்டி’ வரை பல பொருள் பிரிவுகளும் பிராண்டுகளும் பிறந்து வளர்ந்து இன்று மார்க்கெட்டில் பின்னி பெடலெடுக்கின்றன. எல்லாம் சந்தைப் போக்கின் தயவால்!

சந்தைப் போக்குகள் பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையை வாழும் முறையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவை. சந்தைப் போக்கு இந்த நேரம் வருவேன் என்று கூறியும் வராது. இன்னார் சொன்னதாலும் வராது. அது ஒரு சுயம்புலிங்கம்.

சமுதாய, கலாசார மாற்றங்களால் தானாய் பிறந்து அதுவாய் வளர்ந்து மெதுவாய் மக்களை ஆட்கொள்ளும். மற்றவருக்கு முன் அதை கண்டுபிடித்து தரிசிப்பவர்களுக்கு மட்டும் இருள் நீக்கி அருள் பாலிக்கும் இவ்வகை சந்தைப் போக்குகள்.

சந்தைப் போக்கு நீண்ட காலம் நிலைத்து நிற்பவை. நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் அல்ல. அவை அரச மரங்கள். மெதுவாய் சத்தமில்லாமல் தோன்றி வேறூன்றி விருட்சமாகி நெடு காலம் நிலைத்து நிற்பவை.

சமீப காலமாக சுற்றுப்புற சூழல் மீது சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு ஈர்ப்பு வளர்ந்து வருவதைக் கவனித்திருப்பீர்கள். சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது என்று பட்டாசு கொளுத்துவதை குறையுங்கள் என்று பல பள்ளி சிறுவர்கள் கையில் போர்டு தூக்கி அறிவுரை கூறியதைப் பார்த்திருப்பீர்கள். பிளாஸ்டிக் பைகளில்

பொருள்களை பேக் செய்து தரும் கடைகளை புறக்கணியுங்கள் என்று பார்ப்பவர்களிடம் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதுவும் ஒரு சந்தைப் போக்கே. இன்று சிறிய அளவில் இருந்தாலும் இது வளர்ந்து பிற்காலத்தில் பெரிய சந்தைப்

போக்காய் வளர்ந்து பல பொருள் பிரிவுகளை பிராண்டுகளை பாதிக்கப்போகும் அறிகுறி இப்பொழுதே தெரிகிறது. இந்த சந்தைப் போக்கில் புதைத்து கிடக்கும் ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் உங்களுக்குத் தெரிகிறதா!

பொருள்களை பாதிப்பவை அல்ல சந்தைப் போக்குகள். வாடிக்கையாளர்களின் சிந்தனைகளை, வாழ்க்கை முறைகளை பாதிப்பவை. வாழும் முறையை, வாங்கும் பொருட்களை பாதிப்பவை. முன்பு கூடு சைஸில் வீடு இருந்தாலும் ஊருக்கு நடுவில் குடியிருக்கத்தான் விரும்பினார்கள் வசதி படைத்தவர்கள்.

ஆனால் இன்று நகரின் சத்தம், சஞ்சலம் பிடிக்காமல் ஊருக்கு வெளியே குடியிருக்க விரும்புகிறார்கள். இதனால் தான் சென்னை இன்று செங்கல்பட்டு வரை பரவி மாமல்லபுரம் வரை விரிந்திருக்கிறது.

இச்சந்தைப் போக்கால் எத்தனை மாற்றங்கள், எத்தனை பொருள் பிரிவுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன பாருங்கள். ஊரின் பிரபலமான பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, சூப்பர்மார்கெட்கள் முதல் கூட இன்று ஊருக்கு வெளியே கிளைகள் திறக்கவேண்டியிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இச்சந்தைப் போக்கு எத்தனை புதிய பொருள்களுக்கு வழிவகுத்திருக்கிறது என்று சிந்தித்தால் ஸ்டார்ட் அப் ஐடியா சரமாரியாய் கொட்டும். ஊருக்கு வெளியிலிருந்து நகருக்குள் ஆபீஸ் செல்ல தினம் காரில் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் காலை டிபன் உண்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு.

அவர்களுக்கு வரும் வழியில் ரெடிமேடாய், ஈசியாய், காரிலேயே சாப்பிடும் வகையில் டிஃபன் பேக் செய்து விற்க முயன்றால் எத்தனை சௌகரியம் என்று கணக்கிடுங்கள். நம்மூரைப் போலவே அமெரிக்காவில் ஊருக்கு வெளியே கடை திறந்து இன்று கடல் கடந்து வளர்ந்திருக்கும் ‘டன்கின் டோனட்ஸ்’ போன்ற கம்பெனிகளின் கதையை படியுங்கள். உங்களுக்கே கபகபவென்று ஸ்டார்ட் அப் பசியெடுக்கும்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x