டாடா டிகோர் - இவி பொது விற்பனைக்கு வருவது எப்போது?

டாடா டிகோர் - இவி பொது விற்பனைக்கு வருவது எப்போது?
Updated on
1 min read

டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் மிகுந்த வரவேற்பைப்பெற்ற மாடல் டிகோர். இதனாலேயே இந்த பிராண்டில் பேட்டரி வாகனத்தையும் தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டது. டிகோர் – இவி கார் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற போதே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தங்கள் நிறுவனத்துக்கு எப்போதுமே மிகுந்த அக்கறை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முதலில் பேட்டரி கார் தயாரிப்பில் தடம் பதித்தது டாடா மோட்டார்ஸ்.

இப்போது டிகோர் இவி சந்தைக்கு வந்துவிட்டது. ஆனால் இது இன்னமும் தனி நபர் விற்பனைக்கு வரவில்லை. முதல் கட்டமாக பயண ஏற்பாட்டாளர்களுக்கு மட்டுமே அளித்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இதனால் இப்போதைக்கு டிகோர் இவி-யை ஓட்டிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஜூம் கார் நிறுவனத்தில் வாடகைக்கு எடுத்து ஓட்டிப்பார்க்கலாம்.

பொதுவாக பேட்டரி வாகனங்களுக்கு உத்தரவாதம் அளிப்பது சற்று சிக்கலான விஷயம்தான். ஆனால் டாடா நிறுவனம் தங்கள் தயாரிப்பின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக 3 ஆண்டு உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

டிகோர் கார் 3 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கி.மீ. தூரம் ஓடுவது வரை உத்தரவாதம் அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக பேட்டரி வாகனங்களைப் பொறுத்தமட்டில் சார்ஜிங்தான் மிகுந்த சவாலான விஷயமாகும். அந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுள்ளது டாடா மோட்டார்ஸ். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இதன் பேட்டரி 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஆகிவிடுவதிலிருந்தே இதன் விரைவான சார்ஜிங் தன்மையை உணரலாம்.

டாடா டிகோர் 72 வோல்ட் 3 ஃபேஸ் ஏசி இன்டக்ஷன் மோட்டாரைக் கொண்டுள்ளது. இது 30 ஹெச்பி திறன் மற்றும் 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தது.

தற்போது பட்ஜெட்டிலும் பேட்டரி கார் வாங்குவோருக்கு மாதந்திர தவணைத் தொகையில் ரூ. 1.5 லட்சம் வரை வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கார் வாங்க விரும்பும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு டிகோர் இவி மாடல் பொது மக்களுக்கும் விற்பனைக்கு வரும்பட்சத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in