

சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜூலையில் நான்கு புதிய பைக் மாடல்களுடன் களம் இறங்குகிறது. 300 என்கே, 650 ஜிடி, 650எம்டி மற்றும் 650 என்கே ஆகிய நான்கு மாடல் பைக்குகள் இந்தியச் சாலைகளில் தனது சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக முடித்து விட்ட நிலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சர்வதேச சந்தைகளில் 125சிசி மற்றும் 250சிசி திறன்களிலும் பைக்குகளை விற்பனை செய்துவரும் சிஎஃப் மோட்டோ இந்திய சந்தைகளில் பிரீமியம் பிராண்டாக மட்டுமே அறிமுகமாக முடிவு செய்துள்ளது. எனவே ஆரம்ப மாடலே 300சிசி திறன் கொண்டதாக முடிவு செய்துள்ளது. மேலும் அறிமுகம் செய்யப்படும்போதே பல தரப்பு பைக் பிரியர்களைக் கவரும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கவாசகி பைக்குகளுக்குப் போட்டியாக இதன் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 650சிசி திறன் கொண்ட மாடல்கள் நேக்கட், அட்வென்சர் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய வகைகளில் தோற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யு மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய விற்பனையைச் செயல்படுத்துகிறது. பெங்களூருவில் வருடத்துக்கு 10 ஆயிரம் பைக்குகள் உற்பத்தி செய்யும் வகையிலான உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக ஏஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள் தெரிவித்துள்ளது.