பிக்ஸட் டெபாசிட்டுக்கு கிரெடிட் கார்டு

பிக்ஸட் டெபாசிட்டுக்கு கிரெடிட் கார்டு
Updated on
2 min read

பொ

துவாக சம்பளதாரர்களுக்கு கிரெடிட் கார்டு வாங்குவது மிக அரிதான காரியமல்ல. கிரெடிட் வழங்கும் நிறுவனங்கள் எப்போதும் சம்பளதாரர்களுக்கு கிரெடிட் வழங்க தயாராகவே இருக்கின்றன. ஆனால் தனிநபர்கள் அதாவது நிரந்தர வருமானம் அல்லது கடன் வாங்காதவர்களுக்கு கிரெடிட் கார்டு அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படி உள்ளவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். உங்களது பிக்ஸட் டெபாசிட்டை வைத்து கிரெடிட் கார்டு வழங்கும் நடைமுறைகள் வந்துவிட்டன.

ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டை பொறுத்து கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன.

கீழ்காணும் தகுதிகளை ஏற்கெனவே நீங்கள் பெற்றிருந்தாலோ அல்லது புதிதாக நீங்கள் தொடங்கி இருந்தாலோ எளிதாக நீங்கள் கிரெடிட் கார்டை பெறலாம். வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல வங்கிகள் 20,000 ரூபாயை குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்துள்ளன. ஆனால் கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கி 25,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக நிர்ணயம் செய்துள்ளன. ஆக்ஸிஸ் வங்கியைத் தவிர மற்ற வங்கிகள் டெபாசிட் தொகைக்கு எந்த உச்ச வரம்பையும் நிர்ணயம் செய்யவில்லை. ஆக்ஸிஸ் வங்கி 25,00,000 ரூபாயை அதிகபட்ச டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்த தொகையை வைத்திருக்கும் குறைந்தபட்ச கால அளவும் வங்கிக்கு வங்கி வேறுபடுகிறது. நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்து 180 நாட்களுக்கு பிறகு ஐசிஐசிஐ வங்கியின் கோரல் அல்லது இன்ஸ்டண்ட் பிளாட்டினம் கார்டை பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும் நிறைய வங்கிகள் எந்த மாதிரியான டெபாசிட் என்று கூறவில்லை. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டெபாசிட்டை வைத்து ஆஸ்பயர் கிரெடிட் கார்டு பெறுவதற்கு `சென்ட் ஆஸ்பயர் டேர்ம் டெபாசிட்’ திட்டத்தில் இணைய வேண்டும்.

கூடுதலாக இந்த டெபாசிட்டின் கீழ் கிரெடிட் கார்டு வழங்கப்படாததற்கான வாய்ப்புகளும் உள்ளன. உதாரணமாக 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி டெபாசிட் வைத்து கிரெடிட் கார்டு வழங்குவதில்லை. பிளெக்ஸி டெபாசிட் மற்றும் வரி சேமிப்பு டெபாசிட் திட்டங்களுக்கும் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டை வழங்குவதில்லை. ஐசிஐசிஐ வங்கி மூன்றாவது நபர் மற்றும் நிறுவனத்தின் பார்ட்னர்களுக்கு டெபாசிட்டை வைத்து கிரெடிட் கார்டு வழங்குவதில்லை.

பெரும்பாலான வங்கிகள் டெபாசிட் தொகையில் 80% அளவுக்கு கிரெடிட் கார்டு கடன் வரம்பாக வழங்குகின்றன. அதாவது 1 லட்ச ரூபாயை நீங்கள் டெபாசிட் செய்திருந்தால் 80,000 ரூபாய் தொகை வரம்புள்ள கிரெடிட் கார்டை நீங்கள் பெறமுடியும். இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி 85 சதவீத டெபாசிட் தொகையை கிரெடிட் அளவாக வழங்குகின்றன. சில வங்கிகள் ஒட்டுமொத்த கிரெடிட் தொகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. அதாவது கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்கும் `அக்வா கோல்டு கார்டில்’ நீங்கள் அதிகபட்சமாக 12 லட்ச ரூபாய்க்கு மட்டுமே கிரெடிட் தொகையாக பெறமுடியும். மேலும் இந்த தொகையை விட அதிகமாக டெபாசிட் செய்தால் மட்டுமே இந்த கார்டை நீங்கள் பெறமுடியும். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆஸ்பயர் கிரெடிட் கார்டுக்கு ரூ.10 லட்சத்தை வரம்பு தொகையாக நிர்ணயித்துள்ளது.

கிரெடிட் காலம், கட்டணம், வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவை மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு உள்ளது போன்றே விதிக்கப்படுகின்றன. கிரெடிட் காலம் 30 நாள் முதல் 60 நாட்கள் வரை உள்ளன. தாமதமாக மாத கட்டணங்களை கட்டினால் வட்டி விதிக்கப்படுகின்றன. ஆனால் மற்ற கிரெடிட் கார்டுக்கும் பிக்ஸட் டெபாசிட்டை வைத்து வழங்கப்படும் கிரெடிட் கார்டுக்கு உள்ள ஒரே வித்தியாசம் நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் உங்களது பிக்ஸட் டெபாசிட் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஐசிஐசிஐ வங்கியில் நீங்கள் கட்டவேண்டிய தொகை உங்கள் டெபாசிட்டில் 95 சதவீதத்துக்கு மேல் இருந்தால் உங்களது டெபாசிட் தொகையிலிருந்து உடனே பிடித்தம் செய்யப்படும்.

மூன்று வகையான பிரிவினருக்கு பிக்ஸட் டெபாசிட்டை வைத்து கிரெடிட் கார்டு வாங்குவது மிக பயனுள்ளதாக இருக்கும். முதலில் எந்த கடனும் வாங்காதவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதை வைத்து உங்களது கிரெடிட் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளமுடியும். அடுத்து மிகக் குறைவான கிரெடிட் மதிப்பெண் கொண்டு கடன் வாங்குவதற்கு காத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளமுடியும். மூன்றாவதாக நிரந்தரமில்லாத வருமானம் உடையவர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in