

இந்திய மஹராஜா என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஏர் இந்தியா. பெரிய மீசையோடு தலைப்பாகையுடன் ஏர் இந்தியா விமான டிக்கெட்டில் கம்பீரமாக நிற்கும் மஹாராஜாவை பார்த்திருப்போம். ஆனால் மஹராஜவுக்கு நேரம் சரியில்லை. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு சமீபத்தில் முடிவெடுத்துள்ளது.
இதற்காக அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கப் போவதாக செய்திகள் உலாவுகின்றன. ஆனால் உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக இந்திய விமான சேவையில் ஏர் இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஏர் இந்தியா நிறுவனத்தை பற்றி சில தகவல்கள்….
வரலாறு
# டாடா சன்ஸ் நிறுவனரான ஜே.ஆர்.டி.டாடா 1932-ம் ஆண்டு டாடா ஏர் நிறுவனத்தை தொடங்கினார்.
# ஓர் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் அடைந்த லாபத்தின் மதிப்பு ரூ.60,000
# 1938-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
# இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது.
# 1947-ம் ஆண்டு இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவீத பங்கை வாங்கியது.
# ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உள்ள மொத்த விமான நிறுவனங்களின் எண்ணிக்கை 118
# இதில் சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 77
# விற்பனை மற்றும் ஒப்பந்த அடிப்படை உள்ள விமானங்களின் எண்ணிக்கை 22
# ஆண்டுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 1.8 கோடி
# இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா
# உள்நாட்டு பயண சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் 14.6 சதவீத இடத்தை வைத்துள்ளது.
# சர்வதேச அளவில் 41 இடங்களுக்கு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது.
# 2016-ம் ஆண்டு படி மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 20,956
# ஏர் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.52,000 கோடி
# 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.30,000 கோடி நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா தனியார்மயம்
1994: ஏர் கார்ப்பரேஷன் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விமான சேவை நடத்த அனுமதிக்கப்பட்டது.
2000-01: தேசிய ஜனநாயக கூட்டணி தனியார்மயமாக்கும் முடிவை கைவிட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளையும் ஏர் இந்தியா நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளையும் விற்க முடிவெடுத்தது.
2006-07: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது.இந்த ஆண்டில் இரு நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.770 கோடி
2012: தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்தது. ஆனால் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன.
2017: ஏர் இந்தியா நிறுவனத்தில் பங்கு விலக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.