

சொகுசு கார்கள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பெரிய நிறுவனங்கள் தற்போது தங்களது கவனத்தை பேட்டரி கார் தயாரிப்பில் திருப்பியுள்ளன. குறிப்பாக ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் தற்போது பேட்டரி கார் தயாரிப்பில் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. ஹைபிரிட் மாடல் மற்றும் பேட்டரி கார்களை தயாரிக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பேட்டரி கார்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்வதில் இந்நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. வோல்வோ நிறுவனம் தனது பேட்டரி கார்களை 2019-ல் இந்திய சாலையில் விற்பனைக்கு விடப் போவதாக அறிவித்துள்ளது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப சுற்றுச் சூழல் பாதுகாப்பு கார்களைத் தயாரிப்பதற்காக மேம்பட்ட தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் பயன்படுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அடுத்த 8 ஆண்டுகளில் உலகம் முழுவதும் தங்களது நிறுவனத்தின் பேட்டரி கார்கள் 10 லட்சம் அளவுக்கு இருக்கும். இந்த இலக்கை எட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக வோல்வோ ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டோம் வான் பான்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார். இதன் தொடக்கமாக இவி எனும் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளது வோல்வோ.
சொகுசு கார்களை தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. பேட்டரி கார் தொடர்பான ஆராய்ச்சிக்கு டெய்ம்லர் நிறுவனம் மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய மாடல் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பேட்டரியில் தயாராகும் வாகனங்களின் விற்பனை உலக அளவில் 15 சதவீதம் முதல் 25 சதவீத அளவுக்கு அதிகமாக இருக்கும். முழுவதும் பேட்டரியில் இயங்கும் வாகனத்தையும் பென்ஸ் தயாரிக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோலண்ட் போல்கர் தெரிவித்தார்.
இதேபோல ஆடி நிறுவனமும் மிக பிரம்மாண்டமான திட்டத்தை வைத்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கெனவே ஐ8 எனும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் ஐ3 மாடலைஅறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துக்குச் சொந்தமான இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான பினின்பரினா 360 முதல் 600 வோல்ட் வரையான பவர் டிரைனை வடிவமைத்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் அடுத்த ஆண்டில் ஐபேஸ் எனும் பேட்டரி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
புகையில்லா வாகனங்களின் வரவு மாசில்லா உலகை படைக்க பெரிதும் உதவும் என நம்பலாம்.