

ஜெர்மனியின் சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஈரானுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஈரான் மீதான சர்வதேச தடை நீங்கியதைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஈரான் சாலையில் ஓட உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போர்ஷே, ஸ்கோடா, சீயெட் உள்ளிட்ட பிராண்டுகளில் கார்களை தயாரிக்கிறது. ஃபோக்ஸ்வேகன், ஈரானில் உள்ள மமூத் கோத்ரா என்ற இறக்குமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அங்கு கார்களை விற்பனை செய்ய உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஆகஸ்ட் மாதம் முதல் ஈரானில் விற்பனையாகும் என தெரிகிறது. இதுவரையில் உலக வரைபடத்தில் விடுபட்டு போயிருந்த ஈரானிலும் தங்களது கார் விற்பனை 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தொடர்வது பெருமையாக இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தொடக்கத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுயான் மற்றும் பசாட் மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பிறகு அங்கு தேவைக்கேற்ப அனைத்து மாடல்களும் விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
1950-ம் ஆண்டிலிருந்து ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகள் ஈரானில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. 2000-வது ஆண்டில் சர்வதேச தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கார் ஏற்றுமதியை இந்நிறுவனம் நிறுத்தியது. ஈரானில் ஆண்டுக்கு 30 லட்சம் புதிய கார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் ஈரானில் தங்களது கார் சந்தையை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில் ஃபோக்ஸ்வேகனும் ஈரான் சந்தையில் தனது தயாரிப்புகளை களமிறக்குவதில் ஆர்வமாக உள்ளது.