14 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் ஆல்டோ!

14 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் ஆல்டோ!
Updated on
1 min read

மாருதி சுஸுகி 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது சிறிய ரக கார்களில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்திய சாலைகளில் அம்பாசிடரும், ஃபியட் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில் மாருதியின் வரவு பலரையும் கார் உரிமையாளராக்கியது. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் அடையாளமாக வலம் வந்தது மாருதி 800 எனும் சிறிய ரக கார்தான்.

ஒரு கட்டத்தில் இதை மாற்ற வேண்டும் என்ற நிலையில் இதற்கான முயற்சியை தொடங்கியது மாருதி. அத்தகைய மாற்றத்தின் விளைவாக 2000-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானதுதான் ஆல்டோ. மாருதி 800-ன் மேம்பட்ட ரகமாக அனைவரையும் கவரும் மாடலாக இது இருந்ததால், முந்தைய மாடல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்த போது அது வாடிக்கையாளர்களிடம் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு ஆல்டோவை மக்கள் பெருமளவு நேசிக்கத் தொடங்கியதுதான் காரணம். மாருதி 800 காரில் இருந்த அம்சங்களை விட பல விதங்களில் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டதாக ஆல்டோ இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.

2008-ம் ஆண்டில் விற்பனை 10 லட்சத்தைத் தொட்டது. 2012-ல் விற்பனை 20 லட்சமானது. 2016-ம் ஆண்டு இதன் விற்பனை 30 லட்சமாக உயர்ந்தது. மாதத்துக்கு சராசரியாக 22 ஆயிரம் ஆல்டோ கார்கள் விற்பனையாகின்றன. 2003-ம் ஆண்டு முதல் இந்த கார் முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் ஆல்டோ முதல் இடத்தில் இருக்கிறது. சில நிறுவனங்களின் ஓராண்டு ஒட்டுமொத்த விற்பனையை விட ஆல்டோவின் மாத விற்பனை அதிகமாகும்.

பிற நிறுவனத் தயாரிப்புகளை மிஞ்சும் வகையில் டிரைவருக்கு அருகாமையில் ஏர் பேக், ஆட்டோ கியர் வசதி கொண்ட கே 10 மாடல் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். கால் பகுதியில் இரண்டு பெடல் அதாவது ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் மட்டுமே கொண்ட இந்த கார், முதல் முறையாக கார் வாங்கி ஓட்டுபவரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மிகவும் சிறந்த வடிவமைப்பில் கட்டுபடியாகும் விலையில் இருப்பது இதன் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். மேலும் இதன் பராமரிப்புச் செலவும் மிகக் குறைவாக இருப்பதால் இதைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை அதிகமாகும்.

சிறந்த வடிவமைப்பு, கட்டுபடியாகும் விலை, எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு ஆகியவற்றைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய காராக விளங்கும் ஆல்டோ தொடர்ந்து முன்னிலை வகிப்பது சரிதானே?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in