

கடந்த வாரம் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் நன்கு விவாதிக்கப்பட்டது. மோடிக்கு இது 64-வது வெளிநாட்டு பயணம். பிரதமராக உள்ளவர்கள் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கும் மற்ற நாடுகளோடு கலாச்சார, வர்த்தக, பாதுகாப்பு உறவை வளர்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டு பயணம் செல்வார்கள். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தலைவருக்கு வெளிநாட்டு பயணம் அவசியம். ஆனால் பிரதமர் மோடி இதுவரை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதையும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் குறித்தும் விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.
உலகம் சுற்றும் வாலிபன் என வர்ணிக்கப்படும் பிரதமர் மோடி, இதற்கு முன்பு பிரதமராயிருந்தவர்களைக் காட்டிலும் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் இதனால் இவரது பயணத்தினால் ஏற்பட்ட பலன்கள் விவாதப்பொருளாகியுள்ளது.
பயனில்லாத அமெரிக்க பயணம்
மோடி பதவிக்கு வந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். மேடிசன் ஸ்கொயரில் பேச்சு, ஒபாமா சந்திப்பு என பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் பிறகு சமீபத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு நடந்த முதல் சந்திப்பு. ட்ரம்ப் ஆட்சியில் 7 நாடுகளுக்கு விசா தடை, ஹெச்1பி விசாவில் மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்தியாவை பொறுத்தவரை ஹெச்1பி விசா மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தப் பிரச்சினையால் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் என முக்கிய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய ஊழியர்களை வேலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கம் செய்து வருகின்றன. இன்ஃபோசிஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்க ஊழியர்களை பணிக்கு எடுக்கப் போவதாக கூறியிருந்தது. இந்தியாவின் மிக முக்கியத்துறையான தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் மோடியின் அமெரிக்க பயணத்தை பல்வேறு நிபுணர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் சுமார் 2,3 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ஹெச்1பி விசா குறித்து பேசவில்லை. சர்வதேச ஊடகங்கள் ராஜீய தோல்வி என்றே இதை வர்ணித்தன.
வர்த்தக நன்மையா?
பிரதமர் மோடி 12 நாடுகளுக்கு பயணம் செய்ததன் விளைவாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்து 3,093 கோடி டாலராக உயர்ந்துள்ளது என மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்நிய முதலீடு அதிகரித்ததற்கு மோடியின் வெளிநாட்டு பயணம் ஒரு காரணம். ஆனால் எந்தெந்த துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்பதை பார்க்கவேண்டும்.
மோடி பதவியேற்ற பிறகு சிவில் ஏவியேஷன், வங்கித்துறை, பாதுகாப்பு, ரீடெய்ல், பிராட்காஸ்டிங் போன்ற துறைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மோடி ஆட்சிக்கு வந்ததுமே பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்டன. அந்நிய முதலீடு அதிகரித்ததற்கு இது முக்கிய காரணம்.
முதன்முறையாக இஸ்ரேலுக்கு
பிரதமர் மோடியின் தற்போதைய இஸ்ரேல் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 70 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் முதல் பிரதமர் மோடி. 1950- ல் இஸ்ரேலை அங்கீகரித்தது. 1992-ம் ஆண்டு இஸ்ரேலுடன் முழு ராஜீய உறவையும் இந்தியா அங்கீகரித்தது. வர்த்தக உறவுகளும் மேம்பட்டன. இந்தியாவுக்கு அதிகம் ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் மட்டும் 3,100 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வர்த்தக உறவு தொடர்ந்து இருந்து வந்தாலும் இஸ்ரேலுடனான உறவு இலைமறைகாயாகவே இருந்து வந்தது. தற்போது மோடியின் பயணத்தின் மூலம் இஸ்ரேலுடனான உறவு வலுப்பட்டிருக்கிறது. விவசாயம், நீர்மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் சிறந்து விளங்கி வருகிறது. வெறுமனே ஆயுத வர்த்தக உறவுகள் மட்டுமல்லாமல் இதுபோன்று நாட்டுக்கு பயனுள்ளதையும் பெற்று வர வேண்டும்.
பிரதமர் மோடி பதவிக்கு வந்து முதன்முறையாக பூட்டான் நாட்டுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இலங்கை, நேபாளம் என அண்டை நாடுகள் முதற்கொண்டு மொத்தம் மூன்றாண்டுகளில் 64 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் 36 முறை மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார். கடந்த மூன்றாண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் 275 கோடி ரூபாய். இவ்வளவு செலவழித்து பல நாடுகளுக்கு சென்றதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் குறைவு.
ராஜீய ரீதியிலான உறவுகளைத் தவிர்த்து இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட பலன்கள் மிகக் குறைவு. நம்முடைய அண்டை நாடுகளுக்கு செல்லும் போது ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு நிதி உதவிகளை இந்தியா வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய அரசு இந்த நிதியை வழங்குவதில்லை. இதனால் வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகள் சீனாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்கின்றன.
`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என பல்வேறு முழக்கங்களை வெளிநாடுகளில் தொடந்து எழுப்பி வருகிறார். ஆனால் `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இதுவரை இந்தியாவுக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொழில் புரிவதற்கு எளிதான நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டில் இந்தியா ஒரு இடம் மட்டுமே முன்னேறி 130-வது இடத்தில் இருக்கிறது.
இதை பெரிய மாற்றமாக பார்க்கமுடியாது. தொழில்புரிவதற்கு அடிப்படைக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தாமல் வெறுமனே அமெரிக்காவில் பார்ச்சூன் 500 நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்திப்பதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும். பிரதமராக ராஜீய உறவுகளை மேம்படுத்துவது அவசியம். அதே நேரத்தில் வெறுமனே ராஜீய ரீதியிலான பயணங்கள் மட்டுமே இந்தியாவுக்கு நன்மையை தராது என்பதை மோடி புரிந்து கொள்ளவேண்டும்.
- devaraj. p@thehindutamil. co. in