சொந்த செலவுக்கு கார் அடமான கடன்

சொந்த செலவுக்கு கார் அடமான கடன்
Updated on
2 min read

சொந்த செலவுகளுக்காக கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் தனிநபர் கடனையே வாங்குகிறார்கள். மேலும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தனிநபர் கடன் எளிதாக கிடைக்கும். ஆனால் காரை அடமானம் வைத்து கடன் வாங்குவது ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். முறைப்படுத்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், சொந்தமாக தொழில்புரிவோர் என அனைவருக்கும் காரை அடமானம் வைத்து கடன் பெறுவது மாற்றாக இருக்கும். பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்த கடனை வழங்குகின்றன. மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வகை கடனை வழங்குகின்றன.

வங்கிகள் 13 முதல் 16 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இதைவிட வட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும். தனிநபர் கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகின்றன.

கடன் வகைகள்

மூன்று வகையான கடன் வகைகள் உள்ளன. முதலாவது தனிப்பட்ட நபர் ஒருவர், தன்னுடைய சொந்த பணத்தை வைத்து கார் வாங்கி இருந்தால், அதனை அடமானமாக வைத்து கடன் வாங்க முடியும்.இதில் அதிகபட்சம் காரின் சந்தை மதிப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். அடுத்து ஏற்கெனவே கடனில் கார் வாங்கி இருப்பவர்கள், அந்த கடனில் டாப் அப் செய்துகொள்ள முடியும். கடனை சரியான திருப்பி செலுத்தும் வாடிக்கையாளர்கள் எனில் காரின் மதிப்பில் அதிகபட்சம் 150 சதவீதம் வரை கூட கடன் பெற முடியும். காரின் மதிப்பை விட கூடுதல் கடன் பெறும்போது அந்த தொகைக்கு மட்டும் கூடுதல் வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

மூன்றாவதாக ஏற்கெனவே வாங்கி இருக்கும் கார் கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தரத்துக்கு ஏற்ப வங்கிகள் அதிகபட்சம் 150 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடனை முடிப்பது மட்டுமல்லாமல், கூடுதல் தொகையை இதர தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு வங்கியில் பாதி கடனை கட்டி முடித்த பிறகு வேறு வங்கிக்கு மாற்றுவதன் மூலம் அதிக பயன் அடைய முடியும். உதாரணத்துக்கு காருக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறீர்கள். மொத்த தவணைத் தொகை 60 மாதங்கள். நீங்கள் 30 மாதம் தவணையை சரியாக செலுத்திய பிறகு, உங்களது கடன் செலுத்தும் திறனை பார்த்து கொஞ்சம் குறைவான வட்டிக்கு கடன் கிடைக்கும்.

கார் மீதான அடமான வழங்கும் போது ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட சில துறையினருக்கு கடன் வழங்கும்போது வங்கிகள் எச்சரிக்கையாக இருக்கும்.

அளவுகோல்கள்

கார் என்பதை சொத்தாக கருதி வங்கிகள் கடன் வழங்குகின்றன. கடன் வழங்குவதில் காரின் மாடல் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு அதிக தொகை வழங்கப்படலாம். உதாரணத்துக்கு ஹோண்டா, மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களின் மாடல்களுக்கு அதிக தொகை வழங்கப்படலாம். தவிர சந்தையில் அதிகம் விற்கப்படாத கார்களுக்கு கடன் குறைவாக வழங்கப்படலாம்.

கார் அடமான கடனுக்கு 13 முதல் 16 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை 14 சதவீத வட்டி வசூலிக்கின்றன. மாறாக கேபிடல் பர்ஸ்ட், டிவிஎஸ் கேபிடல், ஹீரோபின் கார்ப் ஆகியவை சராசரியாக 17.50 சதவீதம் வட்டி வசூலிக்கின்றன.

வட்டி விகிதத்தை தவிர வங்கிகள் பரிசீலனை கட்டணம் மற்றும் காரை மதிப்பீடு செய்வதற்கான கட்டணம் ஆகியவையும் வசூலிக்கின்றன. அதேபோல கடனை முன்கூட்டி முடிக்க நினைத்தாலும் கட்டணம் இருக்கிறது. உதாரணத்துக்கு கடன் வாங்கி ஓர் ஆண்டுக்குள் கடனை முடிக்க நினைத்தால் 6 சதவீதம் கட்டணமாகும். இரு ஆண்டுகளுக்குள் முடிக்க நினைத்தால் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கி 3.25 சதவீதமும் டாடா கேபிடல் 5 சதவீத கட்டணமும் வசூலிக்கின்றன.

ஏன் கார் கடன்?

தனிநபர் கடனை விட கார் கடன் இரு வகைகளில் மேம்பட்டது. மூன்று நாட்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் கார் கடனை பெற்றுவிட முடியும். தனிநபர் கடனுக்கு இதைவிட அதிக காலம் ஆகும். அடுத்து தனிநபர் கடன் வாங்கும்போது உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பொறுப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இங்கு காரை அடமானமாக வைத்து வாங்குவதால் அந்த பிரச்சினையும் இல்லை. இரு வாய்ப்புகளையும் ஆராய்ந்தால் கார் கடன் குறைந்த வட்டிக்கு கிடைக்காது. ஆனால் அடிக்கடி பயன்படுத்தாதவரையில் இது சிறந்தது.

- nalinakanthi. v@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in