Last Updated : 03 Jul, 2017 10:57 AM

 

Published : 03 Jul 2017 10:57 AM
Last Updated : 03 Jul 2017 10:57 AM

எஸ்டிபி முறையை பயன்படுத்துவது எப்படி?

கணிக்க முடியாத பங்குச் சந்தையில் எஸ்ஐபி (systematic investment plan) முறையில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் பெறலாம். இந்த முறையில் முதலீடு செய்வதன் மூலம் பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கலாம். பங்குச் சந்தை உயர்வாக இருக்கும் போது குறைவான யூனிட்களும், சந்தை சரியும் போது அதிக யூனிட்களும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

எஸ்ஐபி முறையின் இன்னொரு வடிவம் எஸ்டிபி (Systematic Transfer Plan)ஆகும். எஸ்ஐபி முறை என்பது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப்படும். ஆனால் எஸ்டிபி என்பது வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக எடுத்து ஒரு மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்த பிறகு, அந்த பண்டில் இருந்து வேறு பண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவது ஆகும்.

எப்படி செயல்படுகிறது?

எஸ்டிபி முறையில் ஒரே நிறுவனங்களில் உள்ள மியூச்சுவல் பண்ட்களில் மட்டுமே முதலீடுகளை மாற்றிக்கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து, அந்த தொகையை சீராக வேறு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்களுக்கு மாற்றும் வசதி இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. இஎல்எஸ்எஸ் (லாக் இன் காலம் இருப்பதால்) பண்ட்களை தவிர மற்ற அனைத்து விதமான ஓபன் என்டட் பண்ட்களில் முதலீடு செய்து, வேறு பண்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

அதே சமயத்தில் ஒரு பண்டில் இருந்து வேறு பண்டுக்கு மாற்றும் போது வெளியேறும் கட்டணம் இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் மறக்க வேண்டாம். ஒவ்வொரு பரிவர்த்தனையும் விற்பனையாக கருதப்படும். உதாரணத்துக்கு ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து ஓர் ஆண்டுக்குள் வெளியேரும்பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதனால் லிக்விட் பண்ட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்ட்களில் முதலீடு செய்து, அதன் பிறகு எஸ்டிபி முறையில் முதலீட்டை மாற்றிக்கொள்ளலாம். இந்த வகை பண்ட்களில் வெளியேறும் கட்டணம் கிடையாது. ஒரு பண்டில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட பண்ட்களுக்கு தொகையை மாற்றிக்கொள்ள முடியும். தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் தொகையை மாற்றிக்கொள்ள முடியும்.

எஸ்டிபி வகைகள்

பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இருவகையான எஸ்டிபி வாய்ப்பினை வழங்குகின்றன. ஒன்று பொதுவான எஸ்டிபி, இன்னொன்று மூலதன உயர்வு எஸ்டிபி. பொதுவான எஸ்டிபியில் நிலையான தொகையை மாற்றிக்கொள்ள முடியும். மூலதன உயர்வு எஸ்டிபியில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு பண்டில் முதலீடு செய்து, அந்த முதலீட்டின் மீது கிடைத்த வருமானத்தையும் சேர்த்து மற்ற பண்டுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் வழக்கமான எஸ்டிபி-யை தவிர பிளெக்ஸி எஸ்டிபி உள்ளிட்ட சில வசதிகளையும் சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணத்துக்கு கோடக், ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சென்செக்ஸ் பிஇ மதிப்பை அடிப்படையாக வைத்து எஸ்டிபி வழங்குகின்றன. இதுபோல சில பிரத்யேக முறைகளை ஒவ்வொரு நிறுவனங்களும் பின்பற்றுகின்றன.

தவிர குரோத் திட்டங்களில் மட்டுமே எஸ்டிபி மூலம் தொகையை மாற்றிக்கொள்ள முடியும். டிவிடெண்ட் திட்டங்களில், டிவிடெண்ட் தொகையை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல எஸ்டிபி முறையில் ஒரு பண்டில் இருந்து மற்ற பண்டுக்கு முதலீட்டை மாற்றமுடியுமே தவிர, பண்டில் இருந்து வங்கி கணக்கு முதலீட்டை மாற்ற முடியாது. அதற்கு எஸ்டபள்யூபி (systematic withdrawal plan) முறையில் பண்ட்களில் இருந்து வங்கி கணக்குக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும்.

யாருக்கு ஏற்றது?

கையில் அதிக தொகை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் எஸ்டிபி முறையில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப முதலீடு செய்யப்பட்டிருக்கும். எஸ்டிபி முறையில் முதலீடு செய்வதன் மூலம் வங்கியில் பணத்தை வைத்திருப்பதைவிட அதிக வருமானத்தை பெற முடியும். ஓய்வினை நெருங்கும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சார்ந்த பண்ட் மூலம் கிடைத்த தொகையை ரிஸ்க் இல்லாத கடன் சார்ந்த பண்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

வரி விகிதங்கள்

வெளியேறும் கட்டணத்தை தவிர, வரி விகிதமும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். மொத்த தொகையை பங்குச்சந்தை சார்ந்த பண்ட்களில் முதலீடு செய்யும் பட்சத்தில், ஒரு வருடத்துக்குள் வெளியேறும் தொகை மீதான லாபத்துக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி (15%)செலுத்த வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு வெளியேறும்பட்சத்தில் வரி கிடையாது.

மொத்தமாக முதலீடு செய்வது கடன் சார்ந்த பண்டாக இருக்கும்பட்சத்தில், 36 மாதங்களுக்குள் வெளியேறினால், கிடைக்கும் லாபத்துக்கு, குறுகியகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். 36 மாதங்களுக்கு பிறகு மாற்றும் பட்சத்தில் பணவீக்க விகித சரிகட்டலுக்கு பிறகு 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x