பணத்துக்கு மாற்றாகும் கிப்ட் கார்டு

பணத்துக்கு மாற்றாகும் கிப்ட் கார்டு
Updated on
2 min read

மக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசுகள் வழங்குவது என்பது நமக்கு விருப்பமான ஒன்று. ஆனால் அவர்களுக்கு எது தேவை, எது பிடிக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த சூழ்நிலையில் கிப்ட் கார்டுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இதை வாங்குபவர்கள் அவர்களுக்கு பிடித்தமான வகையில் செலவு செய்துகொள்ளலாம்.

கிப்ட் கார்டுகளை, கார்டுகளாகவும் வாங்கலாம். எலெக்ட்ரானிக் முறையிலும் வாங்கலாம். கார்டுகளாக வாங்கும்பட்சத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் போலவே இருக்கும். இதற்கு கிப்ட் கார்டு எண் மற்றும் ரகசிய எண் இருக்கும். இந்த கார்டுகளில் நீங்கள் விரும்பும் தொகையை நிரப்பி உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்த கார்டுகளை பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். எலெக்ட்ரானிக் கார்டுகளை ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த கிப்ட் கார்டுகளை ஆன்லைன், வங்கிகள் அல்லது தனி நிறுவனங்களிடமிருந்து பெற முடியும். வங்கிகளிடம் இருந்து வாங்கும் கார்டுகள் விசா, மாஸ்டர் மற்றும் ரூபே ஆகிய கார்டு நிறுவனங்கள் வழங்கும். இந்த கார்டுகளை எந்த நிறுவனங்களிடமும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்கப்படும் கார்டுகள் அந்த நிறுவனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கார்டுகளில் பணம் இருக்கும் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் மறுபடியும் அதில் பணம் செலுத்தி பயன்படுத்த முடியாது.

கிப்ட் கார்டுகளை பொறுத்தவரை குறைந்த பட்ச தொகை, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். உதாரணத்துக்கு பேங்க் ஆப் இந்தியாவின் கிப்ட் கார்டுகளில் குறைந்தபட்ச தொகை ரூ.500, அதிகபட்ச தொகை ரூ.1 லட்சம். வங்கிகள் வழங்கும் கிப்ட் கார்டுகளை பயன்படுத்த நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தனிப்பட்ட நிறுவனங்களில் வழங்கப்படும் கிப்ட் கார்டுகள் இலவசமாக இருக்கும். ஆனால் வங்கிகள் வழங்கும் கிப்ட் கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம். உதாரணத்துக்கு வாடிக்கையாளராக இல்லாதவர்கள் 5,000 ரூபாய்க்கு மேல் கிப்ட் கார்டு வாங்கும்போது 50 ரூபாய் (வரிகளும் உண்டு) கட்டணத்தை கரூர் வைஸ்யா வங்கி வசூலிக்கிறது. இந்த கார்டுகளை உங்கள் வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ள முடியும்.நீங்கள் விரும்பும் வாசகத்தை அந்த கார்டில் அச்சடித்துக்கொள்ள முடியும்.

பொதுவாக இந்த கார்டுகளை ஓர் ஆண்டுக்கு பயன்படுத்த முடியும். சில கார்டுகள், உதாரணத்துக்கு பேங்க் ஆப் இந்தியாவின் கார்டுகளை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். நிறுவனங்களில் வாங்கும் கார்டுகளை குறுகிய காலத்துக்கே பயன்படுத்த முடியும்.

உங்களது கார்டுகளில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வாடிக்கையாளர் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலமும் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். சில வங்கிகளில் ஏடிஎம் மூலமும் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன.

வங்கிகள் வழங்கும் கார்டுகளின் காலம் முடிந்த பிறகும் அதில் இருக்கும் இருப்பு தொகையை திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு பேங்க் ஆப் பரோடா ரூ.100-க்கும் மேற்பட்ட தொகை இருப்பின் அந்த தொகையை திருப்பி வழங்கும். ஆனால் கார்டின் செல்லுபடி காலம் முடிந்த மூன்று மாதங்களுக்குள் இருப்பு தொகையை பெற வேண்டும். இதற்கு கட்டணமும் உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்களின் கார்டுகள் உபரித் தொகையை திருப்பி வழங்காது. உங்களது கார்டுகளின் எவ்வளவு தொகை இருக்கிறது, எப்போது கார்டுகளின் காலம் முடிவடைகிறது என்னும் தகவலை கண்காணிப்பதற்காக பலவிதமான செயலிகள் இருக்கின்றன.தவிர உள்ளிடம் இருக்கும் கிப்ட் கார்டுகளை ஆன்லைன் மூலம் விற்கவும் முடியும்.

கிப்ட் கார்டு பயன்படுத்துபவர்கள் சில அடிப்படை பாதுகாப்பு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல, கிப்ட் கார்ட் தொலைந்தாலும் டோல் பிரீ எண்ணுக்கு அழைத்து புகார் பதிவு செய்ய வேண்டும். அந்த கார்டில் இருக்கும் தொகை வேறு புதிய கார்டுக்கு மாற்றித் தரப்படும். ஆனால் சில நிறுவனங்கள் வழங்கும் கிப்ட் கார்டுகளில் பின் நம்பர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி இருக்காது. இந்த கார்டுகள் பயன்படுத்த எளிதாக இருந்தாலும், உங்கள் கார்டு தொலையும் பட்சத்தில், இருப்பு தொகையினை திரும்ப பெற முடியாது.

- meera.siva@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in