

ஆட்டோமொபைல் துறையில் முக்கிய விவாதப்பொருள் இரண்டு விஷயங்கள்தான். முதலாவது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேட்டரி வாகனங்கள் தயாரிப்பு, அடுத்தது டிரைவர் தேவைப்படாத தானியங்கி கார் தயாரிப்பு. இப்போது பெரும்பாலும் அனைத்து முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுமே டிரைவர் தேவைப்படாத தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஐரோப்பாவில் தானியங்கி கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீடிகாம் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த ராணுவ பாதுகாப்பு கருவி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கரம்பா பாதுகாப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் அதி நவீன மேம்பட்ட டிரைவர் தேவைப்படாத கார்களை தயாரிக்க முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியிலும், அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் வர்த்தக ரீதியில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது வீடிகாம்.
தானியங்கி கார்கள் அனைத்தும் வரைபட வழிகாட்டுதலின்படி செயல்படுபவை. இவை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இவ்விதம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கரம்பா நிறுவனத்தின் தொழில்நுட்பம் உதவும் என வீடிகாம் நம்புகிறது.
வெளிப்புறத்திலிருந்து காரின் சாஃப்ட்வேர் பாதிக்கப்படாமலும், காரினுள் உள்ள மின்னணு கருவிகள் பாதிக்கப்படாமலும் இருப்பதற்கான நுட்பத்தை கரம்பா நிறுவனம் அளிக்கும். இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தயாரித்து அளிக்கும் வாகனம், சைபர் தாக்குதலால் பாதிக்கப்படாத வாகனமாக இருக்கும். அதேசமயம் வர்த்தக ரீதியில் சந்தைக்கு வரும் முதலாவது வாகனமும் இதுவே.
வீடிகாம் டெக் இது வீடிகாம் பொது அறக்கட்டளையின் வர்த்தக துணை நிறுவனமாகும். இந்த அறக்கட்டளை உறுப்பினர்களாக ரெனால்ட், பியூஜியாட், வாலேவ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.முதல் கட்டமாக இந்த வாகனங்கள் பிரான்ஸின் வெர்செய்லி எனுமிடத்தில் இயக்கிப் பார்க்கப்பட உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்காக குறைந்தபட்சம் 7 கி.மீ. சுற்றளவுக்கு இயக்கப்பட உள்ளது.
முற்றிலும் அதாவது அனைத்து பகுதியிலும் இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத கார்களை இயக்குவது 2021-ல்தான் சாத்தியமாகும் என்று கரம்பா நிறுவனத்தின் செயல் தலைவர் டேவிட் பார்ஸிலாய் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கார்களின் வரவு, வாகன பாதுகாப்பை மேம்படுத்துவதோடு பத்திரமான பயணத்துக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.