

சேதன் பகத். இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். இவரது நாவல்கள் பற்றி விவாதிப்பது, பேசுவதுதான் அறிவுஜீவித்தனமாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் என நம்புவோர் அதிகம்.
எழுத்தாளருக்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் ஏழாம் பொறுத்தம்தான். சேதன் பகத் இப்பகுதியில் இடம்பெறுவது தவறுதலாக அல்ல. அவர் எடுக்கும் புதிய முயற்சிதான் அவரை இப்பக்கத்துக்குத் தள்ளியுள்ளது. ஆம், எழுத்திலிருந்து தற்போது பேட்டரி கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கப் போகிறார் அவர். அடிப்படையில் அவர் பொறியியல் பட்டதாரி என்பது அவரது வாசகர்கள் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐஐடி டெல்லியில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் தற்போது எழுத்துத் துறையிலிருந்து ஆட்டோமொபைல் துறைக்கு மாற்றப் போவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இவரைப் பின்தொடர்வோர் 87 லட்சம் பேர் இவரது புதிய ஸ்டார்ட் அப் முயற்சியை அறிந்து கொள்வதில் இத்தனை பேரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தனது திட்ட விவரத்தை அவர் வெளியிடவில்லை. எப்பொழுது ட்விட்டரில் தகவலை பதிவிட்டுவிட்டாரோ, அதற்கு முன்பே அவரது மனதில் இத்திட்டம் விரிவாக ஓடியிருக்கும். இதன் விவரத்தை அவர் விரைவில் அறிவிப்பார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார் தயாரிக்கச் சென்றாலும் எழுதுவதை நிறுத்தப் போவதில்லை என்று இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார் சேதன்.