

அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638) |
விமானப் பயணத்தின் பொழுது விமானத்தினுள் காற்றழுத்தம் குறைந்தால் என்ன செய்ய வேண்டும், விமானம் தண்ணீரில் இறங்கினால் என்ன செய்வது என விமானப் பணிப்பெண்கள் செயல் விளக்கம் செய்வதைப் பார்த்து இருப்பீர்களே!
சில விமானங்களில் இதையே உங்கள் இருக்கை யின் முன்னுள்ள திரையில் குறும்படமாகவாவது பார்த்திருப்பீர்கள்!
விமானத்தினுள் இவை விளக்கப்படும் பொழுது நம்மில் எத்தனை பேர் அதனைக் கவனிக் கிறோம்? கடவுள் புண்ணியத்தில் விபத்துகள் குறைவாகத்தான் நடக்கின்றன. அதனால் நல்ல வேளையாக அவர்கள் சொல்பவற்றை உபயோகப்படுத்தும் சாத்தியக்கூறும் குறைவே!
ஆனால் பல வருடங்களாக எந்த விமானமும் நீர்நிலையில் இறங்கி பயணிகள் உயிர் காக்கும் ஜாக்கெட் அணிந்து தப்பியதில்லை என்பதற்காகவோ, அல்லது ஆங்கிலம், இந்தி என மாற்றி மாற்றிச் சொன்னாலும் பெரும்பாலானோர் அதை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை என்பதாலோ இந்த வழக்கத்தை விட்டுவிட முடியுமா?
அலுவலகங்களிலும் இதே கதைதான்! பெரும்பாலான அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது உதவியாளர்களின் கருத்துகளைக் கேட்கும் நடைமுறை இருக்கும், இருக்க வேண்டும்! பல அலுவலகங்களில், வாரம் ஒரு முறை, காலையில் அலுவல்களைத் தொடங்குவதற்கு முன்பாக ஒரு சிறு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது உண்டு. இதன் நோக்கம் என்ன? கோப்புகளின் வழியாக பிரச்சினைகளை ஆராய்ந்து நேரத்தை வீணடிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் நேருக்கு நேர் அமர்ந்து பேசி, விரைவாகத் தீர்வுகள் காண்பதுதானே!
சில மேலாளர்களுக்குப் பணி நுணுக்கங்கள் தெரியாது, சாமர்த்தியம் போதாது. ஆனால் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்! இதற்கான காரணம்? ‘இவர் என்ன சொல்வது, நான் என்ன கேட்டுக் கொள்வது' எனும் மனப்பாங்கு! இப்படிப்பட்டவர்கள் யோசனை என்ன என்பதைப் பார்க்காமல், யார் அதைச் சொல்கிறார்கள் என்பதைப்பொறுத்து, அதனைக் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டார்கள்! நல்யோசனை சொல்ல வந்தவரோ, `மேலாளருக்கு அவ்வளவு திமிரா, சரி அவர் வழியிலேயே சென்று எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என விட்டு விடுவார்!
கேட்பவர் உதாசீனப்படுத்தினால், சொல்பவருக்கு எரிச்சலும் கோபமும் வருவது இயற்கையே! ஆனால் தவறு எனத் தெரிந்தும் சுட்டிக் காட்டாவிட்டால் அது நிறுவனத்தையும் அதைச்சார்ந்த எல்லோரையும் அல்லவா பாதிக்கும்?
`மாணவன் தேர்வில் தேறவில்லை என்றால், ஆசிரியர் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று தான் பொருள்’ எனக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் போலவே, மேலதிகாரிகளிடம் பணிவாகவும், ஏற்றுக்கொள்ளும் படியாகவும் சலித்துக் கொள்ளாமல் சொல்வது சம்பளம் பெறும் அலுவலரின் கடமை இல்லையா? ஐயா, நம் பிள்ளை ஆபத்தான வழியில் சென்றால் கடனே என்று கொஞ்சம் சொல்லிப் பார்த்துவிட்டு, பின் விட்டுவிடுவோமா என்ன?
அமைச்சரோ, அதிகாரியோ சொல்வதை இகழ்ந்து, தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அவனுக்குச் சலிக்காமல் நல்வழி கூறுதல் சொல்பவரின் கடமையாகும் என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com