Published : 13 Jun 2016 11:04 am

Updated : 14 Jun 2017 13:02 pm

 

Published : 13 Jun 2016 11:04 AM
Last Updated : 14 Jun 2017 01:02 PM

உன்னால் முடியும்: தொழிலுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன’

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் எஸ்.கே.பாபு. விவசாயக் குடும்பம், பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆனால் இன்று நூறு பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்து வரும் தொழில் முனைவோராக நிற்கிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வருமானத்துக்கான வாய்ப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தொழில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர், இயற்கை சுற்றுலா என பல முனைகளில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். சூழலியல் சார்ந்த தனது தொழிலில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி'யில் இடம்பெறுகிறது.

எங்களுக்கு சொந்தமாக ஏழு ஏக்கர் நிலம் உள்ளது, பாக்கு, தென்னை, சப்போட்டா என மர வகைகளை அதில் பயிரிட்டுள்ளோம். அப்பாவுக்கு நான் படித்து ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது ஆசை. ஆனால் நான் சரியாக படிக்காத காரணத்தால் பத்தாவதுக்கு மேல் தாண்டவில்லை. பிறகு சில நாட்கள் விவசாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை வட மாநிலத்தில் இருக்கும் எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கு பெரிய இலையில் பிளேட் போல செய்திருந்தனர். அந்த இலையில் செய்வது போலவே நாம் பாக்கு மட்டையில் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.

ஏனென்றால் பாக்கு மட்டைகள் இலையை விடவும் அதிக வலுவானது. மேலும் எங்களது நிலத்திலிருந்து கிடைக்கும் பாக்கு மட்டை கழிவுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. இந்த யோசனை வந்த பிறகு பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கினேன்.

அப்போது இங்கு பேப்பர் பிளேட்தான் புழக்கத்தில் இருந்தது. அதைவிடவும் பாக்கு மட்டையில் தட்டு செய்வது பல வகைகளில் பயன்தரக்கூடியது என்பதை புரிந்து கொண்டேன். புதுச்சேரி ஆரோவில் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரோடு சேர்ந்து புதுச்சேரியில் முதல் தொழிலகத்தை தொடங்கினேன். எங்களது முயற்சியிலேயே கையால் அழுத்தும் இயந்திரங்களையும் உருவாக்கினோம்.

இந்த முயற்சிகளுக்கு புதுச்சேரி அரசின் உதவிகள் கிடைத்தது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து, தயாரிக்கச் சொல்லி நாங்களே வாங்கிக் கொண்டோம். வட இந்திய சந்தைதான் எங்களது இலக்கு. குஜராத், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் விருந்துகள் பெரும்பாலும் பஃபே முறையில்தான் இருக்கும். இலை விரித்து பரிமாறுவதெல்லாம் கிடையாது.

எனது உறவினர்கள் மூலம் ஆர்டர் பிடிப்பது, கண்காட்சிகள், கேட்டரிங் ஆட்களை பிடித்து அங்கிருந்து ஆர்டர்களை வாங்கினேன். இதற்கடுத்து கோயம்புத்தூரிலேயே இன்னொரு தொழிலகத்தை தொடங்கினேன். இங்கு முழுக்க முழுக்க ஹைட்ராலிக் இயந்திரத்தை வடிவமைத்தோம். இதற்கு பிறகு வடமாநில சந்தை தவிர, உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தினேன்.

இந்தத் தொழிலின் மூலப் பொருளான பாக்கு மட்டை ஒரு சீசனுக்குத்தான் கிடைக்கும். அதிலும் மரத்திலிருந்து பழுத்து உதிரும் மட்டைகளில் மட்டுமே தயாரிக்க முடியும். எங்களது நிலம் தவிர வெளி ஆட்களிடமிருந்தும் மட்டைகளை விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறேன். இந்த மட்டைகளை கழுவி, ஈரப்பதமான நிலையில் பிளேட்டுகளாக தயாரிக்க வேண்டும். பிறகு இதை உலரவைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.

தொழிலில் கிடைத்த தொடர்புகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து தயாரிக்க வைப்பது, மற்றும் தொழில் முறையிலான பயிற்சி வகுப்புகள் என வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மையத்தின் மூலம் நான்கு ஆண்டுகள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொழிலில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன்.

தற்போது இது தவிர வாழை நார் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், தேங்காய் சிரட்டையிலிருந்து பொருட்கள், பாக்கு மட்டையில் ஸ்பூன் என பல புதிய முயற்சிகளிலும் இறங்கியுள்ளேன் என்றார். மேலும் எங்களது நிலத்திலேயே தங்கும் விதமாக இயற்கை சுற்றுலாவையும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறேன் என்றார்

தற்போது தென்னிந்தியாவிலேயே பஃபே முறையிலான உணவு கலாச்சாரம் வளர்ந்து வருவதால் எதிர்காலத்தில் உள்ளூர் சந்தை, வட இந்திய சந்தை, உலகச் சந்தை என இந்த தொழிலுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். எத்தனை பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்த தயாராக இருக்கிறோம்.?

மூலப் பொருளான பாக்கு மட்டை ஒரு சீசனுக்குத்தான் கிடைக்கும். எங்களது நிலம் தவிர வெளி ஆட்களிடமிருந்தும் மட்டைகளை விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறேன். இந்த மட்டைகளை கழுவி, ஈரப்பதமான நிலையில் பிளேட்டுகளாக தயாரிக்க வேண்டும். பிறகு இதை உலரவைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.

maheswaran.p@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


எஸ்.கே.பாபுஎஸ்.கே.பாபுவின் விவசாயம்வட இந்திய சந்தைபஃபே முறை சந்தைமகளிர் சுய உதவிக் குழுதொழில் முறை பயிற்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author