

2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றதற்கு மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு மந்திரம்தான் காரணம்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகளும் கறுப்புப் பண பதுக்கல் குற்றச்சாட்டுகளையும் மோடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். கறுப்புப் பணம் முழுவதையும் ஒழிப்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்தியர்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அதன் பலனாய் ஆட்சியும் அமைத்தார். ஆட்சிக்கு வந்த பிறகு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் மீட்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் எவ்வளவு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு போதிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மோடி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் எப்போது இந்தியர்களின் வங்கி கணக்கில் எப்போது ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரியவில்லை.