Last Updated : 05 Jun, 2017 11:27 AM

 

Published : 05 Jun 2017 11:27 AM
Last Updated : 05 Jun 2017 11:27 AM

இந்தத் தடை அவசியமா?

கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட ஒரு உத்தரவு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளை கொல்வது தொடர்பான இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இறைச்சி பிரியர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த நூதனமான அரசாணை இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு மட்டுமல்ல, பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இந்த உத்தரவால் மாட்டு இறைச்சி சார்ந்த ரூ. 1 லட்சம் கோடி சந்தை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சந்தைகளிலிருந்துதான் இறைச்சிக்கான மாடுகள் வாங்கப்படுகின்றன. விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாடுகளை வாங்குவது தடை விதிக்கப்பட்டுள்ளது. வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் ஒப்பந்த நகலை உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு இதுவரை சுமுகமாக நடைபெற்று வந்த மாட்டுச் சந்தை வர்த்தகத்தை முடக்குவதாக அமைந்துள்ளது.

பொதுவாகவே பால், இறைச்சி, தோல், விவசாயம், பாரம் சுமத்தல் போன்ற பணிகளுக்கு பழக்கப்படுத்திய விலங்குகளுள் மாடுகள் பிரதான இடத்தை பிடித்துள்ளன. இந்தியாவிலும் கால்நடை பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இறைச்சிக்காக பசுக்களை கொல்வது குற்றம் என்று பல மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. ஆனால் மற்றவகை மாடுகளை அவ்விதம் கொல்வதற்குத் தடை இல்லை. ஆனால் தற்போது மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளையும், ஒட்டகம் உட்பட பலவித கால்நடைகளை விற்பதையும் வாங்குவதையும் குற்றம் என்று கூறியுள்ளதால், புதிய சர்ச்சை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார பார்வை

மாடுகளை கொல்வதை தடுக்கும் சட்டத்தை இயற்றுவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கொள்கை வழிகாட்டு நெறிகளில் ஒன்று இவ்வாறு கூறுகிறது: “விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பை விஞ்ஞானபூர்வமாக வளர்க்கவேண்டும். இதில் குறிப்பாக பால், மற்றும் பாரம் சுமக்கும் கால்நடைகளை பாதுகாத்து வளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.” இதனை பயன்படுத்தி 1955-ல் உத்திரப்பிரதேச மாநில அரசு பசுக்களை கொல்வதை தடை செய்ய சட்டம் இயற்றியது. அதே ஆண்டில் பீகார் அரசு அனைத்து வகை மாடுகளையும் கொல்வதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது. இந்த இரண்டு சட்டங்களும் இந்தியாவின் உச்சநீதி மன்ற விசாரணைக்கு வந்த போது, உத்திரபிரதேச மாநில சட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பீகார் மாநில சட்டத்தில் பசுக்கள் நீங்கலாக உள்ள மற்ற கால்நடைகளை கொல்வதைத் தடுக்கும் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியதை கவனிக்கவேண்டும். கால்நடைகளைக் கொல்வதை தடை செய்யும் சட்டங்களை ஆராயும் போது சில அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று, இந்திய அரசியல் சட்டத்தின் கொள்கை வழிகாட்டு நெறிகள் கால்நடைகளை பாதுகாக்கவேண்டும் என்பது. இரண்டு, பயன்பாட்டிற்கு இல்லாத கால்நடைகளை வைத்துகொள்வதால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு. மூன்று, உணவுக்காக இறைச்சியை பயன்படுத்தும் மக்களின் அடிப்படை உரிமை, தோல் தொடர்பான தொழிலில் உள்ளவர்களின் வாழ்வாதாரம்.

எல்லா வகை கால்நடைகளையும் கொல்வதற்கு தடை விதிப்பது பலவிதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். முதலில் பலரின் உணவு அளவு குறையும். இரண்டு தோல் பதனிடும் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குறைந்த அளவு மேய்ச்சல் நிலங்களும், மாட்டு தீவனமும் இருக்கும் போது தேவையற்ற வயதான கால்நடைகளை பராமரிப்பதால், மற்ற பால் கொடுக்கும், பாரம் சுமக்கும் மாடுகளின் உணவு குறைந்து, கால்நடை பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே ஒரு குறிப்பட்ட வயது தாண்டிய மாடுகளை கொல்வதை தடைசெய்வது ஏற்புடையதாக இல்லை என்று இந்த தீர்ப்பு கூறுகிறது.

இதில் பசுக்களுக்கு மட்டும் ஏன் உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்தது? பெண் எருமைகளுடன் ஒப்பிடும்போது, பசுக்களின் பால் கொடுக்கும் திறன் குறைவு. அதே நேரத்தில் திடமான காளைகளை பெற்றெடுக்க பசுக்கள் அவசியம். பசுக்களை கொல்வதற்கு தடை இல்லை என்றால் அவை மிக சிறிய வயதில் கொல்லப்படும். இதனைத் தடுக்க ஒட்டுமொத்தமாக பசுக்களை கொல்வதை தடைசெய்யவேண்டியுள்ளது என்று இந்த தீர்ப்பு கூறுகிறது.

கால்நடைகளின் எண்ணிக்கை

அண்மையில் ஏ. வைத்தியநாதன் என்ற பொருளியல் அறிஞர் கால்நடை பொருளாதாரத்தை பற்றிய கட்டுரையில் 1951 முதல் 2007 வரையிலான கால்நடை புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

சீமை மற்றும் உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 15.5 கோடியிலிருந்து 19.9 கோடியாக அதாவது, 28% ஆக உயர்ந்துள்ளது. அதே காலத்தில் அதிக பால் ஈட்டும் எருமையின் எண்ணிக்கை 4.34 கோடியிலிருந்து 9.19 கோடியாக அதாவது 111% உயர்ந்துள்ளது. முன்பு இருந்ததை விட ஆண் மாடுகள் மற்றும் ஆண் எருமைகளின் எண்ணிக்கை பெண் மாடுகள் மற்றும் பெண் எருமைகளை விட குறைவாக உள்ளது.

ஆண் மாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் வேளாண் மற்றும் போக்குவரத்து துறைகளில் அவற்றின் தேவை குறைந்தது தான். பால் கொடுப்பதால் பெண் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவற்றிலும் சீமை மாடுகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை அதிகமாவது இந்திய மாடுகளைவிட இவை அதிக பால் கரப்பதுதான்.

நீண்ட காலமாக பசுக்களை இறைச்சிக்காக கொல்வதை தடுக்கும் சட்டம் உள்ள தமிழகத்தையும், இச்சட்டம் இல்லாத கேரளத்தை ஒப்பிட்டு பார்ப்பது இன்னும் சுவாரசியமான தகவல்களை அளிக்கின்றன. 1997 மற்றும் 2012 ஆண்டுகளின் கால்நடை புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது கேரளாவில் கால்நடைகளின் எண்ணிக்கை 18 சதவீதமும் தமிழகத்தில் 19 சதவீதமும் குறைந்துள்ளன. கேரளாவில் அதிக மேய்ச்சல் நிலங்கள் இல்லை, வேளாண்மை போக்குவரத்தில் அதிகமாக மாடுகளை பயன்படுத்துவதில்லை, இருந்தபோதிலும் தமிழகத்தில் அதிகமாக கால்நடையின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உள்நாட்டு மாடுகளின் தொகை கேரளாவில் 44% உயர்ந்த போது தமிழகத்தில் 56% குறைந்துள்ளது. எருமைகளின் எண்ணிக்கை கேரளாவில் 8% மட்டுமே குறையும் போது தமிழகத்தில் 72% குறைந்துள்ளது. சீமை மாடுகளின் எண்ணிக்கை கேரளாவில் 36% குறையும் போது தமிழகத்தில் 81% அதிகமாகியுள்ளது. மேலும் பெண் மாடுகளின் எண்ணிக்கை தற்போது கேரளாவில் 67%மும் தமிழகத்தில் 82% என உள்ளன.

இரு மாநிலங்களிலும் இருவேறு போக்குகள் தெரிகின்றன. ஒன்று கேரளாவைவிட பெண் மாடுகளை அதிகமாக தமிழகம் கொண்டுள்ளது. மேலும் பால் உற்பத்திக்கு சீமை பசுக்களை அதிகம் பயன்படுத்தும் தமிழகம், ஆனால் உள்நாட்டு பெண் மாடுகளையும் பெண் எருமைகளையும் அதிகமாக பால் உற்பத்திக்கு கேரளா பயன்படுத்துகிறது.

மாடுகளை இறைச்சிக்காக கொல்லும் தடை சட்டத்தைவிட ஒவ்வொரு மாநிலத்தின் விவசாய மற்றும் கிராம பொருளாதாரம், பால் உற்பத்தி ஆகிய காரணிகளே கால்நடை பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறன. பால் மட்டுமே மாடுகளின் ஒரு பெரிய உற்பத்தி பொருளாக இருப்பதால் ஆண் மாடுகளைவிட பெண் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கேரளா போன்ற மாநிலத்தில் உள்நாட்டு பெண் மாடுகள், எருமைகள் அதிக பால் கொடுப்பதாக இருந்தால் அவை அதிகமாக வளர்த்தெடுக்கப்படும், மாறாக தமிழகம் போன்ற மாநிலங்களில் பால் உற்பத்திக்கு சீமை மாடுகளை பயன்படுத்துவது போல. மாட்டு தீவனம் தட்டுபாடு உள்ளதால் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகளை கொல்வதன் மூலம் அதிக பயன் அளிக்ககூடிய மாடுகளுக்கு அத்தீவனத்தை பயன்படுத்தி மக்களின் பால் மற்றும் உணவு தேவையை செம்மையாக பூர்த்தி செய்யமுடியும்.

மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசின் தடையானது ஜீவகாருண்ய நடவடிக்கையா அல்லது இதில் உள்ள பொருளாதார பின்னணியை அரசு உணரவில்லையா என்பது புரியவில்லை.விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகளின் பங்களிப்பு கணிசமானது. இதுபோன்ற அதிரடி உத்தரவை போட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி வேறு நடவடிக்கைகளை சந்தடியின்றி மத்திய அரசு நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நூதன உத்தரவின் பின்னணியில் எத்தகைய திட்டம் எவ்வித பரபரப்புமின்றி நிறைவேற்றப்பட போகிறதோ என்ற ஐயமும் எழாமலில்லை.

-seenu242@gmail. com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x