

எனக்குப் பரிச்சயமான ஒருவர். நண்பர் என்று சொல்ல மாட்டேன்.தெரிந்தவர், அவ்வளவு தான். தடாலடிப் பேர்வழி. கடகடவெனப் பேசுவார். யார் அவர் என்கிறீர்களா?
உங்களுக்கும் தெரிந்த குமார்தான்!
ஒரு முறை என்னிடம் வந்த குமார், தான் திருப்பதி செல்வதாகவும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.
அவர் எனக்கு அதிகப் பழக்கமில்லை. இருந்தாலும் ஒரு பெரிய நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.
அவர்கள் எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், குமாரை நன்றாக உபசரித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்துக் காலை 6 மணிக்கு எனக்கு அந்த விடுதியிலிருந்து கைபேசி அழைப்பு வந்தது. குமார் அங்கே மீண்டும் வந்ததாகவும், 4 பேர் அவருடன் தங்கி இருந்ததாகவும், இரண்டு அறைகளின் சாவியைக் கொடுக்காமலேயே குமார் சென்று விட்டதாகவும் புகார்!
நான் பலமுறை முயன்றும், குமார் எனது கைபேசி அழைப்புகளை எடுக்கவே இல்லை! கடைசியில் 'இது என்ன பெரிது, மாற்றுச் சாவி இல்லாமலா இருக்கும்' என அலட்சியமாக பேசினார்.பின்னர் என்ன? எனக்குத் தேவையற்ற தலை குனிவு!
`உங்களை மக்கள் மதிக்க வேண்டுமெனில் உங்கள் கூட இருப்பவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பது யார் தெரியுமா? அதிகாரத்தின் உச்சியிலிருந்த அமெரிக்க முன்னாள்அதிபர் பராக் ஒபாமா தானுங்க அப்படி அங்கலாய்த்திருப்பது!
நீங்கள் யார் யாரிடம் நட்போ, தொடர்போ வைத்துள்ளீர்கள் என்பது முக்கியமானது தான்.
ஆனால் அதை விட முக்கியமானது, ஆபத்தானது , உங்களிடம் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்பவர்கள் யார் யார் என்பது!
இடைத் தரகர்களின் ஆட்ட பாட்டம் நீங்கள் அறியாததா என்ன?
1990 களில், 30%, 36% வட்டி என கவர்ச்சியான விளம்பரங்கள் வருமே ஞாபகம் இருக்கிறதா? யார், யாரோ நிதி நிறுவனம் தொடங்கிய காலகட்டம் அது!
நம்ம குமாரும் ஒரு நிதி நிறுவனம் தொடங்கி பணம் திரட்ட, மன்னிக்கவும், சுருட்டத் திட்டம் போட்டார்.ஆனால் முதலீட்டார்களை நம்ப வைப்பது எப்படி?
எங்களின் நண்பர் ஒருவர் ஒரு வங்கியின் மேலாளர்.அவரிடம் வந்த குமார், தனக்கு அவ்வங்கியின் இயக்குநர் ஒருவரிடம் நெருங்கிய பழக்கம் என்று புருடா விட்டார்!
ஆனால் இதை மற்றவர்கள் நம்ப வேண்டுமே? கைபேசியும், அதிலேயே காமிராவும் வந்திராத காலம் அது!அதனால், தான் போகும் இடங்களுக்கு ஒரு நல்ல புகைப்படக் காரரையும் கூடவே அழைத்துச் செல்வார் குமார்! அந்த இயக்குநரிடம், அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் நேரம் பார்த்து ,குமார் பேச்சுக்கொடுப்பார்,சிரிப்பார், வலிய கை கொடுப்பார்!
உடனே கூடவே கூட்டிச் சென்ற புகைப்படக்காரர் படபடவென பத்து புகைப்படங்கள் எடுத்துத் தள்ளுவார்!
அப்புறம் என்ன,அவற்றைக் குமார் நம்ம வங்கி மேலாளரிடம் காண்பித்து, தான் வங்கி இயக்குநருக்கு நெருங்கியவன் என நம்ப வைத்து அந்த வங்கி மேலாளரை அவரது நிதி நிறுவனத்தை ரிப்பன் வெட்டித் தொடங்க வைத்தார்!
அந்நிறுவனம் அதிவிரைவில் மூழ்கியபோது அந்த வங்கி மேலாளரின் பெயரும்,வங்கி இயக்குநரின் பெயரும் கெட்டன !
இங்கே நடந்த தவறு என்ன? குமார் போன்ற தவறான ஆளை அருகில் வரவிட்டது தானே?
அது சரி, நண்பன் என்பவன் தவறாவனாக இல்லாவிட்டால் மட்டும் போதுமா?
கல்லூரி நாட்களில், பள்ளி நாட்களில் பார்த்து இருப்பீர்கள்.பணக்காரன் டிபன் காப்பி வாங்கிக் கொடுக்கலாம், சினிமாவிற்கு அழைத்துப் போகலாம். ஊற்றி ஊற்றிக்கூடக் கொடுக்கலாம். ஆனால் அப்படிச் செல்பவர்கள் எடுபிடியாக நடத்தப்படுவார்களா, அல்லது உற்ற நண்பன் என மதிக்கப்படுவார்களா?
பால்ய சிநேகிதன் என்பதற்காக மாவட்ட ஆட்சியராகி விட்ட நண்பனிடம் எழுத்தர் எனும் நிலையில் இருப்பவன் நெருங்கிப் பழக முடியுமா? ஒரு சமயம் இல்லாவிட்டால் மறுசமயம் அது இடிக்கத் தானே செய்யும்?
நல்ல நண்பன் என்றால் முதலில் தகுதி சமமாக இருக்க வேண்டுமில்லையா? படிப்பு,பதவி,பணம் என எதில் வித்தியாசம் இருந்தாலும் , அந்நியோன்யம் வருவது கடினமாயிற்றே!
மெத்தப் படித்தவன் அதிகம் படிக்காதவனுடன் என்னங்க பேச முடியும்?
நமது விருப்பு வெறுப்புக்களுடன் அனுசரித்துப் போகக் கூடியவர் தானேங்க நண்பனாக இருக்க முடியும்? இருக்க வேண்டும்?
சும்மா நேரத்தைப் போக்க கூட இருப்பவர்களை எல்லாம் நண்பர் என்று சொல்ல முடியுமா?
எடுக்கவோ தொடுக்கவோ என்ற துரியோதனன் கர்ணன் நட்பை எடுத்துக் கொள்ளுங்கள்.தான் சமமாக நடத்தப்பட்டதற்கு கர்ணன் கொடுத்த விலை என்ன?
`நமக்கு சமமான தகுதி உடையவர்களிடம் மட்டுமே நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்’
என்கிறார் சாணக்கியர்! என்ன, உண்மை தானே?உங்களது அனுபவம் எப்படி?
- somaiah. veerappan@gmail. com