

ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் விளங்கும் இந்திய நிறுவனங்களுள் பிரதானமானது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. இந்நிறுவனம் கார், ஜீப், இலகு ரக வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களையும் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் அங்கமான மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் லிமிடெட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கார் (செகன்ட் ஹேண்ட்) விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் தற்போது செகன்ட்ஹேண்ட் பைக் விற்பனையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
அனைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபடாமல் 250 சிசி திறனுக்கு மேம்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள்களை வாங்க விரும்புவோர் இனி நம்பகமாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தில் வாங்க முடியும்.
கடந்த வாரம் முதலாவது விற்பனையகத்தை டெல்லியில் உள்ள வாஸிர்பூர் தொழிற்பேட்டையில் இந்நிறுவனம் தொடங்கியது. அடுத்ததாக பெங்களூர் மற்றும் மும்பையில் தொடங்க உள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான நாகேந்திர பாலே தெரிவித்துள்ளார். இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் 50 விற்பனையகங்களைத் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
``இதுவரையில் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகன விற்பனையானது முறைசாரா வர்த்தக நடவடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. இத்துறையில் பிரபல நிறுவனங்கள் ஈடுபட்டால் மக்கள் அதிக எண்ணிக்கையில் நம்பிக்கையாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்க முன்வருவர். செகன்ட் ஹேண்ட் கார் சந்தையைவிட அதிக அளவில் இதற்கு வாய்ப்புள்ளது,’’ ஆய்வில் தெரியவந்ததாக நாகேந்திர பாலே தெரிவித்தார்.
250 சிசி திறனுக்கு மேம்பட்ட வாகனங்கள் என்பதால் ஹோண்டா, ராயல் என்பீல்டு, ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் இங்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரையிலான வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வாகனங்களின் தரம் மற்றும் சேவை ஆகியவற்றை அளிக்க 52 மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கார் விற்பனைக்கு நாடு முழுவதும் மொத்தம் 1,290 மையங்களை இந்நிறுவனம் செயல்படுத்துகிறது. இங்கு கார் வாங்குபவர்களில் 60 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
செகன்ட் ஹேண்ட் கார் விற்பனை சந்தை ரூ. 200 கோடி வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.