

ஆட்டோமொபைல் துறையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துக்கு தனி முத்திரை உண்டு. எஸ்யுவி ரக வாகனங்கள், சரக்கு போக்குவரத்தில் இலகு ரக வாகனங்கள் உள்ளிட்டவை தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது.
தனி உபயோக வாகனங்கள் மட்டுமின்றி விவசாய உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் டிராக்டர் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தற்போது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்நிறுவனம் பேட்டரியில் செயல்படும் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனமான மொய்னி சகோதரர்களின் ரேவா கார் நிறுவனத்தைக் கையகப்படுத்திய பிறகு இந்நிறுவனம் அதிக அளவில் பேட்டரி கார்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பேட்டரி கார் தயாரிப்பு ஆலை பெங்களூரிலேயே தொடர்ந்து செயல்படுகிறது. ரேவா கார் தயாரிப்பு ஆலை இப்போது மஹிந்திரா வசமானதால் பேட்டரி கார் தொடர்பான ஆய்வுகளை இந்நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் அதே வேளையில் பேட்டரி கார்கள் மீதான மக்களின் ஆர்வமும், அரசு அளிக்கும் சலுகைகளும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் நகர போக்குவரத்துக்கு ஏற்ற சிட்டி ஸ்மார்ட கார் இ2ஓபிளஸ் எனும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். முந்தைய மாடல்களைப் போல 2 கதவுகளைக் கொண்டிராமல் நான்கு கதவுகளோடு இது வடிவமைக் கப்பட்டுள்ளது. வழக்கமாக பேட்டரி கார் மெதுவாக செல்லும் என்ற சித்தாந்தத்தையும் இது உடைத்துள்ளது. இந்த காரில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும் போதும் அதிலிருந்து விரயமாகும் சக்தியை மறுபடியும் சக்தியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் முதல் முறையாக இந்தியாவி்ல் இந்த காரில் பயன் படுத்தப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் அல்லது தாழ்வான பகுதியில் சீராக செல்வதற்கு உதவும் வகையில் இதில் ஹில் அசிஸ்ட் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரிவர்ஸ் கேமிரா உள்ளது.
இதில் ரிமோட் டயாக்னாஸ்டிக் நுட்பம் உள்ளது. வழியில் உள்ள சார்ஜிங் மையம் பற்றிய தகவலை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காரின் செயல்பாடுகளை ரிமோட் கன்ட்ரோலாக உங்களது ஸ்மார்ட்போனிலிருந்து இயக்க முடியும். காரின் கதவை மூடுவது, இன்ஜினை நிறுத்துவது உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ளலாம்.
இந்த காரை வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதனால் ஒரு கி.மீ. பயணத்துக்கு 70 காசுகள்தான் செலவாகும். இந்தக் காருக்கு மத்திய அரசு அளிக்கும் சலுகை ரூ. 1.24 லட்சமாகும். இது தவிர சில மாநிலங்களில் சிறப்பு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்பட்டால் இத்தகைய கார்களின் விற்பனை அதிகரிக்கும்.