

இந்தியாவில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து கார்களை இறக்குமதி செய்வது அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியாகும் கார்களின் எண்ணிக்கை 11 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் (2016) இங்கிலாந்தி லிருந்து 3,372 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெறும் 309 மட்டும்தான்.
2015-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இங்கிலாந்து கார்களுக்கான தேவை 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் இங்கிலாந்து கார்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இங்கிலாந்து மாடல் கார்களாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக், ஜாகுவார் எக்ஸ்எப், ஜாகுவார் எக்ஸ் இ மற்றும் ஜாகுவார் எப்-பேஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன.
கார்கள் மட்டுமின்றி கடந்த ஆண்டில் இங்கிலாந்திலிருந்து ரூ.114 கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களின் அளவு ஆண்டுக்காண்டு 15 சதவீத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என இங்கிலாந்தில் உள்ள மோட்டார் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் கூட்டமைப்பு (எஸ்எம்எம்டி) தெரிவித்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் சமீப ஆண்டுகளாக இங்கிலாந்தில் தயாராகும் பிரீமியம் கார்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதாக எஸ்எம்எம்டி இயக்குநர் டாம்ஸென் ஐசக்சன் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட போதிலும் இங்கிலாந்து தயாரிப்புகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கார் சந்தையைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்து தயாரிப்புகள் மற்றும் அதன் தொழில்நுட்பம், பாரம்பரியம் ஆகியன உயர் தரத்தை சர்வதேச அளவில் நிரூபித்துள்ளது. இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆட்டோமொபைல் துறையில் நீண்ட நெடிய ஒத்துழைப்பு உள்ளது. இதனால் இருதரப்பும் பயனடையும் வகையில் நீண்டகால அடிப்படையிலான திட்டங்கள் வகுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து கார்களுக்கு ஐரோப்பா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆசிய சந்தை உள்ளது. இப்பிராந்தியத்தின் பங்களிப்பு 13.4 சதவீதமாக உள்ளது. பொருளாதாரம் வளரும்போது உயர் ரக சொகுசு கார்களின் விற்பனையும் அதிகரிக்கும்.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் அதேவேளையில் இங்கிலாந்து தயாரிப்புகளுக்கு இங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.