நிதி நெருக்கடியில் ஆர்.காம்!

நிதி நெருக்கடியில் ஆர்.காம்!
Updated on
1 min read

அனில் அம்பானி தலைமையிலான ஏடிஏஜி குழுமம் இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு உள்ளாகும் என எவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத சூழலுக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) கடன் தொகையை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் ஆர்.காம் கணக்கை சிறப்பு கணக்காக (எஸ்.எம்.ஏ) வங்கிகள் வைத்துள்ளன. 30 நாட்கள் வரை வட்டி செலுத்தவில்லை எனில் எஸ்.எம்.ஏ 1 என்னும் பிரிவிலும், 60 நாட்கள் அல்லது அதற்கும் மேல் வட்டியை செலுத்தவில்லை எனில் எஸ்.எம்.ஏ 2 என்னும் பிரிவிலும் வங்கிகள் வகைப்படுத்தும். 90 நாட்களுக்கு மேல் செல்லும் பட்சத்தில் வாராக்கடனாக வங்கிகள் மாற்றி அமைக்கும்.

தற்போது ஆர்.காம் கணக்குகள் எஸ்.எம்.ஏ1 அல்லது 2 ஆகிய பிரிவுகளில் வங்கிகள் வைத்துள்ளன. இதன் காரணமாக ரேட்டிங் ஏஜென்சிகள் ஆர்.காம் நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைத்திருக்கின்றன. கேர் ரேட்டிங் நிறுவனம் இருப்பதிலேயே குறைவான மதிப்பீட்டை வழங்கி உள்ளது. மூடி’ஸ் மற்றும் இக்ரா நிறுவனங்களும் தரமதிப்பீட்டை குறைத்திருக்கின்றன.

இதன் காரணமாக ஆர்.காம் பங்குகள் தொடர்ந்து சரிவை கண்டுவருகின்றன. கடந்த இரண்டு வாரத்தில் 20% வரை இந்த பங்கு மதிப்பு சரிந்திருக்கிறது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,000 கோடிக்கு மேல் சரிந்திருக்கிறது.

மார்ச் 31 வரை இந்த நிறுவனத்தின் கடன் ரூ.45,733 கோடியாக இருக்கிறது. தற்போது இந்த கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் ஏழு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறது. தவிர வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர்செல் மற்றும் புரூக்பீல்டூ ஆகிய நிறுவனங்களுடன் செய்திருக்கும் ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் ரூ.25,000 கோடி கடன் அடைக்கப்படும் என்று அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார். ஒருவேளை செப்டம்பருக்குள் இந்த இரு இணைப்புகளும் முடிவடையவில்லை எனில் நிலைமை மேலும் சிக்கலாகும் என பைனான்ஸியல் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சி அடைந்து வந்த டெலிகாம் நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.8 லட்சம் கோடியாக இருக்கிறது. அனைத்து தொழில்களுக்கும் பொற்காலம் என்கிற ஒன்று இருக்கும். தொலைத் தொடர்பு துறைக்கு அந்த பொற்காலம் முடிவுக்கு வந்து விட்டதோ?.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in