

டாடா வழியில் இன்ஃபோசிஸ் என இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதி இருந்தோம். அந்த கட்டுரை வெளியான பிப்ரவரி 13-ம் தேதி மாலை, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் ஆர்.சேஷசாயி மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ஆகியோர், நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் முன்பு விளக்கம் அளித்தனர். அடுத்த சில நாட்களுக்கு பிறகு இனி நிறுவன விவகாரங்களை பொது அரங்கில் பேசப்போவதில்லை. எங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக்கொள்கிறோம் என ஆர்.சேஷசாயி அறிவித்தார். ஒரு வழியாக இன்ஃபோசிஸ் பிரச்சினை முடிந்தது என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, வேறு ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் ஊடகங்கள் மற்றும் பங்குச்சந்தை அமைப்புகளுக்கு ஒரு கடிதம் சென்றது. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது. அந்த குற்றச்சாட்டு குறித்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம்.
இன்ஃபோசிஸ் மட்டுமல்லாமல் இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வரவு செலவு கணக்கில் பெரும் தொகை கையிருப்பாக இருக்கிறது. இன்ஃபோ சிஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் 525 கோடி டாலர் (ரூ.35,000 கோடி) தொகை இருக்கிறது. இந்த தொகையை, விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம், அதே துறையில் இருக்கும் வேறு நிறுவனத்தை வாங்கலாம், சந்தையில் இருக்கும் பங்குகளை திரும்ப வாங்கலாம் என்பது உள்ளிட்ட சில வாய்ப்புகள் உள்ளன.
விரிவாக்கப் பணிகளை நிறுவனங் கள் மேற்கொள்ளலாம் என்றாலும், ஏற்கெனவே சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கு வதன் மூலம், புதிய துறையில் களம் இறங்கலாம், திறமையான பணியாளர் கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதால் பணம் இருக்கும் சூழலில், நிறுவனங்களை வாங்குவது வாடிக்கையான ஒன்று.
பனாயா விவகாரம்
இன்ஃபோசிஸ் நிறுவனம் குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குச்சந்தை அமைப்புகளுக்கு வெளியான செய்தி இதுதான். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப் பேற்றுக்கொண்டார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இயக்குநர் குழு கூட்டம் நடக்கிறது. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பனாயா நிறுவனம் குறித்த விவாதம் நடக்கிறது.
நிறுவனத்தை வாங்குவது என முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அதற்காக இயக்குநர் குழு அனுமதியை பெறுவதற்காக நடந்த கூட்டம்தான் இது. அப்போது தலைமை நிதி அதிகாரியாக இருந்த ராஜிவ் பன்சால் இயக்குநர் குழு உறுப்பினர் இல்லை. இருந்தாலும், தலைமை நிதி அதிகாரி என்னும் அடிப்படையில் அந்த விவாதத்தில் கலந்து கொள்கிறார். ஆனால் வாங்குவதற்காக ஒப்புக்கொண்ட தொகை அதிகம் என்பதால் இயக்குநர் குழு விவாதத்தில் இருந்து பாதியில் வெளியேறுகிறார். அதன் பிறகு அந்த நிறுவனத்தை வாங்குவது என முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகு பனாயா குறித்த விஷயங்கள் எதுவும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
ராஜிவ் பன்சாலுக்கு இந்த நிறு வனத்தை வாங்குவதில் விருப்பம் இல்லை என்றாலும், 20 கோடி டாலர் கொடுத்து அந்த நிறுவனம் வாங் கப்படுகிறது. இதுவரை இன்ஃபோசிஸ் கையகப்படுத்திய நிறுவனங்களில் அதிக தொகை கொடுத்து வாங்கிய இரண்டாவது நிறுவனம் பனாயா. ஆனால் பனாயா நிறுவனத்தை, அதன் சந்தை மதிப்பைவிட கூடுதலான விலையில் வாங்கப்பட்டிருப்பதாக புகார் எழுப்பப்பட்டிருக்கிறது.
இன்ஃபோசிஸ் வாங்குவதற்கு முந்தைய மாதம் இஸ்ரேல் குரோத் பார்ட்னர்ஸ் என்னும் நிறுவனம் பனா யாவை 16.2 கோடி டாலருக்கு மதிப்பீடு செய்திருந்தது. அந்த மதிப்பில் அந்த நிறுவனத்தின் 12.31 சதவீத பங்குகளை அந்த நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனத்தை வாங்கியதில் பன்சாலுக்கு விருப்பம் இல்லை என் பதால்தான் அவர் வெளியேறும் சூழ் நிலை உருவானது என்றும் கூறப்படு கிறது. தவிர இன்ஃபோசிஸ், நிறுவனங் களை வாங்குவதற்காக 50 கோடி டாலர் ஒதுக்கீடு செய்தது. இந்த தொகையை பயன்படுத்தி வேறு சில நிறுவனங்களும் வாங்கப்பட்டன. அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ராஜிவ் பன்சாலுக்கு வெளியேறும் கட்டணமாக ரூ.17.38 கோடி வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறுவனர்களின் தலையீட்டுக்கு பிறகு ரூ.5.2 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பணத்தை `ஹஷ் மணி’ என நாராயண மூர்த்தி குறிப்பிட்டார். அதாவது ஏதோ ஒரு தகவலை மறைப் பதற்காக இந்த தொகை வழங்கப் பட்டது என நாராயண மூர்த்தி குறிப் பிட்டார். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப் பிட்டுள்ளபடியே இந்த தொகை வழங் கப்பட்டது. ராஜிவுக்கு முறைகேடாக எந்த தொகையும் வழங்கவில்லை என சேஷசாயி கடந்த வாரம் விளக்கம் அளித்திருந்தார்.
அந்த ஏதோ ஒரு தகவல் என்பது இதுதான் என யூகிக்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா. அவர் முன்பு எஸ்ஏபி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹசோ ப்ளாட்னர் (Hasso Plattner) பனாயா நிறுவனத்தில் 8.33 சதவீத பங்குகளை வைத்திருந்தார். பனாயா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அவருக்கு 1.7 கோடி டாலர் கிடைத்திருக்கிறது. இதுதான் இப்போது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
தவிர நிறுவனங்கள் இணைப்பு பிரிவுக்கு (எம் அண்ட் ஏ) தீபக் படாகி தலைவராக இருந்தார். விஷால் சிக்கா பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் தீபக்கை நீக்கிவிட்டு, அவருடன் எஸ்ஏபி நிறுவனத்தில் பணிபுரிந்த ரிதிகா சூரியை நியமனம் செய்தார். சூரி நியமனம், எஸ்ஏபி நிறுவனர் முதலீடு செய்திருந்த பனாயா நிறு வனத்தை வாங்கியது மட்டுமல்லாமல் சந்தை மதிப்பை விட கூடுதலாக வாங்கி யது, ராஜிவ் பன்சால் வெளியேறியது, அவருக்கு வெளியேறும் கட்டணம் கொடுத்து அதனை நிறுத்தி வைத்தது என விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சார்ந்தவர்கள் பனாயா நிறுவனத்தில் எந்தவிதமான முதலீடு களும் செய்யவில்லை. இருந்தாலும் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய தணிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முறையான பதில் தேவைப்படும் சமயத்தில் அளிக்கப்படும் என இன்ஃபோசிஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலே இருக்கும் கேள்விகளுக்கு இதுவரை இன்ஃபோசிஸ் விளக்கம் அளிக்கவில்லை என்றால், நிறுவனத்தின் வசம் இருக்கும் தொகையை பயன் படுத்தி பங்குகள் வாங்க முடிவெடுத் திருக்கிறது. அதற்காக பங்குதாரர் அனுமதியை இன்ஃபோசிஸ் கோரி யிருக்கிறது. இதுவரை வெளியேறும் தொகைக்கு முன்மாதிரி இன்ஃபோசிஸில் இல்லை. அதற்கு முன் மாதிரியை உருவாக்கினால் பிற்காலத்தில் பயன்படலாம் என்பதற் காக வெளியேறும் கட்டணம் கொடுக்கப் பட்டதா, பனாயா விவகாரத்தில் என்ன நடந்தது என பல கேள்விகளுக்கும் இன்ஃபோசிஸ் பதில் அளிக்கும் என நம்புவோம்.
‘ செவரன்ஸ் பே’
நிறுவனத்தை விட்டு முக்கிய பணியாளர்கள் ஒருவர் நீக்கப்படுவது, அவராக வெளியேறுவது என முக்கிய பணியாளர்கள் ஒருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது வழங்கப்படும் தொகை Severance Pay. ஒரு ஆண்டுக்கு ஒரு வாரம், இல்லை ஒரு மாதம் என கணக்கிட்டு எத்தனை ஆண்டு காலம் பணியாற்றினார்களோ அதற்கேற்ப இந்த தொகை வழங்கப்படும்.
ஆனால் உயரதிகாரிகளுக்கு அவர்களுடைய ஒப்பந்தத்தில் இந்த தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒப்பந்தம் இல்லை எனில் இந்த தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம் எதுவும் நிறுவனங்களுக்கு கிடையாது.
- karthikeyan.v@thehindutamil.co.in