என்பிபிஏ - நோயாளிகளின் விடிவெள்ளி!

என்பிபிஏ - நோயாளிகளின் விடிவெள்ளி!
Updated on
3 min read

இந்தியாவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சம். இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்போர் 3 கோடி பேர்.

மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வீடு திரும்பும்போது, சிகிச்சைக்கான தொகையை கேட்டு, இதை எப்படி செலுத்தப் போகிறோமோ என்ற உளைச்சலில் மீண்டும் மாரடைப்பு வந்து இறப்பவர்கள் அதிகம். அந்த அளவுக்கு மாரடைப்பு சிகிச்சை பணக்காரர் களுக்கான நோயாகவே கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பொறுத்தப்படும் ஸ்டென்ட் என்கிற உயிர்காக்கும் கருவியின் விலை மிக மிக அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் ஸ்டென்ட்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் என்று மொத்தமாக வசூலிக்கிறார்களே தவிர இந்த, ஸ்டென்ட் கருவியின் விலையை எந்த மருத்துவமனையும் தனியாகக் குறிப்பிடுவதில்லை என்பதுதான் இதிலுள்ள வினோதம். ஸ்டென்ட் விலையை மருத்துமனைகள்தான் நிர்ணயம் செய்கின்றன.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்டென்ட்களின் உச்சபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து தேசிய மருத்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) 40,000 ரூபாய் முதல் ரூ.1.98 லட்சம் வரை விற்ற ஸ்டென்டின் விலையை ரூ.29,600 என நிர்ணயித்தது. ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75,000 வரை விற்ற ஸ்டென்ட் விலை ரூ.7,260 என நிர்ணயம் செய்தது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இறக்குமதி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து ஸ்டென்ட்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் தீர்ந்ததா?

நோயாளிகள் பிரச்சினைக்கு விலை நிர்ணயம் மூலம் தீர்வு கண்டுவிட்டாலும், இதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. விலை கட்டுப் பாட்டை என்பிபிஏ கொண்டுவந்திருந்தாலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு இந்த விலை கட்டுப்பாட்டில் விருப்பம் இல்லை. விலை கட்டுப்பாடு காரணமாக தரமற்ற ஸ்டென்ட் சந்தை யில் விற்கப்படலாம் என சுகாதார துறை அமைச்சகம் கருதுகிறது. தற்போது நான்காம் தலை முறை ஸ்டென்ட் புழக்கத்தில் இருக்கிறது.

ஆனால் விலை கட்டுப்பாட்டால் முந்தைய தொழில்நுட்பமே சந்தையில் கிடைக்கும் என இந்த அமைச்சகம் கருதுகிறது. தவிர அபாட் நிறுவனம் ஏற்கெனவே மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்திருந்த ஸ்டென்ட்களை திரும்பி வாங்கிகொண்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

மருத்துவமனைகளின் நிலை?

இந்த தடையால் மருந்து உற்பத்தி நிறுவனங் களை விடவும், மருத்துவமனைகளே அதிகம் கவலையடைந்திருக்கின்றன. முறைப்படுத்தப்படா மல் இருந்தபோது அதிக லாப வரம்பு இருந்துள்ளது. குறிப்பாக 100 சதவீதம் முதல் 654 சதவீதம் வரை லாபம் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது விலை கட்டுப்படுத்தபட்டிருப்பதுடன் நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ள ஸ்டென்ட் இறக்குமதி செய்யப்பட்டதா? உற்பத்தி நிறுவனம், அதன் விலை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என என்பிபிஏ கூறியிருக்கிறது.

மருத்துவமனைகள் எப்படி செயல்பட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், மார்ச் 8-ம் தேதி வரை 32 மருத்துவமனைகள் ஸ்டென்ட் அறுவை சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பதாக என்பிபிஏ இணையதளம் தெரிவித்திருக்கிறது. இதில் புதுடெல்லி மேக்ஸ் மருத்துவமனை, ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகளும் அடங்கும். இந்த மருத்துவமனைகளுக்கு என்பிபிஏ நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கூடுதலாக செலுத்திய தொகையுடன் 15 சதவீதம் அபராதம் விதிக்க என்பிபிஏவுக்கு அதிகாரம் இருக்கிறது. அப்போலோ மருத்துவமனை தங்களது இணையதளத்தில் ஸ்டென்ட் விலையை பதிவேற்றியுள்ளது. இதனை மற்ற மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என என்பிபிஏ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கைவசம் இருக்கிறதா?

மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஒரு புறம் இருக்க, ஸ்டென்ட் உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 7-ம் தேதி ஸ்டென்ட் உற்பத்தி நிறுவனங்களுடன் என்பிபிஏ பேச்சு வார்த்தை நடத்தியது. அபாட் இந்தியா உள்ளிட்ட 16 நிறுவனங்கள் கலந்துகொண்டதாக என்பிபிஏ கூறியிருந்தது.

கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு உற்பத்தி இருந்ததோ அதே உற்பத்தி தொடர வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் 8 சதவீதம் அளவுக்கு லாபம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், மருத்துவமனைகள் லாபம் எதுவும் எடுத்துக்கொள்ளகூடாது என்றும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு செய்யப்படும் உற்பத்தியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்பிபிஏ) அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் உற்பத்தியை நிறுத்த முடியாது. உற்பத்தியில் ஒழுங்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால் அடுத்த தலைமுறை ஸ்டென்ட் கிடைப்பதில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது என என்பிபிஏ தலைவர் பூபேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் ஸ்டென்ட் சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சர்வதேச அளவில் ஸ்டென்ட் உற்பத்தி செய்யும் எந்த நிறுவனமும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது. அவர்களின் லாபம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் ஸ்டென்ட் கிடைப்பதில் பிரச்சினை ஏதும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

பூபேந்திர சிங் யார்?

என்பிபிஏ 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் ஒழுங்குமுறை ஆணையமான என்பிபிஏவின் தலைவர் பூபேந்திர சிங். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் என்பிபிஏவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரபிரதேச பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இவர். மருந்து விலை கட்டுப்பாடு உத்தரவு மற்றும் முக்கிய பொருட்கள் தடுப்புச்சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறார். மருந்து விலை தொடர்பாக 24 மணி நேரமும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொடரும் நடவடிக்கை?

ஸ்டென்ட் விலை கட்டுப்பாட்டை போலவே மேலும் சில முக்கிய மருந்துகள் விலையை குறைக்க என்பிபிஏ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை 620 மருந்துகளின் உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 100-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு விலை கட்டுபாடு குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தவிர மருத்துவ உபகரணங்கள் மீதும் விலை கட்டுப்பாடு நிர்ணயம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

விலை நிர்ணயம் செய்வதால் மட்டுமே அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைத்துவிடாது. மருந்துகளின் இருப்பு, தரம், மருத்துவமனைகளின் செயல்பாடு ஆகியவற்றையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதி இல்லை. இத்தகைய சூழலில் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் தேவை. ஆனால் விலை குறைப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மருந்தகங்கள், மருத்துவமனைகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதும் அவசியம்.

- karthikeyan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in