

தலைநகர் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவுக்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் தங்களது புதிய மாடல்களைக் காட்சிப்படுத்துவதற்காக வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.
ஆட்டோமொபைல் கண்காட்சி 14-வது கண்காட்சியாகும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிப்ரவரி 9 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உதிரி பாகங்களுக்கான கண்காட்சி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதிய நிறுவனங்களான கியா, பியூஜியாட், சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் எம்ஜி ஆகியன தங்களது கார்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளன.டொயோடா நிறுவனத்தின் சொகுசு வாகனமான லெக்ஸஸ் காரும், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் புதிய மாடல்களும் இங்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 110 கோடி டாலரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி 2019-ம் ஆண்டு பிற்பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பிரான்ஸை சேர்ந்த பியூஜியாட் எஸ்ஏ நிறுவனமும் இந்தியச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது. இதனால் கண்காட்சியை தனது தயாரிப்புகளின் அறிமுகக் களமாக பயன்படுத்திக்கொள்ளும் என தெரிகிறது.
ஜெனரல் மோட்டார்ஸின் குஜராத் ஆலையை சீனாவை சேர்ந்த எஸ்ஏஐசி நிறுவனம் வாங்க உள்ளது. இங்கிருந்து சீன கார்களை தயாரித்து இந்தியாவில் விற்க முடிவு செய்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக எஸ்ஏஐசி திகழ்கிறது.
மாருதி சுஸுகி மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு தங்களுக்கு ஒதுக்கியிருந்த இடத்தை விட கூடுதலான இடம் தேவை என கோரிக்கை வைத்துள்ளன.
2016-ம் ஆண்டு கண்காட்சியில் 100-க்கும் அதிகமான கார், பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. 65 நிறுவனங்கள் பங்கேற்ற இக்கண்காட்சியை 6 லட்சம் பார்வையாளர்கள் பார்த்தனர். இம்முறை பேட்டரி கார்கள் கண்காட்சியின் பிரதானமானதாக இருக்கும் என தெரிகிறது.
ஆட்டோ எக்ஸ்போவை இலக்காகக் கொண்டு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.