

“திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய மெகா ஹிட் திரைப்படம் உங்கள் அபிமான தொலைக்காட்சியில்’’, என்ற விளம்பர வாசகம் மக்கள் மனதில் பதிந்த அளவுக்கு அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை பார்ப்போர் எண்ணிக்கை இருக்குமா என்றால் அது கேள்விதான்.
புதிய படம், சூப்பர் ஹீரோ எல்லாம் இருந்தும் தொலைக்காட்சியில் பார்ப் போர் எண்ணிக்கை குறைவது ஏன்?
மொத்த திரைப்பட நேரமே அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து அந்த திரைப்படத்தை முழுவதுமாக பார்க்க நீங்கள் செலவிட வேண்டிய நேரம் அதிகபட்சம் ஐந்து மணி நேரம். மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை படம் தொடரும்.
இதை நன்கு அறிந்த மக்கள் இப் போது டிவிடி அல்லது யுஎஸ்பி-யில் முழுத் திரைப்படத்தையும் வாங்கி நேரம் கிடைக்கும்போது பார்க்கும் போக்கு அதிகம். அதேபோல விளம்பரம் இல் லாத திரைப்படம் என்றே தொலைக் காட்சியில் அறிவிக்கும் அளவுக்கு விளம்பரதாரர்களின் ஆக்கிரமிப்பு உள்ளது.
தொலைக்காட்சியில் படம் பார்க்க விரும்பவில்லை என்றால் டிவியை ஆப் செய்துவிட்டு வேறு வேலை பார்க்கலாம். அல்லது அது ஒருபுறம் பாடிக்கொண்டோ அல்லது கதறிக் கொண்டோ இருக்க நீங்கள் பாட்டுக்கு வேறு வேலையில் ஈடுபடலாம்.
ஆனால் நீங்கள் வைத்துள்ள ஸ்மார்ட்போனில் இதுபோன்ற விளம்பரங்கள் வந்தால் என்ன செய்வது?
நிறுவனங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு வழியில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பகீரத பிரயத்னம் செய்கின்றன. தொலைக்காட்சி, ஆன்லைன் ஊடகம், செய்தி பத்திரிகை இதைத் தாண்டி ஸ்மார்ட்போன் மூலமான விளம்பர உத்திகளையும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது தேடுபொறியை பலர் அதிகம் தேடுகின்றனர் என்றால் அதில் விளம்பரம் செய்ய நிறுவனங்கள் அதிகம் செலவிடுகின்றன. விளம்பரம் மூலமான வருமானம் என்பதால் நிறுவனங்கள் அதை அனுமதிக்கின்றன.
நுகர்வோர் அதை விரும்புகிறாரா இல்லையா என்பதெல்லாம் நிறுவனத்துக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவை லாப நோக்கத்துக்காக நடத்தப்படுபவை. நுகர்வோர் செலவின்றி தகவல் பெற விரும்பினால், அத்தகைய தகவலை பல லட்சம் செலவிட்டு வளைதளத்தில் வெளியிட்டுள்ள நிறுவனங்கள் விளம்பரம் மூலமாகத்தான் வருமானம் ஈட்ட வேண்டும். ஆனால் இப்போது இதற்கும் ஒரு மாற்று வந்துவிட்டது.
இணையதள முகவரியில் நீங்கள் இது போன்ற விளம்பரங்களை பார்க்க விரும்பாவிட்டால் அன் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்ற ஒரு வசதி உள்ளது.
அதேபோல ஸ்மார்ட்போனில் விநாடி நேரத்தில் தோன்றும் விளம்பரங்களும் வேண்டாம் என்றால் அதை உங்களால் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
இத்தகைய சாஃப்ட்வேர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் விளம்பரம் வந்தால் அதுவே கத்தரித்து பிரதான தகவலை மட்டும் நீங்கள் பார்க்கும் வகையில் திரையில் பளிச்சிடச் செய்யும்.
இப்போது இத்தகைய சாஃப்ட்வேர் உபயோகம் அதிகரித்து வருவதால், நிறுவனங்களின் விளம்பர வருமானம் குறைந்து வருகிறது.
பொதுவாக விளம்பரங்களைத் தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே சொல்லப்படுகிறது. அவசரமாக தகவல் தேடும்போது விளம்பரம் வரும் நேரம் எரிச்சலூட்டுகிறது.
அதில் தோன்றும் விளம்பரம் மனதில் பதிவதற்குப் பதிலாக ரத்த அழுத்தமே அதிகரிக்கிறது. இதனால் விளம்பரத்தைக் கத்தரிக்கும் சாஃப்ட்வேரை பெரும்பாலோர் தேர்வு செய்கின்றனர்.
அடுத்து, விளம்பரம் வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்க்க நினைப் பவர்கள் கூட அதனால் பதிவிறக்கம் ஆகும் நேரம் அதிகரிக்கும் என்பதால் விளம்பரத்தைத் தவிர்ப்போர் சிலர்.
நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரிய நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பத்துறையினர் இதுபோன்ற விளம் பரங்களை தடை செய்யும் வகையில் சாஃப்ட்வேரை போட்டுவிடுகின்றனர். இதனால் இங்குள்ள இணையதள இணைப்புகளில் விளம்பர வாசகம் வெளியாக வாய்ப்பு குறைவு.
சமீபகாலமாக ஸ்மார்ட்போனில் விளம்பர வாசகங்களைத் தடுக்கும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகிப்போரில் இத்தகைய விளம்பர தடுப்பு சாஃப்ட்வேரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 42 கோடியைத் தொட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது ஐந்து பேரில் மூன்று பேர் இத்தகைய சாஃப்ட்வேரைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இத்தகைய சாஃப்ட்வேர் உபயோகம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவில் 15.90 கோடி பேர் இத்தகைய விளம்பர தடுப்பு சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 36 சதவீதம் பேர் இதுபோன்ற விளம்பர வாசகத்தடுப்பு சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இத்தகைய சாஃப்ட்வேர் உபயோகம் மிகக் குறைவு. அங்கு 1.40 கோடி பேர் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில் 42 லட்சம் பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். மொத்த ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களில் 2 சதவீதம் மட்டுமே இத்தகைய சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றனர். சீனாவில் 15.90 கோடி பேர் விளம்பர தடுப்பு சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றனர்.
டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் விளம்பர தடுப்பு சாஃப்ட்வேர் உபயோகத்தால் 380 கோடி விளம்பர வருமானம் பாதிக்கப்படும் என கணக்கீடு தெரிவிக்கிறது. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர வருமானம் 2020-ம் ஆண்டில் 1,200 கோடி டாலர் அளவுக்குக் குறையும் என தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல 20 கோடி பேர் தங்களது கம்ப்யூட்டரில் இத்தகைய சாஃப்ட்வேரை பயன் படுத்துகின்றனர்.
விளம்பரம் செய்ய நிறுவனங்கள் பல உத்திகளைக் கையாண்டால் வாடிக்கையாளரும் ஸ்மார்ட்டாக யோசிக்கத்தானே செய்வர்.
யாகூ வழி, தனி வழி!
விளம்பர தடுப்பு சாஃப்ட்வேர் உருவான காலத்திலிருந்தே இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனாலேயே யாகூ நிறுவனம் விளம்பர தடுப்பு செயலியை ஒரு போதும் ஊக்குவித்தது கிடையாது.
தற்போது தங்களது டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தகைய சாஃப்ட்வேரை பயன்படுத்தும் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து அதை நீக்கும் பணிகளைச் செய்து வருகிறது யாகூ.
விளம்பர தடுப்பு சாஃப்ட்வேரை தடுக்கும் புதிய சோதனை முயற்சிகள் நடந்து வருவதாக யாகூ நிறுவனமே விளம்பரம் செய்துள்ளது.
யாகூ பாணியை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட விளம்பர வருமானத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் நிறுவனங்கள் பின்பற்றக்கூடும்.
ஆக விளம்பரம் நீங்கள் விரும்பாவிட்டாலும் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு உங்களைத் தள்ளுவதில் நிறுவனங்கள் மிகவும் குறியாக உள்ளன.
ramesh.m@thehindutamil.co.in