சீனாவை மிஞ்சிய இந்தியா!

சீனாவை மிஞ்சிய இந்தியா!
Updated on
2 min read

வேகமாக வளரும் பொருளாதார நாடு என்றால் அனைவரும் கைகாட்டும் ஒரே நாடு சீனா. ஆனால் இருசக்கர வாகன விற்பனையில் சீனாவை மிஞ்சி விட்டது இந்தியா. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.77 கோடியாகும். சீனாவில் விற்பனையானதோ 1.68 கோடியாகும். இருசக்கர வாகன விற்பனைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முதலாவதாக இருப்பது சாலை கட்டமைப்பு வசதியாகும். அனைத்துக்கும் மேலாக தனி நபர் வருமான உயர்வும் முக்கியக் காரணமாகும். அனைவரும் வாங்கும் வகையில் சுலப தவணை திட்டத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைப்பதும் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

இரு சக்கர வாகன விற்பனையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனாதான் முதலிடத்தில் இருந்து வந்தது. மிக அதிகபட்சமாக 2.5 கோடி வாகனங்கள் ஓராண்டில் விற்பனையானதுதான் சாதனை அளவாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இரண்டு சக்கர வாகன விற்பனை இறங்குமுகத்தில் உள்ளது. பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது கார்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளதும் இதற்குக் காரணம் என்று சீனா கூறுகிறது. தற்போது சீனாவில் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதனால் பேட்டரி வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் ஆண்டுக்கு 60 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. தற்போது இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை குறைவதற்கான வாய்ப்பு குறைவு என்றுஇத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் அதிக ஸ்கூட்டர்விற்பனை செய்யும் ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகன விற்பனை 11 சதவீத வளர்ச்சியை எட்டும் எனகணித்துள்ளது.

ராயல் என்பீல்டு, ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் உள்ளிட்ட பிரீமியம் பிராண்டு நிறுவனங்களும் வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தினசரி 48,000

நாளொன்றுக்கு இந்தியாவில் 48,000 இருசக்கர வாகனங்கள் கடந்த ஆண்டில் விற்பனையாகியுள்ளன. கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க முன் வருவதும் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளின் மொத்த விற்பனையில் 35 சதவீதம் பெண் வாடிக்கையாளர்களை நம்பியுள்ளது.

சீனாவில் விற்பனை சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணமாகக் கூறப்படுவது பெரு நகரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி நகரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும்சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

கிராமப் பகுதிகளில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதால் அங்குள்ள பலரும் இரு சக்கர வாகனங்களை தேர்வு செய்கின்றனர். பொதுவாக பருவ மழை தவறாது பெய்யும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்று ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் முன்ஜால் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் இரு சக்கர வாகன பெருக்கத்தால் பிரீமியம் பிராண்டு வாகனங்களும் சுலப தவணை திட்டத்தை கையிலெடுத்து தங்களது விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தற்போது ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான பிரீமியம் பிராண்டு மோட்டார் சைக்கிள்களை வாங்கும் போக்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. வங்கிகளின் கடன் மூலம் சுலப தவணையில் பைக் வாங்குவது சாத்தியமாவதால் இப்போது பிரீமியம் ரக பைக்குகளின் விற்பனையும் இங்கு அதிகரித்துள்ளதாக சியாம் (தென்னிந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம்) தலைவர் தெரிவித்துள்ளார்.

பெருநகரங்களில் கார்கள் வைத்திருப்பவர்கள் கூட அருகில் உள்ள இடங்களுக்குச் செல்வதற்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். வாகன நெரிசலுக்கு தீர்வாக மோட்டார் சைக்கிள்கள் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

பள்ளி இறுதித் தேர்வு முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மகன்களை படிப்பில் ஊக்குவிக்க மோட்டார் சைக்கிளை வாங்கித்தரும் பாசமிகு தந்தைகள் இருக்கும் இந்தியாவில் ஒருபோதும் இருசக்கர வாகன விற்பனைக்கு சரிவு ஏற்படாது என்றே தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in