

தலைப்பைப் பார்த்தவுடன் மூங்கிலினாலேயே தயாரிக்கப்பட்ட கார் என்று நினைக்க வேண்டாம். கார் தயாரிப்பில் தேவையான பகுதிகளில் மூங்கிலைப் பயன்படுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மிகவும் வலிமையான இயற்கையில் விளையும் மூங்கிலுடன் சில ரசாயனக் கலவைகளைச் சேர்த்து தங்களது காரில் பயன்படுத்துவது குறித்து ஃபோர்டு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
காரின் அடிப்பகுதியின் உள்புறம் மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் சேர்ந்த கடினமான கலவையைக் கொண்டதாக இருக்கும் என ஃபோர்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மூங்கில் மிகவும் அற்புதமான இயற் கையில் விளையும் கடினமான ஒரு பொருள். இது வலுவாக இருக்கும், அதேசமயம் வளையக் கூடிய நெகிழ் வுத் தன்மையுடன் திகழும். சூழலுக்கு பாதுகாப்பானது என்று ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜேனட் இன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஃபோர்டு நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மூங்கிலை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என ஆய்வு செய்து வருகின்றன. காரின் உள்பகுதி மிகவும் வலிமையானதாகத் திகழ மூங்கிலுடன் பிளாஸ்டிக்கை சேர்த்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூங்கிலின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த ஃபோர்டு ஆய்வுக் குழுவினர், அது மற்ற ரசாயன சேர்மங்களைக் காட்டிலும் அதிக வலுவுடன் இருந்ததை உணர்ந்தனர். அதிகபட்சமாக 212 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்ப சூழலையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக இது திகழ்ந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மூங்கிலை வேறு எந்தெந்த வகைகளில் பயன்படுத்துவது என்பது குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஃபோர்டு ஈடுபட்டு வருகிறது. சூழலுக்கு பாதிப்பில்லாத பயோ பிளாஸ்டிக் சேர்மத்தை மூங்கிலின் மூலம் உருவாக்கி அதை ஃபோர்டு கார்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
மூங்கிலைத் தவிர பிற சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயற்கை பொருள்களை ஃபோர்டு நிறுவனம் தனது கார்களில் பயன்படுத்தி வருகிறது. பருத்தி குடும்பத்தைச் சேர்ந்த கெனாஃப் எனும் ஒருவகை வறட்சி பயிரின் இலைகளை காரின் கதவுகளில் பயன்படுத்துகிறது. இவ்வகை நுட்பம் ஃபோர்டு எஸ்கேப் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிசி தவிடு மற்றும் பிளாஸ்டிக் சேர்மம் சேர்ந்த கலவை ஃபோர்டு எப் 150 பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை வைக்கோல் ஃபோர்டு பிளெக்ஸ் கார்களில் பாதுகாப்பு அறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைப்போல இன்னும் பிற இயற்கை சார்ந்த பொருள்களோடு ரசாயன கலவைகளையும் சேர்த்து ஃபோர்டு நிறுவனம் சூழல் பாதிப்பில்லாத கார் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
புகை மாசைக் கட்டுப்படுத்தும் வாகனத் தயாரிப்போடு நின்றுவிடாமல், இயற்கை பொருள்களையும் தங்களது கார்களில் பயன்படுத்தும் நுட்பத்தை பிற நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கினால் சூழல் பாதுகாப்பு மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.