

ஆட்டோமொபைல் துறையில் எத்தனையோ புதுப்புது மாடல்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் வந்தாலும் பழைய கார்களுக்கு இருக் கும் மவுசு என்றைக்குமே தனியானது.
இன்றளவும் பழைய கார்களின் அணி வகுப்பைக் காணக் குவியும் மக்களின் கூட்டம் எப்போதுமே அதிகம். சில நாடு களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற் காகவே பழைய கார்களின் அல்லது மோட்டார் வாகனங்களின் அணிவகுப்பை ஆண்டுதோறும் நடத்துகின்றனர்.
கார்களைப் பொறுத்தமட்டில் பெராரி கார்களுக்கு எப்போதுமே மவுசு அதி கம். இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் 56 ஆண்டு பழமையான பெராரி கிளாசிக் மாடல் கார் ஒரு கோடி பவுண்டுக்கு (சுமார் ரூ. 83 கோடி) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூன்று மாத செலவுத் தொகை இது என்பதால் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தொகை மூலம் 2 ஆயிரம் மாணவர்கள் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர முடியுமாம்.
இவை அனைத்தையும் தாண்டி இந்த அளவு அதிக தொகைக்கு ஏலம் போவதற்கு காரின் மீதான பிரியமும் அபிப்ராயமும்தான் காரணம். மிகச் சிறிய அழகிய பெராரி கார் இது. இந்த அளவில் இதற்குப் பிறகு பெராரி கார்களைத் தயாரிக்கவில்லை.
பெராரி 250 ஜிடி கலிபோர்னியா ஸ்பைடர் என்ற பெயரில் வெளியான இந்த கார் 56 ஆண்டுகள் ஓடியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வசம் இது வந்துள்ளது. அரிசோனாவில் 19-ம் தேதி இந்த கார் ஏலம் விடப்பட உள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பினின்ஃபரினா வடிவமைப்பு நிறுவனம் செய்துள்ளது. இது 3 லிட்டர் வி12 இன்ஜினை கொண்ட தாகும். இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. 56 ஆண்டுகள் ஆனாலும் இந்த கார் புதிதாகத் தயாரிக்கப்பட்ட போது எந்த அளவுக்கு சிறப்பாக சீறிப் பாய்ந்ததோ அதே வேகத்தில் இன்றளவும் செயல்படுகிறது.
இந்த காருக்கு ஏன் இந்த அளவுக்கு மதிப்பு என்றால் பெராரி நிறுவனம் இந்த மாடலில் அதிகக் கார்களை தயாரிக்கவில்லை. இதனாலேயே இந்த காருக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டுள்ளது. போன்ஹாம்ஸ் என்ற ஏல நிறுவனம் தான் இந்தக் காரை ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளது. குறைந்தபட்சம் ஒரு கோடி பவுண்டுக்கு ஏலம் போகும் என்று இத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.