மாணவர்கள் உருவாக்கிய ரேஸ் கார்!

மாணவர்கள் உருவாக்கிய ரேஸ் கார்!
Updated on
1 min read

கல்லூரி மாணவர்கள் என்றாலே காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வேகமாகச் செல்வோர் என்ற அபிப்ராயம் நம்மில் பலருக்கு உண்டு. இதற்குக் காரணம் ஒரு சில இளைஞர்கள் வாகனம் ஓட்டும் வேகத்தைப் பார்த்தாலே கிலி ஏற்படும். இவர்கள் சாலைகளில் செல்கிறார்களா அல்லது பந்தய மைதானத்தில் பறக்கிறார்களா என முனுமுனுத்தபடியே செல்வதுதான் வழக்கமாக நடக்கிறது.

ஆனால் காரக்பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் ரேஸ் காரை வடிவமைத்து புதிய சாதனை படைத்துள்ளனர். இவர்கள் வடிவமைத்துள்ள கார் ரஷியாவில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளது.

ஐஐடி மாணவர்கள் உருவாக் கியது பார்முலா 1 பந்தயக் காராகும். இதற்கு முன் இதுபோன்று 3 கார்களை இந்த மையத்தின் மாணவர்கள் தயாரித்துள்ளனர். தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காருக்கு கே-3 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் ரஷியாவில் நடைபெற உள்ள போட்டியில் இவர்கள் உருவாக்கியுள்ள கார் இடம்பெற உள்ளது. இந்தப் போட்டியில் உலகெங்கிலும் இருந்து 800 மாணவர்கள் 30 அணிகளாக தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைக்க உள்ளனர்.

இந்த கே-3 காரின் எடை 220 கிலோவாகும். இது எரிபொருள் சிக்கனமானது. முந்தைய கார் லிட்டருக்கு 2 கி.மீ. தூரமே ஓடியது. இது தற்போது 15 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. அடுத்த கட்ட கார் தயாரிப்பு பணிகளை மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தக் கார் ஆகஸ்ட் மாதம் முழுமை பெறும் என்று மாணவர்கள் குழுவின் தலைவர் கேதன் முந்த்ரா தெரிவித்துள்ளார்.

ஐஐடி காரக்பூர் கல்வி மையத்தில் டீம்கார்ட் என்ற தனிப் பிரிவு இயந்திர பொறியியல் துறையின் கீழ் வருகிறது.

இப்பிரிவு மாணவர்கள் வடிவமைத்துள்ள கார்கள் மூன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

காரின் எடையைக் குறைப்பதற்காக அலுமினியம் அலாய் பாகங்களை சேஸிஸில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் காரின் மேல் பகுதி முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் காரின் எடை பெருமளவு குறைந்துள்ளது.

ஃபார்முலா ஸ்டூடண்ட் ரஷியா 2016 போட்டி செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

காரக்பூர் மாணவர்கள் காரில் பறப்பது மட்டுமல்ல, காரை வடிவமைக்கவும் தங்களால் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in