

தலைநகர் டெல்லியின் மாசு உலக பிரசித்தம். நகரை தூய்மையாக்க அரசும், நீதிமன்றமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இப்போது சிஎன்ஜியில் ஓடும் மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இயங்கும் பேருந்துகள் அனைத்துமே சிஎன்ஜி-யில் இயங்குபவை. 2000 சிசி-க்கும் மேலான டீசல் எஸ்யுவி-க்கள் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நகரின் தூய்மை நடவடிக்கையின் ஒரு அங்கமாக இரு சக்கர வாகனங்கள் பெட்ரோலுக்குப் பதில் சிஎன்ஜியில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த வாரம் டெல்லியில் தொடங்கியது. முதல் கட்டமாக 50 சிஎன்ஜி சிலிண்டர் பொறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங் களின் செயல்பாட்டை மத்திய பெட்ரோ லிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் எரிவாயு உப யோகத்தில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிவாயு வாகன உபயோகத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிஎன்ஜி-யில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் உபயோகம் சோதனை ரீதியில் தொடங்கப்பட்டுள்ளதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இறக்குமதியாகும் எரிபொருளில் எரிவாயுவின் பங்கு 7 சதவீத அளவுக்கே உள்ளது. ஆனால் உலக சராசரி 24 சதவீதமாக உள்ளது. எரிவாயு உபயோகம் அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும் என நம்பலாம்.
சுற்றுச் சூழலை பாதிக்காத எரிபொருள் (யூரோ 4) தயாரிக்கும் பணியிலும் அரசு கவனம் செலுத்துகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இத்தகைய யூரோ- 4 விதிமுறை எரிபொருள் இங்கு கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
சிஎன்ஜி-யில் இயங்கும் இரு சக்கர வாகனங்களால் மாசு 75 சதவீதம் குறைகிறது. வெளியேறும் கரியமில வாயு வின் அளவு 20 சதவீதம் குறைகிறது. சிஎன்ஜி சிலிண்டர் பொறுத்தப்பட்ட வாகனங்கள் ஒரு முறை வாயுவை நிரப்பினால் 120 கி.மீ தூரம் ஓடும். இதற்கான செலவு பெட்ரோலைவிட குறைவாக உள்ளது.
அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, அதற்குரிய வாயு நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டால் இவற்றுக்கான வரவேற்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.