

இருசக்கர மோட்டார் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் ரக 250 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
100 சிசி மற்றும் 125 சிசி சந்தையில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் இனிவரும் காலங்களில் 250 சிசி மற்றும் அதற்கும் கூடுதல் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க உள்ளது.
150 சிசி பிரிவில் தடம் பதித்து 3 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள இந்நிறுவனம் இப்போது ஐஷர் மோட்டார்ஸின் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளுடன் போட்டியிடுவதற்காக உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை தயாரிக்க உள்ளது. மேலும் இத்தகைய பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக உள்ளதும் இந்நிறுவனத்தின் கவனத்தை இப்பிரிவு பக்கம் திருப்பியுள்ளது. 150 சிசி பிரிவில் ஹங்க், எக்ஸ்ட்ரீம், அச்சீவர் 150 ஐ3எஸ் ஆகியன இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.
200 சிசி எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 250 சிசி பிரிவு மற்றும் அதற்கு அதிகமான திறன் கொண்ட வாகன விற்பனை ஆண்டுக்கு 7 லட்சமாக உள்ளது. இது மொத்த மோட்டார் பைக் சந்தையில் 31 சதவீதமாகும். எதிர்கால உத்தியின் ஒரு பகுதியாக உயர் ரக பிரீமியம் பைக் உற்பத்தி மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியில் ஹீரோ மோட்டோகார்ப் கவனம் செலுத்த உள்ளது.
பேட்டரி வாகனங்களைப் பொறுத்த மட்டில் ஸ்மார்ட் இவிஎஸ் என்ற தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளது. இந்த நுட்பமானது இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும். பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆதெர் எனர்ஜி நிறுவனத்தில் இந்நிறுவனம் கணிசமான முதலீட்டை செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் உருவாக்கும் நுட்பங்கள் இதற்கு நேரடியாகக் கிடைக்கும். பேட்டரி வாகனத்தை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல் எதையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை.
ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடனான ஒப்பந்தம் முறிந்த பிறகும் இந்தியாவில் தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். பிரீமியம் பைக் தயாரிப்பு, பேட்டரி வாகன தயாரிப்பு ஆகிய முயற்சிகள் இந்நிறுவனத்தின் முதல் நிலை அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் உதவும்.