Last Updated : 27 Mar, 2017 10:38 AM

 

Published : 27 Mar 2017 10:38 AM
Last Updated : 27 Mar 2017 10:38 AM

கடனில் தவிக்கிறதா தமிழகம் ?

கடனில் தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட, தமிழக அரசு அதனை முழுவதும் மறுக்காமல், அதிகரித்து வரும் கடன் அளவுக்கு மத்திய அரசின் நிதி பகிர்வு முறையே காரணம் என்று கூறிவருகிறது.

தமிழக அரசின் நிதி நிலை (2017-18) அறிக்கையை சட்டசபையில் மார்ச் 16 அன்று தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் டி. ஜெயக்குமார், 2018 மார்ச் 31 முடிய தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ.3,14,366 கோடி இருக்கும் என்றும், இது தமிழக மொத்த உற்பத்தி மதிப்பில் 20.9% இருப்பதால், வரையறுக்கப்பட்ட 25%விட குறைவாக இருப்பதால் தமிழக கடன் அளவு சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாக கூறியிருந்தார்.

14-வது நிதி குழு பரிந்துரைப்படி மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு வெகுவாக குறைந்து வருவதாக நிதி நிலை அறிக்கை கூறுகிறது. 13-வது நிதி குழு பரிந்துரைப்படி பெற்ற நிதியைவிட இப்போது 2.98% தான் அதிக நிதி கிடைத்ததாகவும், இதுவும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

கடன் உயர்வுக்கு காரணம்

தமிழக நிதி பொறுப்பு சட்டம் 2003-ன் படி, ஓர் ஆண்டில் நிதி பற்றாக்குறை மாநில உற்பத்தி அளவில் 3% மிகாமல் இருக்கவேண்டும், வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது. 2016-17-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை ரூ.61,341 கோடி, இது மாநில உற்பத்தி மதிப்பில் 4.58%. எனவே நிதி பொறுப்பு சட்டத்தை மீறியதாக தெரியலாம். ஆனால் தமிழக மின்சார பகிர்வு நிறுவனத்தின் கடன் ரூ.22,815 கோடியை அரசு ஏற்றுகொண்டதால் நிதி பற்றாக்குறை ரூ.61,341 கோடிக்கு உயர்ந்தது என்றும், அதனை நீக்கிவிட்டால் நிதி பற்றாக்குறை ரூ.38,526 கோடியாக இருக்கும், இது மாநில உற்பத்தி மதிப்பில் 2.88% தான், எனவே கடன் அளவு கட்டுக்குள் இருப்பதாக நிதி நிலை அறிக்கை கூறுகிறது.

உண்மைதான். உதய் (UDAY) என்ற மத்திய அரசின் மின்சார நிறுவன சீரமைப்பு திட்டத்தில் தமிழகம் இணையும் போது மின்சார பகிர்வு நிறுவனத்தின் கடனை தமிழக அரசு ஏற்றுகொள்ள வேண்டும், அதற்காக நிதி பொறுப்பு சட்ட திருத்தத்தை ஏற்படுத்தலாம் என்பது ஓர் உடன்பாடு. வேறு பல மாநிலங்களும் இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு சேர்ந்தபோது அவர்களின் நிதி பற்றாக்குறையும் மாநில உற்பத்தி மதிப்பில் 3% விட அதிகமாகியுள்ளது.

ஆனால் வாங்கிய கடனை எதற்கு செலவு செய்வது? நிதி பொறுப்பு சட்டம் வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று வரையறை செய்கிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறை இருந்து வருகிறது.

2015-16 ஆண்டில் ரூ 11,985.36 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2016-17 ஆண்டில் ரூ.15,459.27 கோடியாக உயர்ந்து மீண்டும் 2017-18 ஆண்டில் ரூ.15,980.35 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடனில் கணிசமான பகுதி வருவாய் செலவுகளுக்கு பகிரும்போது அடுத்து வரும் ஆண்டுகளில் கடனை யும் வட்டியையும் செலுத்துவது சிரமாக இருக்கும்.

கடன் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதனால் பெற்ற பணத்தை செலவு செய்யும் முறையில் உள்ள சிக்கல்கள் நீடிக்கின்றன. அரசின் மானியங்கள் ஒரு புறம் அதிகரிக்க, அதனைவிட கூடுதலாக மற்ற செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. மாநில அரசின் மொத்த செலவான ரூ.1,75,357 கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும், ரூ.25,982 கோடி வட்டி செலவுக்கும் சென்றுவிடுகின்றன.

மானியங்களில் பல திட்டங்கள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்ற ஆய்வுகளும் குறைவாக இருக்கும்போது, பொது செலவுகள் பற்றிய கூர்மையான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, எல்லாமே அரசியல் முடிவுகளாக இருக்கின்றன. எனவே வருவாய் பற்றாக்குறையை நீக்குவது, பொது செலவுகளின் திறனை அதிகரிப்பது, வரி வருவாயை உயர்த்துவது மட்டுமே தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க உதவும்.

மத்திய வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு

ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு முறை நிதி குழு அமைக்கப்படும். இதன் முக்கிய பணிகளில் ஒன்று மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்கவேண்டும், அவ்வாறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு மாநிலங்களிடையே பிரித்து அளிக்கவேண்டும் என்பதாகும். 14-வது நிதிக் குழு 2015-16 தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பரிந்துரைகளை செய்துள்ளது. இதில் மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 32% இருந்து 42% ஆக உயர்த்தியது. இந்த 42% வரி வருவாயை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு ஒரு கணக்கு சூத்திரத்தை அளித்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி அளிக்கும், வளர்ந்த மாநிலங்களுக்கு குறைந்த நிதி அளிக்கும் விதத்தில் அந்த சூத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னேறிய மாநிலமான தமிழகம், சமூக நீதி பேசும் தமிழகம், ஒப்பீட்டு அளவில் குறைந்த நிதியை பெறுவது இயற்கை என்பதை ஏற்றுகொள்ளவேண்டும். ஆனால், அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக சொந்த நிதி வருவாய் மாநில உற்பத்தி மதிப்பில் 6.6% என்ற நிலையில் தொடர்ந்து வருவது, நாம் நமது வருவாயை ஈட்டுவதில் சுணக்கமாக இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. பெட்ரோல், மதுபானங்கள் மீது வரி விகிதத்தை உயர்த்தியும் இதே நிலையில் இருப்பது வரி வசூலிப்பதில் உள்ள குறைகளை நீக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக விவசாய, தொழில் துறை வளர்ச்சியை உயர்த்துவது மிகப்பெரிய சவாலாக மாறிவருகிறது. ஒரு லட்சம் கோடிக்குமேல் உற்பத்தி செய்யும் விவசாய துறையில் இந்த ஆண்டு கண்டுள்ள வறட்சியின் பாதிப்பு ரூ.30,000 கோடிக்குமேல் இருக்கும் என்று கணக்குகள் சொல்கின்றன. மத்திய அரசு இதில் பத்து சதவீதம் கூட மானியமாக கொடுக்கவில்லை என்றபோது, மாநில அரசு என்ன செய்ய உள்ளது. கூடுதல் நிதியை இந்த ஆண்டே திரட்ட என்ன திட்டங்கள் உள்ளன. தொடர்ந்து வரும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி இங்கு விஞ்ஞான ஆய்வும், விவாதமும் தேவை.

தொழில் துறையில் குறிப்பாக சிறு, குறுந் தொழில்களில் உள்ள தேக்க நிலையை எவ்வளவு தூரம் நாம் போக்கியிருக்கிறோம். இங்கு தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்களை எவ்வாறு நீக்கியிருக்கிறோம். இதற்கான பதில் அரசிடம் இருந்து வரும் போது, தொழில் முனைவோர் அதனை அமோதிக்கின்றனரா என்றும் பார்க்கவேண்டும்.

அரசு ஊழியர்களின் ஏழாவது சம்பள குழு பரிந்துரையை செயல்படுத்த எங்கிருந்து கூடுதல் நிதி வரும். மின்சார பகிர்வு கழகத்தின் கடன் சுமையை அரசு ஏற்றுகொண்ட பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் எவ்வாறு கழகத்தின் நிதி நிலையை சமன்படுத்தப்போகிறோம் என்ற பல கேள்விகளுக்கு பதில் வர காத்திருப்போம்?

- seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x