

சொகுசு கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அமெரிக் காவில் இந்நிறுவனத் தயாரிப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டி லும் அதிக புகையை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மறைப் பதற்காக சாஃப்ட்வேரில் தில்லு முல்லு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு முதல் 4.82 லட்சம் கார்களில் இத்தகைய தில்லுமுல்லு செய்துள்ளதாக நிறுவனமே ஒப்புக் கொண்டது.
இந்நிறுவனத்தின் ஜெட்டா, பீட்டில், பஸாட், கோல்ப் ஆகிய மாடல் கார் களில் இத்தகைய புகையளவு சோதனை சாஃப்ட்வேரில் மோசடி செய்திருப்பதை ஒப்புக் கொண்டது. சர்வதேச அளவில் நிறுவனத்துக்கு மிகப் பெரும் அவப் பெயர் ஏற்பட்டதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தலைவராக இருந்த வின்டர்கோன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதெல்லாம் பழைய கதை.
இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் மிகவும் பிரபலம். இங்கும் இதேபோன்ற மோசடி நிகழ்ந்துள்ளதா என அப்போதே கேள்விக் கணைகள் எழுந்தன. கார்கள் சோதனைக்கு உள்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் முடிவுகள் வர ஏறக்குறைய 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆம் இங்கே விற்பனையான கார் களிலும் இதேபோன்ற மோசடியை ஃபோக்ஸ்வேகன் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே தெரி வித்துள்ளார். அமெரிக்காவில் பயன் படுத்திய அதே உத்தியை இந்தியா விலும் இந்நிறுவனம் பயன்படுத்தி யுள்ளது தெரியவந்துள்ளதாக கீதே தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் கார்களிலிருந்து வெளியாகும் புகையளவு சோதனையை இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி அமைப்பு (ஏஆர்ஏஐ) மேற்கொண்டது. ஆலையில் தயாரான கார்களில் புகையளவு சோதனை செய்தபோது அது நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்தது. அதேசமயம் அந்த கார்கள் சாலைகளில் ஓடியபோது அதிக அளவில் புகையைக் கக்கியதை ஏஆர்ஏஐ கண்டுபிடித்தது.
பொதுவாக இந்தியாவில் புகையளவு சோதனை சட்டம் கடுமையாக இல்லை என்பது பரவலான கருத்து. இங்கு நிர்ணயிக்கப்பட்ட புகையளவு சோதனை அளவைக் காட்டிலும் 9 மடங்கு அளவுக்கு ஃபோக்ஸ்வேகன் கார்கள் புகையைக் கக்கியதாக ஏஆர்ஏஐ சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதை அமைச்சர் ஆனந்த் கீதே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
புகையளவை சோதிக்க இந்நிறு வனம் ஆலையில் தந்த கருவியில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பதும். பின்னர் அது அதிகரிப்பதும் எப்படி என்று ஃபோக்ஸ்வேகன் நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கீதே தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் கார்களின் புகையளவு சோதனையை ரகசியமாக மேற்கொண்ட ஏஆர்ஏஐ அமைப்பு இது தொடர்பான அறிக்கையை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத் திடம் சமீபத்தில் அளித்துள்ளது. அதில் விதிமீறல் இருப்பது தெரியவந்துள்ள தாக கீதே தெரிவித்தார்.
மன்னிப்பு
இதனிடையே இம்மாதத் தொடக் கத்தில் தங்கள் நிறுவன தயாரிப்பு மூலம் இந்தியாவில் தவறு புரிந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும் விற்பனை பிரிவுத் தலைவருமான ஜுர்கன் ஸ்டாக்மென் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் ஏஆர்ஏஐ வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம் வெளியிடவில்லை.
கடந்த டிசம்பரில் இந்நிறுவனம் ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி ரக மாடல்களில் மொத்தம் 3,23,700 கார்களை திரும்பப் பெற்றது. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையான காலத்தில் இவை தயாரிக்கப்பட்டவையாகும். இந்தக் கார்களில் உள்ள இஏ 189 ரக இன்ஜினில் மாறுதல்கள் செய்யப்பட்டதாக பின்னர் நிறுவனம் தெரிவித்தது.
விதிகளை மீறிய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கீதே உறுதிபட தெரிவித் துள்ளார்.
அமெரிக்காவில் இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது, இந்தியாவில் இதே விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது சரியான நடவடிக்கையாக இருக்குமா? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில் விதிகளை மீறும் நிறுவனம் மீது காலம் கடந்த நடவடிக்கையானாலும் கடுமையாக எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிற நிறுவனங்கள் விதிகளை மதித்து பின்பற்றும்.
- எம். ரமேஷ்
ramesh.m@thehindutamil.co.in