

சராசரியாக பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தை விட நிறுவனங்களின் தலைவர்கள்/சிஇஓக்களுக்கு சம்பளம் மிக அதிகமாக இருக்கும். தலைவர் பதவி என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி. சிஇஓ-களின் பதவி காலம் குறைவு, அவர்களின் பொறுப்பு மிக அதிகம் என்பதால் அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று காரணம் சொல்லப்படும்.
சிஇஒக்களின் பதவி காலம் குறைவு என்பது ஏற்கக்கூடியதாக இருந்தாலும் சிலர் நீண்ட காலம் தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் நிறுவனங்களின் தலைவர்களாக நீண்ட காலம் இருந்திருந்தாலும் அவர்கள் நிறுவனங்களை தோற்றுவித்தவர்கள் என்பதால் நீண்ட காலம் பதவியில் இருப்பது ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஆனால் புரபஷனல் சிஇஒ-வாக இருப்பவர்கள் நீண்ட காலம் தொடர்வது மிக குறைவே.
ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா பூரி, ஐடிசி தலைவர் ஒய்சி தேவேஷ்வர் போன்றோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருக்கிறார்கள். ஏஎம் நாயக் 17 வருடங்களுக்கு எல்அண்ட்டி நிறுவனத்தை வழி நடத்து கிறார். இது தவிர இன்னும் சில தலை வர் 10 வருடங்களுக்கு மேலாக நிறுவ னங்களை சிறப்பாக நடத்துகின்றனர்.
இதில் ஐடிசி நிறுவனத்தின் தேவேஷ்வர் வரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து தலைவர் பொறுப்பில் இருந்து தினசரி அலுவல்கள் இல்லாத தலைவராக மாற உள்ளார். அதேபோல எல் அண்ட் டியின் தலைவர் ஏஎம்.நாயக் 2017-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற இருக்கிறார்.
தலைவர் பதவியை நோக்கி செல்லுதலைவிட, அந்த பதவியை தக்க வைத்துகொள்வது மிகவும் கடினம். அந்த வகையில் இந்த தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்வது மிக சாதாரணமான வார்த்தையாக இருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் அந்த பதவியில் தொடர்கிறார்கள்.
தேவேஷ்வர்
1996-ம் ஆண்டு தேவேஷ்வர் தலைவராக பொறுப்பேற்கும் போது ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.5,200 கோடிக்கு கீழ்தான். ஆனால் இப்போது 10 மடங்காக உயர்ந்து ரூ.51,582 கோடியாக இருக்கிறது. தவிர இவரின் பதவி காலத்தில் ஐடிசி பங்கு ஆண்டுக்கு 23.3 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. சிகரெட் மூலம் அதிகம் வருமானம் பெரும் நிறுவனமாக இருந்ததை குறைத்து எப்எம்சிஜி, உணவு என பல வகையில் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். சிகரெட் அல்லாத எப்எம்சிஜியின் வருமானம் ரூ.10,000 கோடியாக இருக்கிறது. இதனை 2030-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்று தேவேஷ்வர் விரும்புகிறார்.
இவருக்கு பிறகு அடுத்த தலைவர் யார் என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யவில்லை என்றாலும் தற்போது செயல் இயக்குநராக இருக்கும் 53 வயதான சஞ்சய் பூரி அடுத்த தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. மேலும் 51-வயதான சுமந்த் (எப்எம்சிஜி பிரிவு தலைவர்) இந்த பட்டியலில் இருக்கிறார்.
ஏ.எம்.நாயக்
ஐடிசி நிறுவனத்தை கையாளுவதை விட கடினமானது எல் அண்ட் டி நிறு வனத்தை கையாளுவது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனம் என்பதை விட, 72 தொழில்பிரிவுகள் உள்ள நிறுவனத்தை கையாளுவதற்கு அதிக நேரமும், கடின உழைப்பையும் கொட்ட வேண்டி இருக்கும். கடந்த 17 வருடங்களாக இதனை செய்துவரும் ஏ.எம்.நாயக் எல் அண்ட் டி நிறுவனத்தில் 50 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்.
இவர் பொறுப்பேற்ற போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி. இப்போது சந்தை மதிப்பு 45 மடங்கு உயர்ந்துள்ளது. இவர் அடுத்த வருடம் ஓய்வு பெற்றாலும் வரும் 2021-ம் ஆண்டு வரைக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தயாராக வைத்திருக்கிறார்.
இவருக்கு அடுத்து யார் தலைவர் என்பதை இன்னும் முறையாக அறிவிக்கவில்லை என்றாலும் தற்போது துணை நிர்வாக இயக்குநராக இருக்கும் எஸ்.என்.சுப்ரமணியன் அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 வருடங்களாக இவர் எல் அண்ட் டியில் இருக்கிறார்.
இந்த தொழில்நுட்ப உலகில் தொழிலின் தன்மை நாளுக்கு நாள் மாறிவரும் சூழ்நிலையில் அதிக வருடங்கள் பெரிய நிறுவனங்களின் தலைவராக இருப்பது சவால்தான்.