

இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இனி சுற்றுச்சூழல் காப்பு மிகுந்த பேட்டரி வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் பிளாஷ், பெருமளவிலான வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பேட்டரி ஸ்கூட்டர்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பாஷ் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.
இந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர்கள் ஆண்டுக்கு 24 ஆயிரம் விற்பனையாகின்றன. 2017-ல் இந்த எண்ணிக்கையை 45 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு அரசு அளிக்கும் ஃபேம்-2 சலுகை விற்பனையை அதிகரிக்க உதவும் என ஹீரோ மோட்டோ கார்ப் உறுதியாக நம்புகிறது.
புதிதாக வரும் மாடல்கள் அனைத்துமே உயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் சில மாடல்களை மொபைல் மூலம் இயக்கும் வசதியும் இருக்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் இ-ஸ்கூட்டர் தயாரிப்புப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி சோகிந்தர் கில் தெரிவித்தார்.
பேட்டரி ஸ்கூட்டர் என்றாலே அதிலுள்ள பேட்டரியின் செயல்பாடுதான் பிரதான காரணியாக விளங்குகிறது. நிறுவனத் தயாரிப்புகள் அனைத்துக்குமே 3 ஆண்டு உத்தரவாதம் (பேட்டரி உள்பட) வழங்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான வேகத்தில் செல்லும் வகையில் வாகனங்கள் தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பிளாஷ் ஸ்கூட்டரில் அமில பேட்டரி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இனி வரும் மாடல்கள் அனைத்துமே லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக பேட்டரி வாகனங்களின் விலை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பராமரிப்பு செலவு கிடையாது. எரிபொருள் செலவு கிடையாது. அனைத்துக்கும் மேலாக இதைப் பயன்படுத்துவதன் மூலம் சூழலைக் காக்கிறோம் என்று அனைவரும் நினைக்க வேண்டும். அப்போது இதற்குக் கொடுக்கும் கூடுதல் தொகை சமூகத்தில் நமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். உண்மைதானே!.