

இதுநாள் வரை வங்கிக்கே செல்லாத வர்கள்கூட வங்கியில் கால் கடுக்க காத்திருக்க வைத்ததில் மோடிக்கு பெரும் பங்குண்டு. பண மதிப்பு நீக்க நடவடிக்கை முடி வுக்கு வந்தாலும் மக்களின் சிரமம் தீர வில்லை. வங்கியாளர்களின் வேலைப் பளுவும் குறையவில்லை.
நாடு முழுவதும் 1.30 லட்சத்துக்கும் அதிகமான வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளனர். கடந்த 50 நாளில் இவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், அதை சமாளித்த விதம் குறித்து அறிய சில வங்கியாளர்களிடம் பேசியதிலிருந்து புதிய தகவல்கள் கிடைத்தன. நன்மை கருதி வங்கி அதிகாரிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. வங்கிகளின் பெய ருக்குப் பதிலாக தனியார் வங்கி, அரசு வங்கி என இரண்டு பதங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் சம்பவங் கள் அனைத்தும் உண்மை. உண்மை யைத் தவிர வேறொன்றுமில்லை.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனியார் வங்கி மேலாளர் கஜன் சிங், கடந்த வாரம் தமிழகத்திற்கு தனது 5 வயது மகள், மனைவியுடன் சுற்றுலா வந்திருந்தார். அவரது அனுபவம்:
ஒரு நாள் கையில் பெட்டியோடு ஒரு பணக்காரர் வந்தார். சூட்கேஸில் ரூ.85 லட்சம் இருப்பதாகவும் இதை மாற்றித்தருமாறு கேட்டார். நாங்கள் மறுக்கவே அவர் கிளம்பி சென்றுவிட்டார். ஒரு டிராவல் ஏஜென்ட் 80 பாஸ் போர்டுகளை எடுத்து வந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உடனடியாக கணக்குத் தொடங்க வேண்டும் என்றும், அந்தக் கணக்கில் பணம் போட வேண்டும் என்றும் கூறினார்.
ஒரு தொழிலதிபர் இனோவா காரில் வந்திறங்கி, கார் முழுவதும் பணம் உள்ளது. அதில் உள்ள மதிப்புக்கு பாதித் தொகையை புதிய ரூபாய் நோட்டுகளாக அளியுங்கள். மீதியை கிளையில் உள்ளவர்கள் பிரித்துக் கொள்ளுங்கள் என்றார். அதையும் மறுத்து அனுப்பிவிட்டோம்.
எங்களது வங்கிக் கிளையில் பண பாதுகாப்பு பெட்டகத்தில் ரூ.14 லட்சத் துக்கு மேல் வைத்துக் கொள்ள முடி யாது. இதனால் அன்றாடம் வசூலாகும் தொகையை 200 மீட்டர் தூரத்தில் உள்ள பெரிய கிளையில் கட்ட வேண்டும். ஆனால் பணத்தை பெட்டிகளில் எடுத்துக் கொண்டு நடந்து போகக் கூடாது. இதற்காக ஒரு டாக்ஸியை வாடகைக்கு அமர்த்தி பல தடவை பணத்தை போய் கட்ட வேண்டியிருந்தது.
கடந்த 50 நாளில் எனது உடல் எடை 10 கிலோ குறைந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை முடி தென்படத் தொடங்கியுள்ளது. 33 வயதில் `இள நரை’ என்று கூறிக் கொள்ள வேண்டியதுதான் என்று ஹிந்தியில் கிண்டலாகக் கூறினார்.
ஜூலியன் ரொஸாரியோ, திருச்சி, தனியார் வங்கி
ஆரம்பத்தில் வங்கியில் பெருமளவிலான மக்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. மக்களிடம் அதிகமாக பணம் வரும்போது கள்ள நோட்டுகள் வரும் என்ற கவலையும் இருந்தது. ஏழை மக்களை ரூபாய் நோட்டுகள் மாற்ற சில தரகர்கள் பயன்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. சிலர் பள்ளி மாணவர்களையும் பயன்படுத்தினர். ``அந்த அண்ணன் 200 ரூபாய் தருவதாகக் கூறினார் அதனால் வந்தோம்,’’ என்று கூறிய மாணவர்களை விரட்டியடித்தோம். சிலர் அதிக அளவி லான ரொக்கத்தை மாற்றித் தர வேண் டும் என கேட்டனர். ஆனால் அது முடி யாது என மறுத்துவிடவே அவர்கள் என்று வலியுறுத்தாமல் சென்று விட்டனர்.
குமார் (வழக்கமாக குறள் இனிது பகுதியில் இடம்பெறும் பெயர்), தனியார் வங்கி சென்னை
பெருமளவிலான மக் களை சமாளிப்பதுதான் பெரும் பிரச் சினையாக இருந்தது. கள்ள நோட்டு களைக் கண்டுபிடிக்க அல்ட்ரா வயலட் விளக்கு, அதற்குரிய கருவி ஆகிய வற்றை கூடுதலாக அளிக்கவில்லை. செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக் கில் பணத்தை செலுத்த வந்த பொதுமக் களை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது. அவர்களிடம் பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங் களைக் கேட்டு கேஒய்சி படிவம் தயார் செய்வதற்குள் அவர்கள் கோபமாக பேசுவர், சிலர் ஆத்திரத்தில் ``எங்கள் பணத்தை எடுக்க முடியாமல் தடுக்க நீ யார்?’’ என்று ஒருமையில் கத்துவர். பணத்தை வைக்கும் பெட்டக வசதி இல்லாததால் தினசரி பெரிய கிளை யில் வங்கியில் வசூலான பணத்தை செலுத்த வேண்டியிருந் தது. பணத்தை மாற்றித் தந்தால் கமிஷன் தருவதாக சிலர் தொலைபேசி யில் கேட்டனர். மறுத்துவிடவே யாரும் வரவில்லை. 20 நாளைக்குத்தான் சிரமமாக இருந்தது. பிறகு கை விரலில் மை வைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு கூட்டம் குறைந்தது. தெய்வாதீனமாக எங்கள் கிளையில் ஒரு கள்ள நோட்டு கூட வரவில்லை.
மோகன், திருச்சி, பொதுத்துறை வங்கி
அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபம் வங்கியாளர்கள் மீது பாய்ந்தது. திருமணம், மருத்துவ தேவை, அன்றாட தேவை என பலதரப்பட்ட மக்கள் வங்கி யில் குவிந்தனர். பழைய நோட்டுகளை வாங்குவது முடிந்தாலும் இன்னமும் வங்கியிலிருந்து எடுக்கும் பணத்துக்கு உச்ச வரம்பு வைத்திருப்பது பொது மக்களுக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால் காரசாரமான விவாதம் நடக்கிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் வந் துள்ளன. 100 ரூபாய்க்கு மிகுந்த தட்டுப் பாடு நிலவுகிறது. இப்போது 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந் தியை கிளப்பி விட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் 10 ரூபாய் நாணயமாக வந்து குவிகிறது. நாங்கள் திரும்ப அளித்தால் வாங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தெளிவான அறிக்கை வெளி யிடாவிட்டால் பிரச்சினை தீவிரமடையும்.
வங்கியின் வழக்கமான பணிகள் முற்றிலுமாக நடக்காததால் வாராக் கடன் அளவு நிச்சயம் அதிகரிக்கும். கடனை திரும்ப செலுத்துவார்கள் என்ற நினைக்கும் சிலர் கூட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை காரணமாகக் கூறுகின்ற னர். வங்கிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. திருமணத்துக்கு ரூ.2 லட்சம் எடுப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். இதற்கென்ற சிறப்பு வழியின்படி உரிய தகவலை பூர்த்தி செய் தால் மணமக்களின் பான் விவரத்தையும் கேட்கிறது கம்ப்யூட்டர். இதனால் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை.
50 நாள் முடிந்துவிட்டது. ஆனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீடிப்ப தால் பிரச்சினை தொடர்கிறது. நவம்பர் மாதத்திலிருந்து டெபாசிட் அதிகமாக இருந்தது. இப்போது பணத்தை திரும்ப எடுப்பது அதிகமாக உள்ளது. பண மதிப்பு நீக்கம் பொதுமக்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளதோ அதை விட பல மடங்கு மன உளைச்சலை வங்கியாளர்களுக்கு அளித்துள்ளது என்பதுதான் உண்மை.
துரை, திருப்பூர், பொதுத்துறை வங்கி
ஆயிரம் ரூபாய் நோட்டை எண்ணிப் பழகிய காசாளர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கையாண்டபோது முதலில் சிலருக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு 4 இரண்டாயிரம் தாள்களை அளித்து கையை சுட்டுக் கொண்ட அனுபவம் சில நாள்கள் நடந்தது. ரூ. 100 நோட்டுகளே கிடையாது. புதிய 500 ரூபாய் தாள்களும் போதிய அளவு சப்ளை ஆகவில்லை. வாடிக்கையாளர் மத்தியில் வங்கியாளர் அனைவருமே இந்த கால கட்டத்தில் விரோதிகளாகத்தான் தெரிந்தோம். வழக்கமாக நகைக் கடன் வழங்கும் நடவடிக்கை முற்றிலுமாக முடங்கியது.
இந்த கால கட்டத்தில் பல பொதுமக் கள் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாக வட்டி கூடுதலாக இருந்தாலும் நகைக் கடன் பெற்றுள்ளனர். நவம்பர் 10-க்கு முன்பாக எங்கள் கிளையில் காலை 11 மணிக்குள் ரூ.1.5 கோடி அளவுக்கு பணம் டெபாசிட் ஆகும். ஆனால் இப்போது இதில் 10% கூட டெபாசிட் ஆவதில்லை. அதேசமயம் காசோலை மூலமான பரிவர்த்தனை சற்று அதிகரித்துள்ளது. கடந்த 50 நாளில் வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய எந்த பணியும் நடக்கவில்லை. நாள்தோறும் இன்று எவ்வளவு 2,000 ரூபாய் நோட்டுகளை தவறவிடுவோம் என்ற பீதியில்தான் பணியாற்றினோம்.
முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல், தினசரி புதுப்புது அறிவிப்புகளை ஆர்பிஐ யும், அரசும் வெளியிட்டு பொதுமக்களை மட்டுமல்ல வங்கியாளர்களையும் அலைக்கழித்து விட்டது.
- vanigaveedhi@thehindutamil.co.in