

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் குறள் 504. |
சிபில் புள்ளிகள் (cibil score) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? வங்கிக் கடனுக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் எனக் காட்டும் குறியீடு இது.
உங்களது புள்ளிகள் எத்தனை என்று இதுவரை அறிந்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்? 1000 க்கு 700க்கு மேல் இருந்தால் கடன் வாங்குவது எளிதாக இருக்கும்.
சிறு தொழில்களுக்கு, வணிகத்திற்கு வங்கிக் கடனுக்காக விண்ணப்பம் செய்பவரிடம் நிறைகுறைகள் இருக்கவே செய்யும். அவர் நன்கு படித்திருக்கலாம். ஆனால், அனுபவம் இல்லாதிருக்கலாம். தேவையான முதல் போடக்கூடியவராக இருக்கலாம்.
ஆனால் அடமானம் கொடுக்க சொத்து இல்லாதவராக இருக்கலாம். அவருடைய தொழிலில் போட்டி குறைவாக இருக்கலாம். ஆனால் தொழில் நுட்பம் அடிக்கடி மாறுவதாக இருக்கலாம் என்ன உங்களுக்குத் தலை சுற்றுகிறதா? அவர் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டால் கொடுப்பீர்களா, மாட்டீர்களா? வங்கியில் ஒவ்வொரு கடன் விண்ணப்பதாரரிடமும் இப்படித்தான் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும்.
அவைகளை சீர்தூக்கி பார்த்துதான் கடன் கொடுக்கவேண்டியிருக்கும். எனவே வங்கிகள் ரிஸ்க் ரேட்டிங் மாடல்கள் வைத்துள்ளார்கள்.
அவற்றில் பொதுவான நிறைகள் என்ன குறைகள் என்ன எனப் பட்டியலிடப்பட்டிருக்கும். பின்னர் அவைகளுக்கு என்ன விகிதாச்சாரத்தில் மதிப்பெண்கள் கொடுப்பது என முடிவு செய்வார்கள்.
முடிவாக ஒரு மதிப்பெண்ணும் அதைச் சார்ந்த ரேட்டிங்கும் கணக்கிடப்படும். உங்கள் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடனுக்கும் அப்படித்தான்.
ஐயா வேலைக்கு புதிதாக ஆள் எடுப்பதிலும் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதிலும் இதே கதைதானே? பத்து பேரில் மூன்று பேரை எடுக்கவேண்டுமென்றால் எப்படி முடிவு செய்வீர்கள்.
ஒருவர் மெத்த படித்தவராக இருப்பார், இன்னொருவர் பழுத்த அனுபவசாலியாக இருப்பார். முன்னவருக்கு பிரச்சினைகளை நேரடியாகக் கையாண்ட அனுபவம் இருக்காது. பின்னவருக்கு கணினி தொழில்நுட்ப அறிவு குறைவாக இருக்கும்.
நாம்தான் வேலையின் தன்மையை பொறுத்து முடிவு செய்யவேண்டும்.
எல்லா முடிவுகளுமே முடிவில் ஆமாம் இல்லை என்பதுதான் என்பார்கள். நமது உண்மையான தேவை என்ன என்று தெரிந்து விட்டால் முடிவெடுப்பது எளிதாகிவிடும். ஆள் எடுப்பது விற்பனை துறைக்கா, நிதி துறைக்கா, மனித வளத்துறைக்கா என்பதைப் பொறுத்து தேவை மாறுபடுமில்லையா? பீட்டர் ஷூல்ட்ஸ் சொல்வது போல நாணயமானவர்களைத் தேர்ந்தெடுங்கள்.
பின்னர் திறமைகளுக்கு வேண்டிய பயிற்சி அளியுங்கள். ‘ஒருவரை பணியமர்த்தும் முன்பு அவரது நற்குணங்களையும் குறைபாடுகளையும் ஆராய வேண்டும்; பின்னர் குற்றம் குறைவாகவும் குணம் அதிகமாகவும் இருப்பவரை பணியமர்த்தவேண்டும்’ என்கிறார் வள்ளுவர்.
உலகில் குணம் குற்றம் என்ற இரண்டில் ஒன்றை உடையவர் யாருமில்லை என்று உரை எழுதினார் பரிமேலழகர். இதையே தற்காலத்திய ஹென்றி போர்டும் ‘நான் இதுவரை முழுவதும் கெட்டவராக இருக்கும் எவரையும் பார்த்ததில்லை.
வாய்ப்பு கொடுத்தால் அவரிடம் உள்ள நல்லது வெளிவரும்’ என்கிறார். இதுபோல நன்மை தீமைகளை ஆராய்வது என்பது வீடு வாங்குவது, வேலைக்குச் சேர்வது என எல்லாவற்றிக்கும் பொருந்துமில்லையா?
சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com