

விமானம் எப்போதும் பிரமிப்பை தருவது. எப்படியாவது ஒரு முறையேனும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாக முன்பு இருந்தது. இன்று சாதாரண நடுத்தர மக்களும் எளிதாக பயணிக்கும் அளவிற்கு இந்திய விமானத்துறை வளர்ந்து இருக்கிறது. தற்போது மத்திய அரசு விமான போக்குவரத்து துறை கொள்கைகளை அறிவித்துள்ளது.
இதில் ஒரு மணி நேரத்திற்கு குறைவான பயண நேரம் கொண்ட விமான போக்குவரத்து சேவைக்கு 2,500 ரூபாய்க்கும் குறைவாக வசூலிக்க ஆணையிட்டுள்ளது. மேலும் பல்வேறு விமான நிறுவனங்கள் விமான போக்குவரத்திற்கு சலுகை கட்டணத்தை அறிவிக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் நடுத்தர மக்களும் விமான போக்குவரத்தை பயன்படுத்துவது அதிகமாகும். இன்னும் இது போன்ற முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். இந்திய விமான போக்குவரத்து துறையை பற்றிய சில தகவல்கள்…
1911 இந்தியாவில் விமான சேவை தொடங்கப்பட்ட ஆண்டு 1911. முதல் பயணிகள் விமானம் அலகாபாத் மற்றும் நயினிக்கும் இடையே விடப்பட்டது. இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் ஆறு கிலோ மீட்டர்.
1912-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தினர் தினந்தோறும் கராச்சிக்கும் மெட்ராஸுக்கும் இடையே ஏர் மைல் சேவையை ஆரம்பித்தனர். இதுவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது விமான நிறுவனம்.
உலகத்திலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு ஜாக்ஸன் அட்லாண்டா இண்டர்நேஷனல் விமான நிலையம். ஆண்டுக்கு இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 9,54,62,867 டெல்லி விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.5 கோடி முதல் 4 கோடி பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் 58 உள்நாட்டு முனையமும் 62 பன்னாட்டு முனையமும் உள்ளன. இங்கு ஒரு மணி நேரத்திற்கு 73 விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்தியாவில் மிக பரபரப்பான விமான நிலையம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்.
இந்திய விமான போக்குவரத்து துறை 17 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது.