

தற்போதைய சூழலில் 50 வயது வரை வாழ்வதே போராட்டமாக இருக்கும்போது, ஒரு நிறு வனத்தை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருவது என்பது சாதாரணம் அல்ல. அதனை சிறப்பாக செய்து வருகிறார் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி.
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத் தில் பிரேம்ஜி படித்துக்கொண்டிருக் கும் போது அவர் அப்பா மறைந்த செய்த செய்தி கிடைத்தது. இந்தியா வந்த அவர் மீண்டும் படிக்கச் செல்லவில்லை. 21-வயதில் நிறுவனத்தை எடுத்து நடத்துவது என்பது குருவித் தலையில் பனங் காய் வைப்பதைப் போன்றதுதான். ஆனாலும் வேறு வழியில்லை. தொழி லுக்கு வந்தார், வெற்றிகண்டார். இப் போது விப்ரோ என்பது ஐடி நிறுவ னமாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் 1966-ம் ஆண்டு நிறுவனத் தின் தலைவராக பொறுப்பேற்ற சமயத்தில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் வெஸ்ட்ரன் இந்தியா புராடக்ட்ஸ் நிறுவனம் மட்டுமே.
சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்த விப்ரோ இப்போது பலவிதமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. 1977-ம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை விப்ரோ புராடக்ட்ஸ் என மாற்றினார். 1980-களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் களம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து பிபிஓ, இன்போடெக், சிஸ்டம்ஸ், பர்சனல் கம்ப்யூட்டர்ஸ் என விப்ரோ வின் தளத்தை விரிவாக்கிக் கொண்டே இருந்தார். விப்ரோ நிறுவனத்தில் இவர் வசம் 75 சதவீத பங்குகள் உள்ளன.
சர்வதேச அளவில் தொழில்நுட்பத் துறையில் கோடீஸ்வரர்கள் என்னும் பட்டியலை சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்டது. இதில் இரண்டு இந்தி யர்கள் உள்ளனர். ஒருவர் அசிம் பிரேம்ஜி, மற்றொருவர் ஹெச்சிஎல் ஷிவ் நாடார். அசிம் பிரேம்ஜி இந்த பட்டியலில் 13-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1,600 கோடி டாலர்கள் ஆகும்.
சொத்து மதிப்பு பட்டியலில் இருக்கும் அதே சமயத்தில் கொடை யாளிகள் பட்டியலிலும் பிரேம்ஜி இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு பிரேம்ஜி 27,514 கோடி ரூபாயை கொடையாக வழங்கி இருக்கிறார். இந்திய அளவில் அதிகளவு சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக செலவிட்டவரும் இவரே.
1980-களில் சாப்ட்வேர் பிரிவை தொடங்க முயற்சித்தார். அப்போது அதற்கு தலைமை வகிக்க சரியான நபர் ஒருவரை தேடிக்கொண்டிருந் தார் பிரேம்ஜி. பட்னி நிறுவனத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து, இந்த துறை மற்றும் வாய்ப்பு குறித்து பிரேம்ஜி நீண்டநேரம் விவாதித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு அந்த வேலைவாய்ப்பை வழங்கவில்லை அசிம் பிரேம்ஜி. அது ஒருபுறம் இருக்க, விப்ரோவில் இருந்து வெளியேறிய நண்பர்கள் தொடங்கியதுதான் மைண்ட்ட்ரீ என்னும் ஐடி நிறுவனம்.
10 தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்ந்து 1999-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். இதில் அசோக் சூடா, சுப்ரதோ பக்ஷி, கிருஷ்ணகுமார், ஜானகிராமன் உள்ளிட்டோர் விப்ரோவில் இருந்து விலகி சென்று புதிய நிறுவனத்தை தொடங்கினார்கள்.
ஆரம்ப காலத்தில் பட்னி நிறுவனத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து பேசிக்கொண்டிருந்து விட்டு பின்பு வேலை வழங்காமல் விட்டாரே அவர்தான் பின்னாளில் இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கிய நாராயணமூர்த்தி. பிரேம்ஜி செய்த பிழைகளில் முக்கியமானது நாராயணமூர்த்தியை கணிக்க தவறியது. எனினும் இதன் மூலம் இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் நாராயணமூர்த்தியின் இடத்தை எழுதச் செய்ததும் இவர்தான் என்பது முக்கியமானது.