

கடந்த வாரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்ட அறிக்கை அந்த வங்கியின் 37 கோடி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏடிஎம்-ல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்பிஐ அறிவித்தது. ஆனால் சுதாரித்துக்கொண்டு, அந்த அறிவிப்பை மாலையே திரும்பபெற்றது. தவறுதலாக அறிவிப்பு வெளியாகிவிட்டது என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில் இப்படி ஒரு தவறு எப்படி ஏற்படும்?
எஸ்பிஐ திருத்திக் கொண்டுவிட்டது. ஆனால் மற்ற வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவது போல இந்த அறிவிப்பு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்கே வரவேண்டாம் என்பதற்காக ஏடிஎம் கொண்டுவரப்பட்டதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இப்போது ஏடிஎம் பயன்பாடு அதிகரித்த பிறகு அதற்கு கட்டணம் விதிக்கும் எண்ணம் எதற்காக.? பொதுவாக தொழில்நுட்பத்தை சார்ந்த கட்டணங்கள் குறைந்து வரும் சூழலில், அனைத்து விதமான சேவை கட்டணங்களை எதற்காக உயர்த்த வேண்டும்.?
குறைந்தபட்ச கட்டணம்?
அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும் என முடிவெடுத்தன. ஆனால் எஸ்பிஐ வங்கி கடந்த 2013-ம் ஆண்டு குறைந்த பட்ச இருப்பு தொகை ஏதும் வைத்திருக்க தேவையில்லை என முடிவெடுத்தது. ஆனால் மீண்டும் கடந்த ஏப்ரல் முதல் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வங்கி கிளைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
மற்ற வங்கிகளின் காசா விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் காசா விகிதத்தை உயர்த்துவதற்காக குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கிறது. இதையாவது ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில் காசா விகிதம் 46 சதவீதம் இருக்கும் நிலையில், குறைந்தபட்ச கட்டண கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமா?
நகர்ப்புற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்னும் முடிவுக்கு எஸ்பிஐ வந்திருக்கிறதா? ஜன் தன் கணக்குகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றாலும் ஏற்கெனவே நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நடுத்தர மக்கள் அதனை ஜன்தன் கணக்காக மாற்ற முடியாது. இதற்காக அதே வங்கியில் புதிய கணக்கையும் தொடங்க முடியாது.
மற்ற கிளைகளில் டெபாசிட்?
வங்கி கணக்கு இல்லாத வேறு கிளையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. அனைத்து வங்கி கிளைகளும் இணைக்கப்பட்ட பிறகு இதுபோன்ற கட்டணங்களை வங்கிகள் எதற்காக விதிக்க வேண்டும்? பணம் எடுத்தால் கட்டணம், டெபாசிட் செய்தால் கட்டணம் என ஒவ்வொன்றும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் சேமிப்புகளை திரட்டுவது, அதனை வைத்து கடன் கொடுப்பது இதுதான் வங்கிகளின் பணியாக இருந்தது. இதில் கிடைக்கும் வட்டி மட்டுமே வங்கிகளுக்கு பிரதான வருமானமாக இருந்தது. வங்கிகளின் நிதி நிலையை அறிக்கையை பார்த்தால், வட்டி வருமானம் மற்றும் இதர வருமானம் என இரு பிரிவு இருக்கும். இதில் இதர வருமானத்தின் பங்கு உயர உயர பாதிக்கப்படுவது சாதாரண வாடிக்கையாளரே.